'டுவிட்டர்' இணையத்தளத்தில் முதல் தடவையாக சத்திரசிகிச்சை ஒன்று நேரடித் தரவேற்றம்

'டுவிட்டர்' (Twitter) எனப்படும் சமூக இணையத்தளம் இன்று உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்று வருகிறது. 'டுவிட்டர்' தனது இணையத்தளத்தில் முதற்தடவையாக சத்திர சிகிச்சை ஒன்றை நேரடி தரவேற்றம் செய்து மேலும் ஒரு புதுமையைப் படைத்திருக்கின்றது. அமெரிக்க சென். லூக் மருத்துவமனையில் நடைபெற்ற சத்திரசிகிச்சை ஒன்று, 'டுவிட்டர்' முகவரியூடாக தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி மருத்துவமனை, சத்திரசிகிச்சை தொடர்பிலான விளக்கத்தை ஒவ்வொரு நிமிடத்திற்கும் 'டுவிட்டர்' முகவரியில் தரவேற்றி உள்ளது. 140 சொற்களை மட்டுமே கொண்டு இந்த சத்திர சிகிச்சை தரவேற்றம் செய்யப்பட்டிருப்பதுதான் இதன் சிறப்பம்சம். அமெரிக்காவைச் சேர்ந்த, 70 வயதான மோனா கிளேயறி என்ற பெண்மணிக்கு சென். லூக் மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை சத்திர சிகிச்சை ஒன்று நடத்தப்பட்டது. இந்த சத்திர சிகிச்சையையே 'டுவிட்டர்' தனது இணத்தளத்தில் தரவேற்றம் செய்திருக்கின்றது. சத்திரசிகிச்சை தொடர்பிலான விளக்கத்தை தரவேற்றம் செய்ய மோனா ஒப்புக்கொண்டார் .இதற்கு மோனாவின் குடும்பத்தினரும் ஒத்துழைப்பை வழங்கினர். அத்துடன் தமது குடும்ப உறுப்பினரின் சத்திர சிகிச்சையை 'டுவிட்டர்' இணையத்தளத்தின் மூலம் பார்வையிட்ட அவர்கள், இது தம்மைப் பெரும் வியப்பில் ஆழ்த்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.சென். லூக் மருத்துவமனைப் பேச்சாளரான சாராஹ் கொரிஸ்ஸோ (Sarah Corizzo) என்பவரே சத்திர சிகிச்சையை தொடர்ந்து ஒவ்வொரு நிமிடமும் தரவேற்றம் செய்து வந்துள்ளார்.இது தொடர்பில் சாராஹ் கொரிஸ்ஸோ கருத்து தெரிவிக்கையில்,"ஒருவருக்கு சத்திரசிகிச்சை ஒன்றைச் செய்யும் போது, அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய நோயாளியின் உறவினர்கள் காத்திருப்பார்கள். எனவே இவ்வாறான ஒரு தரவேடு நோயாளியின் குடும்பத்தினருக்குப் பேருதவியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.இது எல்லோருக்கும் ஒரு பாட விளக்கத்தை எமக்குத் தருவது போல் உள்ளது. மோனாவின் சத்திரசிகிச்சை தொடர்பிலான விளக்கம் 300 தடவைகள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு 3 மணி நேரம் செலவிடப்பட்டுள்ளது" என்றார்.இந்த சத்திரசிகிச்சை தொடர்பான விளக்கத்தை 700 'டுவிட்டர்' பாவனையாளர்கள் பின்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







0 Response to "'டுவிட்டர்' இணையத்தளத்தில் முதல் தடவையாக சத்திரசிகிச்சை ஒன்று நேரடித் தரவேற்றம்"
แสดงความคิดเห็น