கரையோர சுற்றுக்காவல் கப்பல் வழங்கிய இந்தியாவுக்கு கோத்தபாய நன்றி தெரிவிப்பு
சிறிலங்கா கடற்படை கரையோர சுற்றுக்காவல் கப்பல் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு இந்தியா வழங்கிய அனுசரணைக்கு அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அரசின் இத்தகைய நல்லெண்ண நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் எனவும் அவர் கூறினார்.
இந்தியா வழங்கிய கரையோர சுற்றுக்காவல் கப்பலை திருகோணமலை துறைமுகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கோத்தபாய ராஜபக்ச இதனைத் தெரிவித்தார்.
இந்தியக் கடற்படையின் சேவையில் இருந்த கப்பலான ‘விக்ரகா’ 2008 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28 ஆம் நாள் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்டது.
பி 623 என இலக்கமிடப்பட்ட இந்தக் கப்பல் மும்பாயில் உள்ள துறைமுகத்தில் 1990 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 74 மீற்றர் நீளமும் 12 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் அதிகூடியதாக 21.5 கிலோ நொட்ஸ் வேகத்தில் பயணிக்கக்கூடியது.
இந்தக் கப்பலில் கடல் மற்றும் தரையைக் கண்காணிக்கக்கூடிய கதுவீகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் திருகோணமலை துறைமுகப் பகுதியைக் கண்காணிக்கும் பணி இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, கப்பலை அதன் கட்டளைத் தளபதி எஸ்.ஏ.வீரசிங்கவிடம் கையளித்தார். நாட்டின் இறைமையையும் ஒற்றுமையையும் நில ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் கடற்படையினர் ஆற்றிய பங்குக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.
0 Response to "கரையோர சுற்றுக்காவல் கப்பல் வழங்கிய இந்தியாவுக்கு கோத்தபாய நன்றி தெரிவிப்பு"
แสดงความคิดเห็น