தற்போதையச் செய்தி
முகாமை விட்டு வெளியே செல்லும் மக்கள் |
வவுனியா முகாம்கள் திறந்துவிடப்பட்டுள்ளன
இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் சுதந்திரமாக வெளியில் சென்று வருவதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது.
இதனையடுத்து ஒன்பதினாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு முகாம்களில் இருந்து வெளியில் சென்றிருப்பதாக வடக்கு மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருக்கின்றார்.
பல்வேறு தேவைகளுக்குமாக இன்று முதன் முறையாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பல்வேறு தேவைகளுக்குமாக முகாம்களில் இருந்து வெளியில் சென்றிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை சுதந்திரமாக வெளியில் சென்று வருவதற்கு டிசம்பர் முதலாம் திகதி அனுமதியளித்து, இந்த முகாம்கள் திறந்த முகாம்களாக்கப்படும் என அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
அதற்கமையவே இன்று ஆயிரக்கணக்கானவர்கள் முகாம்களில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
30/11/09 செய்தியறிக்கை
ஜெர்மனியின் நாஜி ஆட்சிக்கால குற்றங்கள் குறித்த மிகப்பெரிய கடைசி விசாரணையாகக் கருதப்படும், மியூனிச்சில் நடக்கின்ற விசாரணை ஒன்றில், ஜோண் டெம் ஞான் ஜுக் என்னும் உக்கிரேனிய- அமெரிக்க வயோதிபர் ஒருவர் விசாரிக்கப்படுகிறார்.
ஜோண் டெம் ஞான் ஜுக் |
அவர் அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.
மிகவும் நோய்வாய்ப்பட்டவராக இருந்த, 89 வயதான டெம் ஜான் ஜுக் அவர்கள், முதலில் நீதிமன்றத்துக்கு சக்கர நாற்காலியிலேயே வந்தார்.
துபாய் வோர்ல்டிற்கு கடனளித்தவர்களுக்கு உத்தரவாதம் தர அரசு மறுப்பு
துபாய் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முதலீட்டு நிறுவனமான துபாய் வேர்ல்ட் நிறுவனத்தின் கடன்களுக்கு தாம் உத்தரவாதம் தரமாட்டோம் என்று துபாய் அரசாங்கம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
இந்த நிறுவனத்தின் கடனுக்கு அதற்கு கடன் கொடுத்தவர்களும் பாதி பொறுப்பேற்க வேண்டும் என்று அரசாங்க சார்பிலான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
துபாய் கட்டிடத்தொழில் சிக்கலில் |
தனக்குள்ள 6 பில்லியன் டாலர்கள் கடனை மீள செலுத்துவதற்கு தாமதம் ஏற்படும் என்று கடந்த வாரம் துபாய் வேர்ல்ட் நிறுவனம் கூறியிருந்தது. அதனால், அபுதாபி மற்றும் துபாய் பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டன.
அந்த அறிவிப்பு வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதல் நாள் வணிகத்தின் போது துபாயில் 7.3 வீதமும், அபுதாபியில், 8.3 வீதமும் வீழ்ச்சி ஏற்பட்டது.
அந்த பங்குச் சந்தைகள் சந்தித்த மிகப்பெரிய வீழ்ச்சி இதுவாகும்.
அணுத்திட்ட பிரச்சினையில் சுமுக தீர்வுக்கு சாத்தியமிருக்கிறது-- இரான்
தனது அணு திட்டத்தை பெருமளவில் விஸ்தரிப்பதற்கான திட்டங்களுக்கு மத்தியிலும், அணு விவகாரம் தொடர்பில் இன்னமும் இராஜந்திர ரீதியிலான தீர்வுக்கு வர வாய்ப்பு இருப்பதாக இரானிய நாடளுமன்ற சபாநாயயகர் அலி லாரிஜானி தெரிவித்துள்ளார்.
இரான் அதிபர் அஹமதி நிஜாத் |
ஐக்கிய நாடுகள் அவையின் அணு நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ், தான் அணுத்திட்டத்தை நடைமுறைப்படுத்ததுவதை மேற்குலகம் ஏற்காதபட்சத்தில், இரான் வேறு பாதையை தேர்வு செய்யும் என்றும் லாரிஜானி தெரிவித்துள்ளார்.
புதிதாக பத்து யுரேனிய செறிவாக்க ஆலைகளை நிறுவுவது என்ற இரானின் அறிவிப்புக்கு மேற்குலகில் இருந்து கடுமையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
இது மிகவும் மோசமானது என்றும் சிறுபிள்ளைத்தனமானது என்றும் பிரான்ஸ் கூறியுள்ளது.
மும்பை தாக்குதல் விசாரணையிலிருந்து வழக்கறிஞர் நீக்கம்
இந்தியாவில் மும்பை நகரின் மீது கடந்த வருடம் நவம்பரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் உயிர் தப்பிய ஒரே தாக்குதலாளிக்கு ஆதரவாக வாதிடும் தலைமை வழக்கறிஞரை நீதிமன்றம் அந்த வழக்கில் இருந்து விலக்கியுள்ளது.
மும்பை தாக்குதல் முக்கிய சந்தேக நபர் கசாப் |
முஹமட் அஜ்மல் கசாப்புக்காக வாதிடும், அப்பாஸ் கஸ்மி என்ற அந்த வழக்கறிஞர் நீதிமன்றத்துடன் ஒத்துழைக்கவில்லை என்றும், வழக்கு நடைமுறைகளை அவர் தாமதிக்க முயலுகிறார் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதற்கு முன்னர் கசாப்புக்காக வாதாடிய வழக்கறிஞரும், வழக்குக்கு முரணாக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அதிலிருந்து நீக்கப்பட்டார்.
மலேஷிய தேசபக்தி பாடம் மாற்றப்படுமா ?
மலேஷியாவில் தொடர்ச்சியாக கற்பிக்கப்படும் ஒரு தேசபக்தி பாட நெறியை மாற்றியமைப்பது குறித்து மலேஷிய அரசாங்கம் திட்டமிடுகிறது.
நாட்டின் சீன மற்றும் இந்திய சிறுபான்மையினருக்கு எதிரான இனரீதியான அம்சங்களை அது கொண்டிருப்பதாக வந்த முறைப்பாடுகளை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
சிவில் அதிகாரிகளுக்கும், அரசின் நிதியுதவி பெறும் மாணவர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ள இந்த பாட நெறி, சிறுபான்மையினரை எதிரிகளாக காண்பிப்பதுடன், மலாய் இன மக்களை மேம்பட்டவர்களாக காட்டுகிறது என்று அதற்கான வகுப்புகளில் பங்கேற்ற சிலர் கூறியுள்ளனர்.
இன ஐக்கியத்தை ஊக்குவிப்பதற்கான இலக்குகளுக்கு இவை எதிரானவையாக இல்லாத வகையில் இந்த பாட நெறிகளை மாற்றியமைப்பது குறித்து ஆராய்வததாக மலேஷிய நாடளுமன்ற விவகார அமைச்சர் கூறியுள்ளார்.
தயாரிப்புத்துறையின் வளர்ச்சி சாதகமாக இருந்தது |
உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையையும் மீறி, இந்திய பொருளாதாரம் கடந்த காலாண்டுப் பகுதியில் சுமார் எட்டு சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறது.
இந்தியாவில் தேவையையும், உற்பத்தியையும் ஊக்கப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் குறைந்த வட்டி வீதம் ஆகியவற்றால் ஏற்பட்ட ஊக்கத்தின் அடிப்படையில், செப்டம்பருடன் முடிந்த 3 மாத காலத்தில், இந்திய பொருளாதாரம் சுமார் 8 வீதத்தால் வளர்ச்சிகண்டுள்ளது.
உற்பத்தி 9 வீதத்துக்கு அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும், அதேவேளை, வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டுமானங்கள் குறித்த திட்டங்கள் மீதான செலவீனங்கள் 13 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
உலக நிதித்துறை நெருக்கடியில் இருந்து தமது பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக பெரிய அரசாங்க நிதித்திட்டங்களில், இந்திய அரசாங்கம் கடுமையாக முதலிட்டுள்ளது.
ஒரு மூத்த ஆசிய வங்கியியல் ஆய்வாளரின் கருத்துப்படி இந்த முடிவுகள் பெரும் ஆச்சரியத்தைத் தருபவையாகும்.
இந்திய பொருளாதாரத்தின் வியக்க வைக்கும் வளர்ச்சியின் பின்னணிகளை அலசுகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொருளாதாரத்துறை பேராசிரியர் சீனிவாசன். தமிழோசைக்கு அவர் வழங்கிய பிரத்யேக செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
கிளிநொச்சி நகரை ஒட்டி மீள்குடியேற்றம் ஆரம்பம்
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகரை அண்டிய கிராமப்பகுதிகளிலும் தற்போது, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக்கரையோரப் பிரதேசமாகிய பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்கள் பலவற்றில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரையில் மீளக்குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இடம்பெயர்ந்த மக்கள் (ஆவணப்படம்) |
மீளக்குடியமர்ந்துள்ள பகுதிகளில் பாடசாலைகள், ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், அடுத்த மாதம் தேசிய மட்டத்தில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையை கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்துவ தற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அங்கு மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் போக்குவரத்து வசதிக்காக கிளிநொச்சி நகரில் இலங்கை போக்கு வரத்துச் சபையின் கிளை அலுவலகம் ஒன்றைத் திறந்து பேரூந்து போக்குவரத்துச் சேவைகளை இன்னும் இரண்டொரு தினங்களில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இதுபற்றி கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ள மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
எயிட்ஸ் சிகிச்சையில் புதிய பரிந்துரை
தற்போதைக்கு உலகில் 40 லட்சம் மக்கள் எயிட்ஸ் வைரசுக்கு எதிரான மருந்துகளை பெறுகிறார்கள். ஆனால், இன்னும் ஒரு 50 லட்சம் பேரைப் பொறுத்தவரை அவர்களுக்கு சிகிச்சை தேவைப்படுகின்ற போதிலும், இந்த மருந்து அவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.
எச்.ஐ.விக்கு எப்போது சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும் என்பது குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளை எடுத்துக்கொண்டால், மேலும் 30 தொடக்கம் 50 லட்சம் பேர் சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் இணைகிறார்கள் என்று அது பொருள் தருகிறது.
எச் ஐ வி மருந்துகளை ஆரம்ப நிலையில் எடுக்க பரிந்துரை |
எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டவர்கள் அவர்களது நோய் எதிர்ப்பு தொகுதி, பலவீனமடைந்து அதற்கான சமிக்ஞைகள் தென்படத்தொடங்குவதற்கு முன்னதாக மருந்துகளைப் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் விரும்புகிறது.
புதிதாக பரிந்துரைக்கப்பட்ட மட்டத்தில் சிகிச்சையை ஆரம்பித்தால், இந்த நோயின் எதிர்ப்பில் இருந்து தாக்குப் பிடிப்பவர்களின் அளவு 70 வீதத்தால் அதிகரிக்கும் என்று மருத்துவ சஞ்சிகையான லான்சட் காண்பிக்கிறது.
இது சுகாதார பராமரிப்பு துறையின் செலவையும் கணிசமாக அதிகரிக்கச் செய்யும்.
உலகில் எயிட்ஸ் மிகவும் மோசமாக தொற்றியுள்ள நாடுகளில் ஒன்றான தென்னாபிரிக்காவைப் பொறுத்தவரை, அங்கு தற்போது சிகிச்சை தேவைப்படுபவர்களில் அரைவாசிக்கும் குறைவானவர்களே அதனைப் பெறுகிறார்கள்.
இந்த புதிய பரிந்துரைகளின் மூலம் மேலும் 10 லட்சம் தென்னாபிரிக்கர்கள் சிகிச்சைக்காக காத்திருப்போரின் பட்டியலில் இணைவார்கள் என்று சிகிச்சை கோரி செயற்படும் தன்னார்வக்குழுவைச் சேர்ந்த கத்தரின் தொம்லின்சன்.
செரீனா வில்லியம்ஸுக்கு மூன்று ஆண்டுகளுக்கு தடை
செரினா வில்லியம்ஸ் |
உலக மகளிர் டென்னிஸ் தரப்பட்டியலின் முதலிடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸுக்கு, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கு பெற மூன்று ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளின் அரையிறுதி ஆட்டத்தின் போது பெல்ஜியம் நாட்டின் கிம் கிளைஸ்டருக்கு ஆதரவான ஒரு முடிவை போட்டியின் ஒரு நடுவர் தெரிவித்ததற்காக, அவரை ஆடுகளத்திலேயே ஏசிய குற்றத்துக்காக இந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவர் 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் இதே போன்று ஒரு பெரிய தவறை மீண்டும் செய்வாராக இருந்தால் இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வரும்.
மேலும் அவருக்கு தற்போது 53,000 டாலர்கள் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து விளையாட்டில் ஒழுங்கீனம் அதிகரித்துள்ளது:செப் பிளாட்டர்
உலக அளவில் கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில் ஒழுங்கீனம் அதிகரித்துள்ளது என்று சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபாவின் தலைவர் செப் பிளாட்டர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இடம்பெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் போது, ஆடுகளத்தில் கூடுதலாக போட்டி அதிகாரிகள் இருக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
போட்டிகளின் போது விளையாட்டு வீரர்கள் நடுவர்களை ஏமாற்றும் வேலைகள் செய்வதை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடைமுறை தேவைப்படுகிறது என்றும் பிஃபாவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
செப் பிளாட்டர் |
உலகக் கோப்பை போட்டிகளின் தகுதிச் சுற்று ஆட்டத்தின் போது, அயர்லாந்து-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான போட்டியில் பிரான்ஸின் வீரர் தியரி ஆன்ரி பந்தை கைகளால் கையாண்டதன் காரணமாக அந்தப் போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இது ஆடுகளத்தில் கூடுதல் நடுவர்கள் தேவை என்பதை உணர்த்துகிறது என்று செப் பிளாட்டர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமை கேப்டவுணில் நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் அவசரக் கூட்டத்தில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டுள்ளது.
0 Response to "தற்போதையச் செய்தி"
แสดงความคิดเห็น