இந்தியாவில் தங்கியிருந்த 500 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்.
கடந்த ஒரு மாதகாலப்பகுதியில் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் இந்தியாவில் தங்கியிருந்த 500 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீள நாடுதிரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கான தென்னிந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி ஹிந்து செய்தித்தாளுக்கு வழங்கிய பேட்டியொன்றின்; போதே மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் தனது பொறுப்புகளை கையேற்ற நிகழ்வின் பின்னரே அவர் மேற்படி பேட்டியினை வழங்கியுள்ளார். இதுதவிர இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு இலங்கை அரசாங்கம் பல நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடந்த மாதம் 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள் நாடு திரும்பியிருந்த போதிலும் அதற்கு முன்னதாக 20 குடும்பங்கள் மாத்திரமே இலங்கை திரும்பியுள்ளதாக வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கை அகதிகள் மீளவும் நாடு திரும்புவதற்கு அச்சுறுத்தல் காணப்படாமையே இந்த எண்ணிக்கை அதிகரிப்பிற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோன்று இந்தியாவில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பிரயாணிகளின் எண்ணிக்கை கடந்த ஜூலை மாதமளவில் 45.2 சதவீத அதிகரிப்பை காட்டியதாக அவர் குறிப்பிட்டார்.
0 Response to "இந்தியாவில் தங்கியிருந்த 500 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்."
แสดงความคิดเห็น