jkr

முறைசாரா போதனாசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம். வருடாந்த கண்காட்சியில் அமைச்சர் தேவானந்தா அவர்களின் அறிவிப்பால் மகிழ்ச்சி ஆரவாரம்.




யாழ். கல்வி வலய முறைசாரா கல்விப்பிரிவு நடாத்தும் வருடாந்திர கண்காட்சியும் விற்பனையும் - 2009 இன்றையதினம் சிறப்பாக இடம்பெற்றது.

இன்றுகாலை யாழ். நல்லூர் சன்மார்க்க வித்தியாலயத்தில் இடம்பெற்ற மேற்படி வருடாந்த விழாவிற்கு பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்குபற்றினார். யாழ். கல்வி வலய முறைசாரா கல்விப்பிரிவு நடாத்தும் வருடாந்திர கண்காட்சியும் விற்பனையும் - 2009 நிகழ்விற்கு இன்று காலை வந்தடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை முறைசாரா கல்விப்பிரிவு அதிகாரிகள் போதனாசிரியர்கள் மாணவ மாணவியர்கள் திரண்டு நின்று பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்று அழைத்துச் சென்றனர். இதனைத்தொடர்ந்து கண்காட்சி இடம்பெறும் மண்டப வாயிலில் மாலை அணிவித்து வரவேற்கப்பட்ட அமைச்சர் தேவானந்தா அவர்கள் தொடர்ந்து மங்கள விளக்கேற்றியதுடன் நாடா வெட்டி கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார்.

யாழ். முறைசாரா கல்விப் பிரிவினரால் நடாத்தப்படும் அனைத்து கற்கை நெறிகளையும் எடுத்துக்காட்டும் விதத்தில் சகல பிரிவினராலும் அந்தந்த கண்காட்சி அம்சங்கள் சிறப்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். சிறுபொருள் உற்பத்தி சுயதொழில் கைப்பணி சமையல் மணப்பெண் அலங்காரம் கணணி என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய இக்கண்காட்சியில் அந்தந்த பிரிவில் மாணவர்களும் போதனாரிசியர்களும் விளக்கமளித்தமை மற்றுமோர் விடயமாகும். குறிப்பாக அனைத்து இன மத பிரிவினரையும் வெளிப்படுத்தும் விதத்தில் பலர் மணப்பெண்கள் அலங்காரத்தில் காட்சியளித்தபோதும் கண்டிச்சிங்கள நாகரீகத்தில் காட்சியளித்த மணப்பெண் அலங்காரம் பலரின் பாராட்டுதல்களைப் பெற்றமையினை காணக்கூடியதாக இருந்தது.

கண்காட்சியினைத் தொடர்ந்து மண்டபத்தில் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. யாழ்.முறைசாராக் கல்வி உதவிப்பணிப்பாளர் ராசநாயகம் தலைமையில் ஆரம்பமான இக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாக பங்குபற்றிய அதேவேளை வடமாகாண முறைசாரா கல்விப் பணிப்பாளர் எஸ்.நடராஜா மற்றும் யாழ். முறைசாராக் கல்வி பிரதிப் பணிப்பாளர் ராசலிங்கம் ஆகியோரும் முறைசாரா கல்வி அதிகாரிகள் போதனாசிரியர்கள் மாணவ மாணவிகள் என அனைவரும் பங்குகொண்டனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ். முறைசாரா கல்வி உதவிப்பணிப்பாளர் ராசநாயகம் அவர்கள் முறைசாரா கல்வி குறித்து சிறிய விளக்கமளித்தார். பாடசாலை செல்லாத பிள்ளைகள் பாடசாலையினை விட்டு இடைவிலகிய பிள்ளைகள் பாடசாலையினை விட்டு வெளியேறியோர் என மூன்று வகையினரே முறைசாரா கல்விக்குள் உள்ளடங்குவோர் எனத்தெரிவித்த உதவிப்பணிப்பாளர் ராசநாயகம் யாழ். கல்வி வலயத்தில் வருடாந்தம் நானூறு பேர் முறைசாரா கல்வி பெறுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முறைசாரா கல்விப் பிரிவினர் சார்பாக சில வேண்டுகோள்களையும் முன்வைத்தார். அவற்றுள் போதனாசிரியர்களுக்கான கொடுப்பனவு மிகக்குறைவாக உள்ளது. போதனாசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் இல்லை. முறைசாரா கல்விக்கு வள நிலையம் ஒன்றில்லை. பயிற்சிபெற்றோர் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் உள்ளனர். ஏனையோர் உற்பத்திகளை ஆரம்பிக்க மூலதனம் இன்றி உள்ளனர் ஆகிய கோரிக்கைகளை அவர் முன்வைத்தார்.

இக்கூட்டத்தில் இறுதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதான உரையாற்றினார். அதில் தனக்கு சுட்டிக்காட்டப்பட்ட முறைசாரா கல்வித் துறையில் உள்ள குறைபாடுகள் குறித்து தான் அதிக கவனமெடுத்துள்ளதாகவும் அவற்றிற்கு உரிய தீர்வு பெற்றுத்தரப்படும் எனவும் தெரிவித்தார். இதன்பிரகாரம் முறைசாரா கல்விப் பிரிவிற்கென வள நிலையம் ஒன்று ஏற்படுத்திக் கொடுக்கப்படும். வரும் தை மாதம் முதல் போதனாசிரியர்களுக்கு இரட்டிப்பு வேதனம் வழங்கப்படும். பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக முறைசாரா கல்விப் பயனாளிகளின் உற்பத்திகள் உள்ளுரிலும் வெளியூரிலும் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முறைசாரா பயிற்சி பெற்றவர்கள் சுயதொழில் ஆரம்பிக்க மூலதனம் அல்லது வட்டியில்லாக் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதுடன் இவற்றிற்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்தபோது மண்டபம் அதிர கரகோஷம் செய்து அனைவரும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கண்காட்சியினை பார்வையிட்டு விடைபெற்று வெளியேறியபோது அங்கு திண்டிருந்த பலரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நன்றி தெரிவித்து வழியனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.









  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "முறைசாரா போதனாசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம். வருடாந்த கண்காட்சியில் அமைச்சர் தேவானந்தா அவர்களின் அறிவிப்பால் மகிழ்ச்சி ஆரவாரம்."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates