எஞ்சியிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சியில் - தரைப்படைத் தலைமையகம் அறிவிப்பு
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மேல்மாகாணத்தில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாகத் தெரிவித்திருக்கும் படைத் தலைமையகம், எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் கொழும்பில் நடைபெறவிருக்கும் சிறிலங்கா தரைப்படையின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகளுக்கு சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செயய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவி்த்திருக்கின்றது.
தரைப்படையின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பண்டாரநாயக்க நினைவான அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் ஒக்ரோபர் மாதம் 3 ஆம் நாள் தொடக்கம் 7 ஆம் நாள் வரையில் நடைபெறவிருக்கும் கண்காட்சி மற்றும் 17 ஆம் நாள் தொடக்கம் 23 ஆம் நாள் வரை நடைபெறவிருக்கும் தரைப்படையினரின் சாகச மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் என்பவற்றுக்கே இந்த சிறப்புப் பாதுகாப்பை வழங்குவதற்கு தரைப்படையின் தலைமையகம் தீர்மானித்திருக்கின்றது.
இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட தரைப் படைக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா குறிப்பிட்டதாவது:
“நாம் வடக்கில் சிறப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு நிறைவு செய்திருக்கின்றோம். அதேபோல மேல் மாகாண மக்களைப் பாதுகாக்க வேண்டியதும் எமது பொறுப்பாகும். இந்நிலையில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களில் சிலர் மேல் மாகாணத்தில் தடங்கல்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கின்றது.
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அழிக்கப்பட்டுவிட்டாலும், அவர்களின் தற்கொலைப் படையைச் சேர்ந்த சிலரும் அவர்களை வழிநடத்துபவர்கள் சிலரும் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் எஞ்சியிருக்கின்றார்கள்.
காவல்துறையினரும் படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது கைப்பற்றப்பட்ட தற்கொலை அங்கிகள், உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களில் இருந்து இது புலனாகின்றது.
இந்நிலையிலேயே தரைப் படையினரின் சாகச நிகழ்வுகளும், கண்காட்சியும் இடம்பெறவிருக்கின்றன. எனவே அரச நிகழ்வுகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை இதற்கும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.” என்றார் அவர்.








0 Response to "எஞ்சியிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சியில் - தரைப்படைத் தலைமையகம் அறிவிப்பு"
แสดงความคิดเห็น