jkr

மகேஸ்வரன் எம்.பி வழக்கில் சாட்சியம்


மகேஸ்வரன் எம்.பி. படுகொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சாட்சியமளித்த பொலிஸ் சார்ஜன்ட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மகேஸ்வரன் எம்.பி. பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டு விட்டு, ஆலய சந்நிதானத்தின் அருகே நிற்கையில் வெடிச்சத்தம் கேட்டது. உடனே மகேஸ்வரன் எம்.பி. கீழே விழுந்தார். அவர் விழுந்த நேரம் எனது வயிற்றிலும் துப்பாக்கிச் சூடுபட்டது.
எனினும், நான் சுதாரித்துக் கொண்டு தப்பியோட எத்தனித்த எதிராளியை நோக்கி சுட்டேன் என்று மகேஸ்வரன் எம்.பி. படுகொலைகள் வழக்கில் நேற்று சாட்சியமளித்த மெய்ப் பாதுகாப்பாளரான பொலிஸ் சார்ஜன்ட் தர்மசிறி தெரிவித்தார். துப்பாக்கிச் சூடுபட்ட மகேஸ்வரன் எம்.பி.யின் தலைப் பகுதியிலிருந்து அதிகளவான இரத்தம் ஒடியது. உடனே பரஞ்சோதிநாதனும், நானும் எம்.பி.யை ஒருவாறு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றோம். அங்கு வைத்தே ஆலயத்தில் எம்.பி.யைச் சுட்ட, இங்கு இருக்கும் எதிராளியை இனங்காண முடிந்தது என்றும் அவர் கூறினார்.
மகேஸ்வரன் எம்.பி. படுகொலை வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ராஜபக்ஷ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அரச சட்டவாதி பி. குமாரரட்ணம் வழக்கின் சாட்சிகளை நெறிப்படுத்தினார். வழக்கு விசாரணையின் போது, பிரதான எதிரியான ஜோன்ஸ்டன் கொலின் வெலன்டைன், மன்றில் சிறைச்சாலை அதிகாரிகளால் ஜர்படுத்தப்பட்டிருந்தார். எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஜெயக்குமாரும், பாதிக்கப்பட்டோரின் குடும்பநலனைக் கவனிப்பதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி எல்.எம்.என். அமீனும் ஆஜராகியிருந்தனர்.
அரச சட்டவாதி பி. குமாரரட்ணம் எதிரியிடம், நீர் குற்றவாளியா? அல்லது சுற்றவாளியா? எனவும், தமிழ்மொழியில் பரிமாற்றம் வேண்டுமா? எனவும் கேட்டபோது, அதற்கு எதிராளியான ஜோன்ஸ்டன் கொலின் வெலன்டைன், இல்லை நான் சுற்றவாளி. எனக்கு மொழிப் பரிமாற்றம் தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.
பின்னர், மகேஸ்வரன் எம்.பி. மீதான படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற போது சம்பவத்தினை நேரில் கண்டதாகக் கூறப்படும் இரு சாட்சிகளான பொலிஸ் கான்ஸ்டபிள் தர்மசிறி பெரேரா மற்றும் செல்லத்துரை பரஞ்சோதிநாதன் ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில் சாட்சிக்கூண்டில் ஏற்றப்பட்டு பொலிஸ் சார்ஜன்ட் தர்மசிறி பெரேராவின் சாட்சியத்தை, அரச சட்டவாதி பி. குமாரரட்ணம் நெறிப்படுத்தினார். இப்போது தர்மசிறி பெரேரா குறிப்பிட்டதாவது,
2000ஆம் ஆண்டிலிருந்து நான் மகேஸ்வரன் எம்.பி.யின் மெய்ப்பாதுகாப்பாளராக இருந்து வருகின்றேன். அவருடன் பல்வேறு இடங்களுக்குச் öசன்றுவந்துள்ளேன். அவரது சொந்த இடமான காரைநகருக்கும் அவருடன் சென்றுவந்துள்ளேன். அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். எங்கு செல்வதாயினும் அவர் எனக்கு முன்னறிவித்தல் வழங்குவார்.
சம்பவம் இடம்பெற்ற தினமன்று மகேஸ்வரன் எம்.பி. சாம்பல் நிற ரீ சேட்டையும் வெள்ளை நிற நீள காற்சட்டையையும் அணிந்திருந்தார். அன்று புதுவருடம் என்பதால், கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கூடியிருந்தனர். அன்று காலை மகேஸ்வரன் எம்.பி., அவரது மகள் மற்றும் நானும் ஆலயத்திற்குச் சென்றோம். அரச சட்டவாதி: பொதுவாக அவர் எந்தெந்த நாட்களில் எந்தெந்த ஆலயங்களுக்குச் செல்வது வழக்கம்?
தர்மசிறி பெரேரா: வெள்ளிக்கிழமைகளில் கட்டாயம் ஆலயத்திற்குச் செல்லுவார். எப்படியேனும், ஒரு மணித்தியாலமேனும் பூசை வழிபாடுகளில் கலந்துவிட்டே வெளிவருவார். அநேகமாக கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னபலவாணேஸ்வரர் ஆலயத்திற்கே வருவதுண்டு. அதனைத் தவிர, கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டி, முகத்துவாரம் ஆகிய ஆலயங்களுக்கும் செல்வதுண்டு.
அரச சட்டவாதி: எதிராளி, மகேஸ்வரன் எம்.பி.யை சுடுவதை நீங்கள் உங்கள் கண்களால் கண்டீர்களா?
தர்மசிறி பெரேரா: இல்லை, அவர் பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டு விட்டு ஆலய சந்நிதானம் அருகே நிற்கையில், பாரிய வெடிச்சத்தம் ஒன்று கேட்டது. உடனே, மகேஸ்வரன் எம்.பி. கிழே விழுந்துவிடவே, எனது வயிற்றிலும் சூடு விழுந்தது. எனினும். நான் சற்று சுதாரித்துக் கொண்டு, தப்பியோட எத்தனித்த எதிராளியை நோக்கிச் சுட்டேன். எனினும், ஆலயத்தில் வைத்து அவரை இனங்காணக் கூடிய சூழ்நிலை எனக்கு இருக்கவில்லை. காரணம், நானும் காயப்பட்ட நிலையிலேயே இருந்தேன்.
துப்பாக்கிச் சூடுபட்ட மகேஸ்வரன் எம்.பி.யின் தலைப் பகுதியிலிருந்து அதிகளவான இரத்தம் ஒடிக்கொண்டிருந்தது. உடனே இங்கே சாட்சியாக வந்திருக்கும் செல்லத்துரை பரஞ்சோதிநாதனும், நானும் எம்.பி.யை ஒருவாறு தூக்கி அவரது ஜீப் வண்டியிலேயே ஏற்றிக்கொண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தோம். அங்கு வைத்தே ஆலயத்தில் எம்.பி.யைச் சுட்ட இங்கே இருக்கும் எதிராளியை என்னாலும் பரஞ்சோதிநாதனாலும் இனங்காண முடிந்தது.
வெடிச்சத்தம் கேட்டது
இதனையடுத்து, இரண்டாம் சாட்சியான செல்லத்துரை பரஞ்சோதிநாதன் சாட்சியமளிக்கையில், மகேஸ்வரன் எம்.பி.யை கடந்த 15 வருடங்களாக நான் அறிவேன். அவர் எனது உற்ற நண்பன். சம்பவ தினமன்று நானும் எனது குடும்பத்தினர் சகிதம் ஆலயத்திற்குச் சென்றுப, பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன், மகேஸ்வரன் எம்.பி.யுடனும் சொற்ப நிமிடங்கள் உரையாடி புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்த விட்டு முதலில் நான் வெளியேறினேன். வெளியேறியது மட்டும் தான், ஆலயத்தின் உள்ளே பாரிய வெடிச்சத்தமொன்று கேட்டது. ஏதோ அனர்த்தம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்து கொண்ட, நான் உடனடியாகவே ஆலயத்திற்குள் மீண்டும் புகுந்தேன்.
பக்தர்கள் யாவரும் அலறியபடி வெளியே ஒடிவர, மகேஸ்வரன் எம்.பி. இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துகிடக்க, தப்பியோட முனைந்த இங்கே இருக்கும் எதிராளியை தர்மசிறி பெரேரா வயிற்றில் காயப்பட்ட நிலையில் சுடத்தொடங்கினார் என்றார் என்றார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆலயத்தினுள் இருக்க, உம்மால் எவ்வாறு குற்றவாளியை இனங்காட்ட முடியும்? என எதிர்த்தரப்பு சடடவாதி க. ஜெயக்குமார் கேள்வி எழுப்ப, அதற்கு பரஞ்சோதிநாதன் பதிலளிக்கையில், இங்கே குற்றவாளிக் கூண்டில் உள்ள இந்த எதிராளியே அன்று தப்பியோட முனைந்தவரும், மகேஸ்வரன் எம்.பி.யைக் கொலை செய்தவரும் என்பதாக என்னால் உறுதியாகக் கூறமுடியும் என்றார்.
சம்பவத்தை நேரில் கண்ட மற்றுமொரு சாட்சியான நித்தியானந்தம் என்பவரும் சாட்சியமளிக்க மன்றில் ஆஜராகி இருந்தபோதிலும், கால அவகாசம் இன்மையால் மீண்டும் மகேஸ்வரன் எம்.பி. மீதான படுகொலை வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி சுனில் ராஜபக்ஷ அறிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மகேஸ்வரன் எம்.பி வழக்கில் சாட்சியம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates