jkr

சம்மன் அனுப்பியது சட்ட விரோதம் :போலீஸ் மீது விஜயகாந்த் பாய்ச்சல்


புலன் விசாரணையின் போது, சாட்சிகள் யார் பெயரையாவது சம்பந்தப்படுத்தி சொன்னால் தான், சட்டப்படி அவர்களை அழைத்து விசாரிக்க முடியும். அப்படியிருக்க, எனக்கு சம்மன் அனுப்பியது சட்ட விரோதமானது’ என்று, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.
பனையூரில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, “கொலை வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என, அவருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பினர்.
அந்த சம்மனுக்கு விஜயகாந்த் நேற்று அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மத்திய அரசு நியமித்த போலீஸ் கமிஷனும், சுப்ரீம் கோர்ட்டும் அளித்துள்ள பரிந்துரையில், காவல் துறையில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியும், அவற்றை மாநில அரசுகள் ஏற்கவில்லை. முக்கிய சம்பவங்களில் முறையான, பாரபட்சமற்ற விசாரணை தேவைப்படுகிறது. புலன் விசாரணை சுதந்திரமாக நடக்க வேண்டும் என்பதற்காக வழிவகுப்பதே, என்னுடைய அறிக்கையின் முக்கிய நோக்கம். என்னுடைய அறிக்கையை விஷமத்தனம் என்று யாராவது கருதுவார்களானால், அதை அவர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றே அர்த்தம். போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்த சண்முகராஜனை, பொறுப்புள்ள போலீஸ் துறை எப்படி கையாண்டிருக்க வேண்டும் என்று, அரசியல்வாதிகளுக்கு அறிவுரை சொல்லும் டி.ஜி.பி.,க்கு தெரிந்திருக்க வேண்டாமா? மர்மமான முறையில் மரணமடைந்த அவரை, உடனடியாக ஏன் எரித்தனர் என்று மக்கள் சந்தேகப்படுவதில் என்ன தவறு?சண்முகராஜன் சாவு மரணமா, கொலையா? இளங்கோவனின் மருமகள் வசந்தியை யாரும் பார்க்க முடியாத வகையில், போலீசார் முற்றுகையிட்டிருப்பது ஏன்? சண்முகராஜனோடு இருவர் வந்ததாகக் கூறப்படுவது உண்மையா? வந்த கார்களின் பெயர்களும், பயன்படுத்திய துப்பாக்கிகள் பற்றியும் முரண்பட்ட விவரங்கள் வருவதேன்? என்பன போன்ற பல சந்தேகங்கள் மக்களிடமும், சட்ட வல்லுனர்களிடமும் உள்ளன.
எனது அறிக்கையில் தரப்பட்ட தகவல்கள் அனைத்தும், ஏற்கனவே பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. நல்ல எண்ணத்தோடு அறிக்கை கொடுத்த எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஓர் அரசியல் கட்சித் தலைவரை மிரட்டும் பாணியில் காவல் துறை செயல்படுமேயானால், இவ்வழக்கு தொடர்பான உண்மை விவரங்கள் தெரிந்த சாதாரண பொதுமக்கள், எப்படி போலீசின் பக்கம் தலை வைத்து படுப்பர்?இச்சூழ்நிலையில், காவல்துறை எப்படி உண்மையை கண்டறிய முடியும். நான் கேள்விப்பட்ட விவரங்களைத் தான் அறிக்கையாக வெளியிட்டேன். தாங்கள் அனுப்பிய சம்மனிலும், தாங்கள் குறிப்பிட்டுள்ள சட்டப்பிரிவு எனக்கு பொருந்தாது. புலன் விசாரணையின் போது, சாட்சிகள் யார் பெயரையாவது சம்பந்தப்படுத்தி சொன்னால் தான், சட்டப்படி அவர்களை அழைத்து விசாரிக்க முடியும். அப்படியிருக்க, எனக்கு சம்மன் அனுப்பியது சட்ட விரோதமானது.
பொதுவாக எந்த சம்பவத்தைப் பற்றி பேசவும், விமர்சனம் செய்யவும், சாதாரண குடிமகனுக்கே அரசியல் சட்டத்தில் பேச்சுரிமை வழங்கப் பட்டுள்ளது. ஓர் அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில், ஆளுங்கட்சியின் சர்வாதிகாரப் போக்கு குறித்து கருத்து தெரிவிக்க, எனக்கு முழு உரிமை உண்டு.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சம்மன் அனுப்பியது சட்ட விரோதம் :போலீஸ் மீது விஜயகாந்த் பாய்ச்சல்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates