பொன்சேகாவின் ராஜினாமா கடிதத்தை உடன் ஏற்கத் தயார் : ஜனாதிபதி தெரிவிப்பு

கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவின் ராஜினாமா கடிதத்தை உடனடியாக ஏற்றுக் கொள்வதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராஜினாமா கடிதம் கிடைத்த அரை மணித்தியாலத்திற்குள் அக்கடிதத்திற்குப் பதிலையும் அனுப்பி வைப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நோக்கில், ஜெனரல் சரத்பொன்சேகா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினால் அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு பதிலளிக்குமாறும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்பில் பலரும் கேள்வி எழுப்புகின்ற நிலையில் எந்த சவாலுக்கும் முகம் கொடுப்பதற்குத் தான் எந்நேரமும் தயாராகவே இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒளிபரப்பான தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் ஜனாதிபதியிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு,
"ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ உயரதிகாரியாக கடமையாற்றுகின்றார்" என்று பதிலளித்திருந்த நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பொன்சேகாவின் பதவிக் காலத்தை நீடிப்பது தொடர்பில் அரசாங்கம் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என்று பாதுகாப்பு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்திருந்தது. அதேநேரம், ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக அவரை களமிறக்குவதற்கு எதிர்க்கட்சிகள் கலந்தாலோசித்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.







0 Response to "பொன்சேகாவின் ராஜினாமா கடிதத்தை உடன் ஏற்கத் தயார் : ஜனாதிபதி தெரிவிப்பு"
แสดงความคิดเห็น