மட்டு. மாவட்டத்தில் புதிதாக 'படுவான்கரை கல்வி வலயம்' ஸ்தாபிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பிரதேச பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் அப்பிரதேசத்திற்கு என 'படுவான்கரை வலயம்' எனத் தனியான கல்வி வலயமொன்றை ஸ்தாபிப்பது என கிழக்கு மாகாண அமைச்சர்கள் வாரியம் ஏக மனதாக தீர்மானித்துள்ளது. நேற்று மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் கூடிய அமைச்சர்கள் வாரியக் கூட்டத்தில் இதற்கான முழு அங்கீகாரமும் அமைச்சர்கள் வாரியத்தினால் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கல்வியில் பின் தங்கிய பிரதேசமாகக் கருதப்படும் படுவான்கரைப் பிரதேசத்தில் கல்வியை அபிவிருத்தி செய்யும் வகையில் தனியான கல்வி வலயமொன்று அமைக்கப்பட வேண்டும் என மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் யோசனை ஒன்றை அமைச்சர்கள் வாரியத்தில் முன்வைத்திருந்தார். இதன் பிரகாரம் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கல்வி வலயமானது தற்போது பட்டிருப்பு, மட்டக்களப்பு மற்றும் கல்குடா கல்வி வலயங்களைச் சேர்ந்த 63 பாடசாலைகளைக் கொண்டதாக அமையும். மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள மண்முனை மேற்கு(வவுணதீவு) பிரதேசத்திலுள்ள 27 பாடசாலைகள், செங்கலடிப் பிரதேசத்(செங்கலடி - பதுளை வீதி)திலுள்ள 11 பாடசாலைகள், பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள மண்முனை வடமேற்கு (கொக்கட்டிச்சோலை) பிரதேசத்திலுள்ள 18 பாடசாலைகள், மற்றும் கல்குடா கல்வி வலயத்தில் செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 7 பாடசாலைகள் என 63 பாடசாலைகள் படுவான்கரை கல்விவலயத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன. இதற்கான அலுவலகத்தை வவுணதீவில் அமைப்பது என்றும் அமைச்சர்கள் வாரியத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. படுவான்கரை கல்வி வலயம் புதிதாக உருவாக்கப்பட்டு செயல்பட தொடங்கியதும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்கள் மட்டக்களப்பு வலயம் - 66, மட்டக்களப்பு மத்தி வலயம் -64, படுவான்கரை வலயம் - 63, கல்குடா வலயம் - 71, பட்டிருப்பு வலயம் - 66 ஆகிய பாடசாலைகளைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 Response to "மட்டு. மாவட்டத்தில் புதிதாக 'படுவான்கரை கல்வி வலயம்' ஸ்தாபிப்பு"
แสดงความคิดเห็น