jkr

இந்தியாவுக்கான புதிய சிறிலங்கா தூதுவராக பிரசாத் காரியவாசம் நியமிப்பு


ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி பிரசாத் காரியவாசம் இந்தியாவுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.புதுடில்லிக்கான தூதுவராக இருந்த ரொமேஷ் ஜெயசிங்க வெளிவிவகாரத்துறை அமைச்சு செயலாளராகப் பதவியேற்பதைத் தொடர்ந்து இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா வெளியுறவு சேவையில் 1981 ஆம் ஆண்டு இணைந்து கொண்டவர் காரியவாசம். இவர் மூத்த இராஜதந்திரியும் ஆவார். ஜெனீவா, றியாத், வாஷிங்ரன், புதுடில்லி ஆகிய இடங்களில் அவர் இராஜதந்திரியாகப் பணியாற்றி இருக்கிறார்.
இந்தியாவில் இதற்கு முன்னரும் பிரதித் தூதுவராகக் காரியவாசம் பணியாற்றியுள்ளார். ஜி-15 நாடுகள் அமைப்பில் அரச தலைவரின் தனிப்பட்ட பிரதிநிதியாகவும் செயலாற்றியுள்ளார்.
வெளியுறவுத்துறை செயலாளராகப் பணியாற்றிய பாலித கோகன்ன ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் பிரதிநிதியாக நியமனம் பெற்றுச் சென்றதை அடுத்து, புதுடில்லியில் தூதுவராகப் பணியாற்றிய ரொமேஷ் ஜெயசிங்க அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட உள்ளார். இதனை அடுத்து வெற்றிடமாகும் அவரது இடத்துக்கு காரியவாசம் நியமிக்கப்பட உள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்காக பாலித கோகன்ன செப்ரெம்பர் மாதம் 10 ஆம் நாள் செல்லவுள்ளார். அதனை அடுத்து ஏனைய பதவி மாற்றங்கள் நிகழும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வெளிநாட்டு அமைச்சின் பொருளாதார விவகார பிரிவு இயக்குநர் நாயகமான அகமட் ஜவாத் சவூதி அரேபியாவுக்கான புதிய தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மற்றும் மூத்த இராஜதந்திரிகளான பமீலா டீன், சேனுகா செனிவிரத்ன, சித்ராங்கனி வாகீஸ்வரா ஆகியோருக்கும் புதிய நியமனங்கள் கிடைக்கவுள்ளன. எனினும் அவர்களின் பதவிகள் குறித்து இன்னும் முடிவாகவில்லை.
அநேகமாக இத்தாலி, வியட்நாம், தாய்லாந்து, சுவீடன், கனடா, தென்னாபிரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா அலுவலகம் என்பவற்றில் விரைவில் வெற்றிடமாகவுள்ள இராஜதந்திரிப் பதவிகளுக்கு அவர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இந்தியாவுக்கான புதிய சிறிலங்கா தூதுவராக பிரசாத் காரியவாசம் நியமிப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates