உறவினர்களைப் பார்வையிடுவதற்கு வருகை தருவோரும் அகதிகளாகப் பதிவு
தமிழக முகாம்களில் வாழும் உறவினர்களைப் பார்வையிடுவதற்காக மூன்று மாத கால விசாவில் வருகை தரும் இலங்கைத் தமிழர்களையும் அகதிகளாகப் பதிவு செய் வதனால், அவர்கள் தாயகம் திரும்ப முற்படும் போது, புதிய சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தமிழக முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளைப் பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்கள் மூன்று மாத கால விசாவில் வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், அவ்வாறு வருவோர் முகாமிலேயே தங்குவதால், அவர்களையும் அகதிகளாக மண்டபம் தனித்துணை ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் பதிவு செய்கின்றனர். அவர்களுக்கும் அகதிப் பதிவெண், தனி வீடு, குடும்ப அட்டை மற்றும் அடையாள அட்டை வழங்கப்படுகின்றன. இவர்கள் விசா காலம் முடியும் முன்பே இலங்கை செல்ல விரும்பினால், முகாம் பொலிஸார், கியூ பிரிவு பொலிஸார், தனித்துணை ஆட்சியர், சென்னை அகதிகள் மறுவாழ்வுத் துறை அதிகாரி ஆகியோரின் சான்றிதழ்கள் பெறவேண்டும். இந்தச் சான்றிதழ்களைப் பெற குறைந்தது ஒரு மாதம் தேவைப்படும். இதனால், அவர்கள் முறையான அனுமதியின்றி படகில் இலங்கைக்குச் செல்வது அதிகரித்துள்ளது. எனவே, விசாவில் வருபவர்களின் கடவுச்சீட்டு விபரங்களைத் தனியாகப் பதிவுசெய்தால், இப் பிரச்சினையைத் தீர்க்கலாம் என அகதிகள் கூறுகின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அகதிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் முகாமில் 10 நாட்கள் வரை தங்கலாம். அதற்கும் மேல் தங்குபவர்களை அகதிகளாகப் பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது என்றனர்.
0 Response to "உறவினர்களைப் பார்வையிடுவதற்கு வருகை தருவோரும் அகதிகளாகப் பதிவு"
แสดงความคิดเห็น