jkr

இலங்கைக்கான இரண்டாம் கட்ட கடன் ஒக்டோபர் நடுப்பகுதியில் வழங்கப்படும் : சர்வதேச நாணய நிதியத்தியம்


இலங்கையின் பொருளாதார நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். தற்போதைய நிலைமையில் நாட்டின் பொருளாதார நிலைமை திருப்திகரமாக அமைந்துள்ளது. இதனடிப்படையில் இன்னும் சில வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கூடி இலங்கைக்கான கடனின் இரண்டாம் தவணைப்பணத்தை ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் வழங்குவதற்கான தீர்மானத்தை எடுக்கும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதிய குழுவின் பிரதிநிதி கலாநிதி பிறையன் ஏய்ட்கன் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலகம் ஒன்று இன்னும் சில வாரங்களில் இலங்கையில் அமைக்கப்படும். மேலும் நாணய நிதியம் 2.6 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதில் எந்தவிதமான மறைக்கப்பட்ட நிபந்தனைகளும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் விசேட குழு நாட்டின் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மத்திய வங்கயில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தியது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே குழுவின் பிரதிநிதி கலாநிதி பிறையன் ஏய்ட்கன் இந்த விடய“ங்களை குறிப்பிட்டார்.

செய்தியாளர் மாநாட்டில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 2.6 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கு கடந்த ஜூலை மாதம் தீர்மானித்த நிலையில் அது தொடர்பான மீளாய்வு குறித்து ஆராய்வதற்காக நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது. இந்த குழுவில் பல உறுப்பினர்கள் இடம்பெறுகின்றனர். கடந்த எட்டாம் திகதியிலிருந்து நாங்கள் மீளாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தோம். அடுத்துவரும் 18 காலப்பகுதியில் நாங்கள் காலாண்டுகளில் இவ்வாறான மீளாய்வுகளை நடத்தவேண்டியுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மதிப்பிடல், உடன்படிக்கையின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதில் உள்ள முன்னேற்றங்கள் போன்றவற்றை மீளாய்வு செய்யவேண்டியுள்ளது. எமது விஜயத்தின்போது நாங்கள் மத்திய வங்கி, நிதியமைச்சு, வர்த்தக சமூகம், அமைச்சுக்கள், சமூக அமைப்புக்கள், தனியார் துறை வர்த்தக சமூகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுநடத்தினோம். இலங்கையின் தற்போதைய பொருளாதார அபிவிருத்திகள் எதிர்பார்க்கப்பட்டதையும் விட வலுவானதாக காணப்படுகின்றன. திருப்திகரமாக அமைந்துள்ளன. பணவீக்கம் குறைந்த மட்டத்தில் காணப்படுவதுடன் ஏற்றுமதியிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் ஒற்றை இலக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் கொள்கை நடைமுறைகள் நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்த விடயங்களுடன் ஒன்றிப்போயுள்ளதை காணமுடிகின்றது. இது தொடர்பில் திருப்தியடையலாம். கடந்தகாலங்களில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வினால் இலங்கை அசௌகரியங்களை எதிர்கொண்டதையும் நாம் பார்க்கவேண்டும். நாட்டின் வெளிநாட்டு சொத்துக்களின் பெறுமதி உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றது. மேலும் வட்டி வீதங்களை குறைப்பதற்கு மத்திய வங்கி எடுத்த தீர்மானங்களும் வரவேற்கத்தக்கன.

இதேவேளை 2009 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 வீதமாக அமையவேண்டும். அதாவது கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் அடிப்படையிலேயே இவ்வருட இறுதியில் பற்றாக்குறை 7 வீதமாக காணப்படவேண்டும். எனினும் 2010 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத்திட்டத்தின் பற்றாக்குறை 6 வீதமாக இருக்கவேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம். மேலும் நாட்டின் வரி நிர்வாகத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முக்கியமாக வரி ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளதை குறிப்பிடலாம். எமது மீளாய்வு முடிந்துள்ள நிலையில் நாங்கள் வாஷிங்டனுக்கு திரும்பிச் செல்கின்றோம். ஆனால் இன்னும் சில வாரங்களுக்கு இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் கண்காணிப்போம். இவ்வாறான திருப்திகரமான நிலைமை தொடருமானால் நாங்கள் எமது பரிந்துரையை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக்கு வழங்குவோம்.

இந்நிலையில் இலங்கைக்கõன கடனின் அடுத்த தவணைப்பணத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில் வழங்குவதற்கõன தீர்மானத்தை நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை எடுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். அதாவது எமது பரிந்துரைகளைக்கொண்டே பணிப்பாளர் சபை தவணைப்பணத்தை வழங்குவதற்கான தீர்மானத்தை எடுக்கும்.

பொருளாதார வளர்ச்சி வீதத்தை இலங்கை முறையாக பராமரித்துச் செல்கின்றது. தற்போதைய நிலைமையில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றல், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றல் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் போன்றவற்றை நாங்கள் பார்க்கவேண்டும். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதில் எந்தவிதமான மறைக்கப்பட்ட நிபந்தனைகளும் உள்ளடக்கப்படவில்லை என்பதனை தெரிவிக்கின்றேன். மறைக்கப்பட்ட நிபந்தனைகளை மேற்கொள்ளும் கொள்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இல்லை என்பதனை கூறவேண்டும். நாணய நிதியம் மிகவும் வெளிப்படையான முறையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் தங்க விற்பனை விவகாரம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அது எமது விவகாரத்துக்குட்பட்ட விடயமும் அல்ல. அது தொடர்பில் மத்திய வங்கியுடன் எவ்விதமான பேச்சுக்களையும் நாங்கள் நடத்தவில்லை.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இலங்கைக்கான இரண்டாம் கட்ட கடன் ஒக்டோபர் நடுப்பகுதியில் வழங்கப்படும் : சர்வதேச நாணய நிதியத்தியம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates