jkr

தமிழக மீனவர்களை குறிவைக்கும் இலங்கை கடற்படை: புலிகள் ஆதரவு மீண்டும் தலைதூக்கும் 'அபாயம்'


முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மறைவுக்கு முன், தமிழக கடலோர கிராமங்களில், தீவிர விடுதலைப் புலிகள் ஆதரவும், பாசமும், தமிழக மீனவர்களிடையே இருந்து வந்தது. ராஜிவ் காந்தியின் கொடுமையான மரணத்திற்கு பிறகு, பெரும்பாலான தமிழக கடலோர மீனவ கிராமங்களில், விடுதலைப் புலிகள் ஆதரவு குறைந்து போனது.மீனவர்கள், விடுதலைப் புலிகளை தங்கள் இனமாகவும், உறவாகவும் கருதி செய்து கொண்டிருந்த உதவிகளும் குறைந்தன.கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் படகுகள் ஒன்றிரண்டு, எல்லை தாண்டும் நிலையில் மட்டுமே, இலங்கை கடற்படை தாக்குதலுக்கும், நடவடிக்கைக்கும் ஆளாகின.இலங்கை கடற்படை, விடுதலைப் புலிகளை அழிக்கவும், கட்டுப்படுத்தவும், தாக்குதலை சமாளிக்கவும் முழு மூச்சில் இருந்ததால், தமிழக மீனவர்கள் மீது கவனம் திரும்பவில்லை.தற்போது, விடுதலைப் புலிகள் பெருமளவில் ஒழிக்கப்பட்ட நிலையில், பிரபாகரன் மரணத்திற்கு பின், கடல் பகுதிகளில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் முற்றிலும் இல்லை. கடற்புலிகள் நடமாட்டத்தாலும், தாக்குதலாலும் பாதிப்பிற்குள்ளான இலங்கை அரசு, கடற்படையை பலப்படுத்தி, பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் முழு சுதந்திரத்தை கடற்படைக்கு வழங்கியது.தற்போது, புலிகளின் நடமாட்டம் இல்லாமலிருந்தும், கடலில் வலம் வரும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர், எதிரிகளாக நினைத்து தாக்குவது தொடர்கிறது.இலங்கை கடற்படை - விடுதலைப் புலிகள் மோதல் திசை மாறி, தமிழக மீனவர்கள் - இலங்கை கடற்படை மோதலாக உருமாறி வருகிறது. இலங்கை கடற்படையின் அத்துமீறலால், தமிழக மீனவர்கள், விடுதலைப் புலிகள் தங்களுக்கு அரணாக இருந்து வந்ததாக நினைத்து, மீண்டும் புலிகள் மீது இரக்கமும், பாசமும், பரிவும் காட்டத் துவங்கியுள்ளனர்.இதன் காரணமாக, தமிழக கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் அதைச் சார்ந்த நகரங்களில், பிரபாகரன் ஆதரவு பெருகி வருவதும், இதற்கு சில புலி ஆதரவு பிரமுகர்கள், அரசியல்வாதிகள் உரமேற்றி வருவதும், மறைமுகமாக தொடங்கியுள்ளது. இலங்கை கடற்படை அட்டூழியத்தை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராவிட்டால், மீண்டும், தமிழக கடலோரங்களில் இருந்து விடுதலைப் புலிகள் ஆதரவு எழும் அபாயம் உள்ளது.ஓய்வெடுக்கும்உளவுத்துறை: இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் மோதல் நடந்து கொண்டிருந்த போது, தமிழக மீனவ கிராமங்களில் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஐ.பி., கியூ பிரிவு மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி., போலீசார், விடுதலைப் புலிகள் ஒழிப்பிற்கு பிறகு, தங்கள் வேலை முடிந்து விட்டதாக, மீனவ கிராமங்களில் தொடர்பை துண்டித்து விட்டனர்.வி.ஐ.பி.,களின் வருகையை மட்டும் அரசுக்கு தெரிவிப்பதோடு கடமை முடிந்து விட்டதாக எண்ணி, தலையெடுக்கும் தலைவலியைப் பற்றி சிந்திக்காமல், "ஹாயாக' ஓய்வெடுத்துக் கொண்டுள்ளனர். அதிகாரிகள் உளவுத்துறையினரை தட்டி எழுப்ப வேண்டியது மிகவும் அவசியம்.
-நமது சிறப்பு நிருபர்- தினமலர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தமிழக மீனவர்களை குறிவைக்கும் இலங்கை கடற்படை: புலிகள் ஆதரவு மீண்டும் தலைதூக்கும் 'அபாயம்'"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates