jkr

பாசிக்குடா சுற்றுலாத்துறை அபிவிருத்தி : உள்ளூர் மீனவர் விசனம்(பட இணைப்பு)



இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையில் பிரபல்யம் பெற்றுள்ள பாசிக்குடா கடலோரப் பிரதேசத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளினால் தமக்கு தொழில் ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பல வருடங்களாக மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களை அந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு தற்போது அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையிலேயே மீனவர்கள் இது தொடர்பான தமது கவலையை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக கல்குடா பகுதியைச் சேர்ந்த குடும்பங்களில் 99 சதவீதமான குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா மீனவர் சங்கத் தலைவர் மயில்வாகனம் சுந்தரராஜா தெரிவித்தார். தங்களின் மீன் வாடிகள் அமைந்துள்ள காணி மற்றும் வள்ளங்கள் நிறுத்தப்பட்டுள்ள கடலோரப் பகுதி ஆகியன ஹோட்டல்கள் கட்டுவதற்கு அடையாளமிடப்பட்டு ஒப்பந்தக்காரர்களான முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் அவர், "இது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள போதிலும் இது வரை சாதகமான பதில் எதுவும் கிட்டவில்லை" என்கிறார் "பொருத்தமான மாற்று இடத்தை வழங்கினால் தொழில் ரீதியான பாதிப்பிலிருந்து தங்களால் விடுபட முடியும்"என சங்கச் செயலாளரான பெரியதம்பி நடராஜா சுட்டிக் காட்டுகின்றார். இப்பிரதேசத்திலுள்ள மீனவர்கள் 58 வள்ளங்களையும் தோணிகளையும் வைத்திருப்பதாகக் கூறும் அவர் எந்நேரத்திலும் தாங்கள் இங்கிருந்து வெளியேறலாம் அல்லது வெளியேற்றப்படலாம் என்ற நிலையிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கின்றார். "தற்போதைய இடத்திலிருந்து சற்றுத் தொலைவில், அதாவது கல்குடா இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் அப்பகுதி கற்பாறைகள் நிறைந்திருப்பதால் பொருத்தமற்ற இடமாகவே உள்ளது." என்றும் தெரிவித்துள்ளார் பெரியதம்பி நடராஜா. "சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதை மீனவர்கள் மறுக்கவில்லை.ஆனால் பொருத்தமான இடமொன்றை பெற்று இதனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றுதான் மீனவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்" என்றார்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பாசிக்குடா சுற்றுலாத்துறை அபிவிருத்தி : உள்ளூர் மீனவர் விசனம்(பட இணைப்பு)"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates