கிழக்கு மாகாண சபை கொடி: முஸ்லிம் சிங்கள சமூகங்கள் அதிருப்தி
கிழக்கு மாகாண சபைக்கு என புதிதாக உருவாக்கப்படும் கொடி தொடர்பில் முஸ்லிம் மற்றும் சிங்களத் தரப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர். தமது சமூகம் கொடியில் சரிவரப் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை என்று மாகாண சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். அதேபோன்று சிங்களவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விடயமும் அங்கீகரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஒன்றாக இருந்த வடக்கு-கிழக்கு மாகாணம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தனித்தனியாகப் பிரிக்கப்பட்டது.
கடந்த மே மாதத்தில் கிழக்கு மாகாண சபை புதிதாக உருவாக்கப்பட்டு தேர்தலும் நடத்தப்பட்டது. அதனை அடுத்து மாகாணத்திற்கு என தனியான கொடி ஒன்றை உருவாக்குவதற்கும் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிழக்கில் வாழும் மூவின மக்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையில் கொடி உருவாக்கப்பட்டு வருகின்றது.
இதுவரை பிரேரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில், கொடியில் திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் வகையில் கழுகின் படமும்
மட்டக்களப்பு மாவட்டத்தைக் குறிக்கும் வகையில் பாடுமீனும்
அம்பாறை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் வகையில் சிங்கமும்சூரியன் உதிப்பது கிழக்கில் என்பதைக் காட்டும் வகையில் கொடியின் நான்கு மூலையிலும் உதயசூரியன் படமும் பொறிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடியில் தமது சமூகம் சரிவரப் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை என்று மாகாண சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் சிலர் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், தமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், புதிய கொடிக்கான வரைவுகளைச் சமர்ப்பிக்கும்படி ஓவியர்களைக் கோரும் விளம்பரம் ஒன்றையும் அவர்கள் செய்தித்தாள்களில் வெளியிட்டுள்ளனர்.
ஒவ்வொரு சமூகத்தினரும் தமது பிரதிநித்துவத்தை கொடியில் எதிர்பார்க்கும் போது இலங்கையர்களுக்கு என ஒரே அடையாளத்தை எட்டுவது மிகக் கடினமான காரியம் என்று தெரிவிக்கும் ஜே.வி.பி. உறுப்பினர் வசந்த பியதிச, கொடியில் சிங்கத்தின் படம் பொறிப்பது என்பது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
0 Response to "கிழக்கு மாகாண சபை கொடி: முஸ்லிம் சிங்கள சமூகங்கள் அதிருப்தி"
แสดงความคิดเห็น