ஊடகவியலாளர்கள் தமக்கு தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை யாருக்கும் தாரைவார்த்துவிடக்கூடாது. - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கையில் தற்போது யுத்தம் வன்முறை என்பன முடிவிற்கு வந்துள்ள நிலையில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது கடமைகளை மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே ஊடகவியலாளர்கள் தமக்கு தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை யாருக்கும் தாரைவார்த்துவிடக்கூடாது. இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொழும்பிலுள்ள சமூகசேவைகள் மற்றும் சமூகலத்துறை அமைச்சுப்பணிமனையில் இடம்பெற்ற மேற்படி பத்திரிகையாளர் மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த காலங்களில் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் ஊடகவியலாளர்கள் பணிபுரியவேண்டிய நிலையில் காணப்பட்டனர். தற்போது நிலைமை அவ்வாறாக இல்லை. எனவே கடந்த கால தவறுகளைத்திருந்தி ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை நியாயமாக மேற்கொள்ள வேண்டும். ஈபிடிபி குறித்த ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஊடகங்கள் தாராளமாக முன்வைக்கலாம். அதனை ஏற்றுக்கொள்ள அன்றும் இன்றும் என்றும் நாம் தயாராகவே இருந்திருக்கிறோம். இருப்போம். தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இனப்பிரச்சினை தீர்விற்கும் மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்கும் காட்டிய எதிர்ப்பு அவர்களின் சொந்த நிலைப்பாடல்ல. புலிகளின் கருத்தையே அவர்கள் பிரதிபலித்தார்கள். புலிகளின் பேச்சாளர்களாகவே அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது தெரிந்ததே. யாழ்ப்பாண மாவட்டத்தில்; இன்னும் மூன்று நகர சபைகளும் பதினான்கு பிரதேச சபைகளும் தேர்தல் நடைபெற வேண்டியனவையாக உள்ளன. இச்சபைகளில் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாத நிர்வாகமே நடைபெறுகின்றது. இச்சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும். இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் நிர்வாகத்தில் இயங்கும் போது வடபகுதி உள்ளூராட்சி மன்றங்கள் மாத்திரம் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாதிருப்பது இம் மன்றங்களின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை மறுதலிப்பதாகும். இப்போது நிலைமை

மாறிவிட்டது. கிழக்கு மாகாண மக்களைப் போல வட மாகாண மக்களும் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். புலிகளால் மறுக்கப்பட்டிருந்த ஜனநாயக உரிமைகளை இம்மக்கள் அனுபவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு. இதற்கான ஆரம்பம் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலாக இருக்கட்டும். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும் என்ற கோரிக்கையை ஆரம்பம் முதல் நாமே முன்வைத்து வந்தோம். இதற்கு நடைமுறைச்சாத்தியமான மூன்று கட்ட தீர்வுத்திட்டத்தையும் முன்வைத்துள்ளோம். எனவே இதுவரை எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இனிமேலாவது மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து பதின்மூன்றாவது திருத்தச்சட்டமும் அதற்கு மேலதிகமானதும் என்ற அடிப்டையிலிருந்து ஆரம்பமாகும் தீர்வுத்திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். இத்திட்டம் அரசியல் சாசனத்திற்கு அமைவானது. ஏற்கனவே நாட்டின் தென்பகுதியில் அமுலில் உள்ளது. இந்தியாவின் அனுசரனையினைப் பெற்றுள்ளது. பிரபாகரன் விரும்பிய தீர்வு அவருக்கு கிடைத்தவிட்டது. தனிமனிதனின் மரணத்தில் நாம் மகிழ்வடையவில்லை. ஆயினும் புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படவேண்டும். இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். இம் மாநாட்டில் ஏ9 பாதை திறப்பு நலன்புரி கிராம மக்கள் அவர்களின் மீள்குடியேற்றம் அரசியல் நிலைமைகள் மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பான பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய நிலையில் அவற்றிற்கு தெளிவான விளக்கத்தினையும் தமது நிலைப்பாட்டினையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரியப்படுத்தினார். குறிப்பாக யாழ்.மாநகர சபைக்கு ஈ.பி.டி.பி. சிபார்சு செய்திருந்த மேயராக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவையும் பிரதி மேயராக துரைராஜா இளங்கோ இருவரையும் நியமிப்பதற்கு ஐ.ம.சு.முன்னணி முடிவு செய்துள்ளதையும் அமைச்சர் தேவானந்தா தெரியப்படுத்தினார். எதிர்வரும் காலங்களில் பெருமளவு முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் பிரதி மேயர் பதவியை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்குவது தொடர்பாக ஈ.பி.டி.பி.க்கும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்குமிடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றையதினம் கையெழுத்திடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் பத்திரிகை இலத்திரனியல் உள்ளிட்ட பெருமளவு ஊடகவியலாளர்கள் பங்குகொண்டமை குறிப்பிடத்தது. 






0 Response to "ஊடகவியலாளர்கள் தமக்கு தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை யாருக்கும் தாரைவார்த்துவிடக்கூடாது. - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா"
แสดงความคิดเห็น