கிளிவெட்டிக்கு மக்களை அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்!!
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலய பிரதேசத்திற்கு உட்பட்ட கிராம மக்களை கிளிவெட்டி இடைத்தரிப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. வவுனியா அகதி முகாம்களிலுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டாவது தொகுதியினர் அடுத்த வாரம் அழைத்து வரப்படவிருப்பதையடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட புனர்வாழ்வுச் செயலக அதிகாரி ஒருவர் இது பற்றித் தெரிவித்தார். இம்மாவட்டத்தில் குறித்த கிராமங்களைச் சேர்ந்த 579 குடும்பங்களைச் சேர்ந்த 2021 பேர் 11 முகாம்களிலும் 123 குடும்பங்களைச் சேர்ந்த 465 பேர் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் 2006ஆம் ஆண்டு முதல் தங்கியிருந்தனர் கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதி கிளிவெட்டி இடைத் தரிப்பு முகாமுக்கு இக்குடும்பங்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பேரில் 7 தடவைகளில் 8 முகாம்கள் மூடப்பட்டன. 336 குடும்பங்களைச் சேர்ந்த 1221 பேர் இது வரை அங்கு அழைத்துச் செல்லப்பட்டு கிளிவெட்டி, பட்டித்திடல் மற்றும் தில்லாங்கேணி ஆகிய இடங்களில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏனைய குடும்பங்களைப் பொறுத்தவரை சாஹிரா வித்தியாலயம் 106 குடும்பங்கள் 349 பேர், சத்துருக்கொண்டான் 37 குடும்பங்கள் 103 பேர், கொக்குவில் 97 குடும்பங்கள் 321 பேர் மற்றும் ஆலங்குளம் 7 குடும்பங்கள் 27 பேர் என 243 குடும்பங்களைச் சேர்ந்த 880 பேர் தொடர்ந்தும் 4 முகாம்களில் தங்கியுள்ளனர். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதலாந் திகதி சாகிரா வித்தியாலய முகாமில் தங்கியிருப்பவர்களையும் 10ஆம் திகதி கொக்குவில் முகாமில் தங்கியுள்ளவர்களையும், 15ஆம் திகதி ஆலங்குளம் மற்றும் சத்துருக்கொண்டான் முகாம்களில் தங்கியுள்ளவர்களையும் கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி வைக்க உத்தேசிக்கப்பட்டிருந்த போதிலும் வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள கிழக்கு மாகாணததைச் சேர்ந்த இரண்டாவது தொகுதியினர் மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்படவிருப்பதையடுத்தே மூதூர் கிழக்கைச் சேர்ந்தவர்களை அங்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அடுத்த மாதம் 10ஆம் திகதிக்கு பின்னரே குறித்த குடும்பங்களை அங்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகும் என்றும் மட்டக்களப்பு மாவட்ட புனர்வாழ்வு செயலகத்தைச் சேர்ந்த அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
0 Response to "கிளிவெட்டிக்கு மக்களை அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்!!"
แสดงความคิดเห็น