புலி முக்கியஸ்தர் குமரன் பத்மநாதனிடம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான விசாரணைகளை நடாத்துவதற்கு இந்தியக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர். பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குச் சதியின் பின்னணி குறித்து விசாரித்து வரும் விசாரணைக் குழு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ராஜீவ் காந்தியின் கொலைக்கான சதித் திட்டத்தை உருவாக்கியதில் பத்மநாதனிற்கும் பெரும் பங்கு உள்ளதாகவும் கொலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதி திரட்டுவதிலும் நிதி விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டதிலும் பத்மநாதனிற்கு முக்கிய பொறுப்புள்ளதாகவும் இந்திய குற்றப் புலனாய்வுப் பொலிசார் கருதுகின்றனர். அதேவேளை குமரன் பத்மநாதன் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி எனச் சர்வதேசப் பொலிசாரால் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்ததும் தெரிந்ததே. புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்குவதற்கும் நிதி திரட்டுவதற்கும் சர்வதேச அளவில் இரு அமைப்புகள் செயற்பட்டு வந்துள்ளன. குமரன் பத்மநாதன் தலைமையில் ஒரு அமைப்பும் அய்யன்னா பிரிவும் புலிகளின் சர்வதேச தொடர்புகளுக்கு மூளையாகச் செயற்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களிடம் நிதி திரட்டிப் புலிகளுக்கு ஆயுதங்களை வாங்கி அனுப்பி வந்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ளமையால் அவரிடம் ராஜீவ் கொலை சதித் திட்டம் மற்றும் நிதி ஆதாரம் குறித்து விசாரிப்பதற்கு இந்தியாவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர். இதற்காக இலங்கை அரசிடம் அனுமதி கோருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Response to " "
แสดงความคิดเห็น