கடந்த 30 ஆண்டுகளில் இழந்து போன அனைத்தையும் சமாதானத்தையும் மிகவிரைவில் எட்டிவிட முடியும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
கடந்த 30 ஆண்டுகளில் இழந்து போன அனைத்தையும் தற்போது கட்டம் கட்டமாக மீளப் பெற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் யுத்தத்திற்கு முன்பிருந்த நிலையை மிகவிரைவில் எட்டிவிட முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தென்மராட்சி தெற்கில் பெரும்போக விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்து உரை நிகழ்த்தும் போது தெரிவித்துள்ளார். தென்மராட்சி தெற்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் காரணமாகப் பாதுகாப்புப் படையினரால் அண்மையில் விடுவிக்கப்பட்ட மறவன்புலோ தனங்கிளப்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள 1100 ஏக்கர் விளை நிலங்களில் பெரும் போகத்திற்கான விவசாய நடவடிக்கைகள் வைபவரீதியாக இன்று ஆரம்பித்து வைத்துத் தொடர்ந்தும் உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது தென்மராட்சி தெற்குப் பிரதேச மக்களுக்குக் கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குடா நாட்டு மக்களின் நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி வருவதாகவும் அவற்றில் நடைமுறைச் சாத்தியமான பல விடயங்கள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கிணங்க ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் எமது மக்களின் அபிவிருத்தி மீள்கட்டுமானப் பணிகளுக்குத் தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசு துரிதமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 20 வருட காலமாக விரும்பியோ விரும்பாமலோ அழிவுப் பாதையில் சென்றுள்ளதாகவும் எமது பிரதேசங்களின் அபிவிருத்தியும் பின்தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது அத்தகைய சூழ்நிலை முற்றாகத் தகர்க்கப்பட்டுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். யாழ்.குடா நாட்டில் 13101 ஹெக்டேயர் பரப்பிலான நிலங்களில் காலபோக நெற்செய்கை கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தற்போது அதில் சிறிதளவு நிலங்களிலேயே பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூடிய நிலப்பிரப்பில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் மீதமான தரிசு நிலங்களைக் குத்தகைக்கு வழங்குவதற்கும் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் இணைந்து ஏர்பூட்டும் வைபவத்தினை இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளதுடன் நலிந்த விவசாயிகளுக்குக் காசோலைகளையும் உள்ளீடுகளையும் வழங்கியுள்ளனர். இந்த நிகழ்வில் யாழ்.அரசாங்க அதிபர் கே.கணேஷ் கமநல சேவைத் திணைக்கள உதவி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தென்மராட்சிப் பிரதேச செயலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் கமநலத் திணைக்கள அதிகாரிகளும் அப்பகுதி விவசாயிகளும் பெருமளவில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Response to "கடந்த 30 ஆண்டுகளில் இழந்து போன அனைத்தையும் சமாதானத்தையும் மிகவிரைவில் எட்டிவிட முடியும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா."
แสดงความคิดเห็น