jkr

வவுனியா நகரசபைக்குத் தெரிவானோர் இன்று சத்தியப்பிரமாணம்

வவுனியா 
  வீரகேசரி இணையம் 9/14/2009 5:16:59 PM - வவுனியா நகரசபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் நேற்று திங்கட்கிழமை வவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் முன்னிலையில் இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
நகரசபையின் புதிய தலைவராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எஸ்.என்.ஜி. நாதனும், உபதலைவராக அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.முகுந்தரதனும், உறுப்பினர்களாக அதே கட்சியைச் சேர்ந்த ஐ.கனகையா, என்.சிவகுமாரன், எஸ்.சுரேந்திரன் ஆகியோரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.
இந்த வைபவத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் அப்துல் லத்தீப் முகமது முனவ்வரும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அப்போது அக்கட்சியின் தவிசாளர் பசீர் சேகு தாவூதும் பிரசன்னமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா நகரசபை செயலாளர் எஸ். ஜெயராஜ் தலைமையில் வைபவம் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தெரிவாகியுள்ள லலித் ஜயசேகர, அப்துல் பாரி முகமது சரீப் ஆகியோர் இந்த வைபவத்திற்கு சமூகமளிக்கவில்லை.
ஆயினும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களான ஜீ.ரி.லிங்கநாதன் (முன்னாள் நகரசபைத் தலைவர்), சு.குமாரசாமி, க.பார்த்தீபன் ஆகியோர் வைபவத்தில் கலந்து கொண்டனர். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் ஏற்கனவே தமது கட்சி அலுவலகத்தில் பதவி்ப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அங்கு உரையாற்றிய முன்னாள் நகரசபைத் தலைவரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பி்னருமான ஜீ.ரி.லிங்கநாதன், சபைத் தலைமையுடன் நகர மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பணிகளில் தமது கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைத்துச் செயற்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
புதிய நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன் பேசுகையில், வவுனியா நகரசபை நகர மக்களுக்குப் பல வழிகளில் சேவையாற்ற வேண்டியிருப்பதாகவும், கட்சி, இன பேதமின்றி அர்ப்பணிப்போடு சபைக்குத் தெரிவாகியுள்ள ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். 
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வவுனியா நகரசபைக்குத் தெரிவானோர் இன்று சத்தியப்பிரமாணம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates