தோட்டத்தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளம் வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை, தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இன்று கொட்டகலை காங்கிரஸ் தொழில் நுட்ப நிறுவனத்தில் இடம்பெற்றது. அதன்போது, தொழிற்சங்கங்கள் முன்வைத்த 500 ரூபா தினசரி சம்பள உயர்வு கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் ஏற்றுக் கொள்ள மறுத்ததை அடுத்து, தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்து ஆறுமுகன் தொண்டமானின் ஊடகப் பேச்சாளர் ஏ.பி. சக்திவேல் தெரிவித்துள்ளார். இன்றைய பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் இ.தொ.கா. சார்பில் அதன் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.கா. தலைவரும் பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம், பிரதியமைமச்சர் எஸ். ஜெகதீஸ்வரன், தேசிய அமைப்பாளர் ஆர். யோகராஜன் ஆகியோரும் இ.தே.தோ.தொ. சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே. வேலாயுதம் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எஸ். ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். பேச்சுவார்த்தையின் போது தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட 500 ரூபா தினசரி சம்பளக் கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் ஏற்றுக் கொள்வதில் இழுபறிநிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எதிர்வரும் தீபாவளிப் பண்டிகைக்கு முன்னர் சம்பள உயர்வுக்கான தீர்க்கமான முடிவு முதலாளிமார் சம்மேளனத்தால் முன்வைக்கப்படாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டத்தில் இறங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 Response to "தோட்டத்தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளம் வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுப்பு"
แสดงความคิดเห็น