பொத்துவில் இ.போ.ச. உப டிப்போ ஊழியர் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது
பொத்துவில் இ.போ.ச. உப டிப்போ முகாமையாளர் அரசியல் கட்சியொன்றின் ஆதரவாளர் ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்று டிப்போ ஊழியர்கள் இன்று காலை ஆரம்பித்த வேலை நிறுத்தம் சில மணித்தியாலங்களின் பின்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. நேற்று அக்கரைப்பற்றில் நடைபெற்ற தேசிய காங்கிரஸ் மாநாட்டில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் 4 பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு கோரப்பட்டதாகவும் - இரண்டு பஸ்கள் உரிய நேரத்தில் பொத்துவில் பஸ் நிலையத்தை வந்தடையாத நிலையில் ஆத்திரமடைந்த குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளர் இந்த உப டிப்போ முகாமையாளரைத் தாக்கியதாகவும் கூறப்படுகின்றது.தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் உப டிப்போ முகாமையாளர் ஏ.எம்.இப்ராஹீம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நேற்று முன் வைக்கப்பட்டது.நேற்றிரவு வரை அந்நபர் கைது செய்யப்படாததையடுத்து இன்று காலை முதல் டிப்போ ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் முற்பகல் வரை பொத்துவில் - அக்கரைப்பற்று வீதியில் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டு இருந்ததோடு குறிப்பிட்ட டிப்போக்கள் ஊடான வெளியூர் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டிருந்தன.சந்தேகநபர் பொலிசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதையடுத்தே ஊழியர்கள் தமது வேலை நிறுத்தத்தை முற்பகல் 10.30 மணியுடன் கைவிட்டுள்ளதாக டிப்போ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 Response to "பொத்துவில் இ.போ.ச. உப டிப்போ ஊழியர் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது"
แสดงความคิดเห็น