திமுகவின் வெற்றி உண்மையானதல்ல, அராஜகம் நீண்ட நாள் நீடிக்காது - ஜெ.
சென்னை: திமுவுக்கு கிடைத்துள்ள இடைத் தேர்தல் வெற்றி உண்மையானதல்ல, இது அதிமுகவுக்கு கிடைத்துள்ள உண்மையான தோல்வியும் அல்ல. திமுகவினர் பெற்று வரும் இந்த செயற்கை வெற்றிகள், அராஜகங்கள் விரைவில் முடிவுக்கு வரும், நீண்ட நாள் அவை நீடிக்காது என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
வந்தவாசி, திருச்செந்தூர் இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
பொதுவாக தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடன், மக்களின் தீர்ப்பிற்கு தலை வணங்குகிறோம் என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூறுவது மரபு. ஆனால், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, எந்தத் தேர்தலிலும் மக்களின் தீர்ப்பு உண்மையாகப் பிரதிபலிக்கப்படவில்லை.
தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.க. அரசின் மீதான எதிர்ப்பலை மக்களிடையே தெளிவாகத் தெரிகிறது. ஆனால், தேர்தல் முடிவோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலின் போதும், அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பமாக இருந்தது. ஆனால், தேர்தல் முடிவோ மக்களின் விருப்பத்திற்கு எதிராக இருந்தது.
தி.மு.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்கையும், தி.மு.க.வினரின் சட்ட விரோதமான அராஜக செயல்களை கண்டும் காணாமல் இருந்த தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் தான் அ.தி.மு.க. கடந்த ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களை புறக்கணித்து, தனது எதிர்ப்பை வெளியிட்டது.
திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல்களின் முடிவு எதிர்பார்த்த ஒன்று தான். இருப்பினும், தி.மு.க.வை எதிர்கொள்ள யாருமே இல்லை என்ற நிலைமை வரக் கூடாது என்ற எண்ணத்தில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து, அ.தி.மு.க. இந்த இடைத் தேர்தல்களில் போட்டியிட்டது.
தி.மு.க.வினரின் அராஜக செயல்களுக்கு மத்திய அரசு உதவியாக இருந்து வருகிறது. ஆனால், இதுவும் நீண்ட நாளைக்கு நீடிக்காது; ஜனநாயகத்திற்கு விரோதமான சூழ்நிலை விரைவில் மாறும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், மக்கள் மீது நம்பிக்கை வைத்தும் அ.தி.மு.க. தனது ஜனநாயகக் கடமையை ஆற்றும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் பணியாற்றும் கழக உடன்பிறப்புகளின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவது; ரவுடிகளை வைத்து தி.மு.க.விற்கு வாக்களிக்கச் சொல்லி வாக்காளர்களை மிரட்டுவது; தேர்தல் முடிந்த பிறகும் தொகுதிக்குள் தி.மு.க.வினர் வீதி உலா வந்து பணத்தை அள்ளி வீசியது; இதை காவல் துறையினரும், தேர்தல் அதிகாரிகளும், இந்திய தேர்தல் ஆணையமும் கண்டும் காணாமல் இருந்தது ஆகிய ஜனநாயகத்திற்கு புறம்பான செயல்களின் மூலம் தான் திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி இடைத்தேர்தல்களில் தி.மு.க. செயற்கையான வெற்றி பெற்றிருக்கிறது.
ஜனநாயகம் வெற்றி பெற வேண்டுமானால், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும். மக்கள் எந்தவித மிரட்டலுக்கும் ஆட்படாமல் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த மூன்றரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. பண நாயகத்தின் மூலமும், வன்முறை வெறியாட்டத்தின் மூலமும், அதிகார செருக்கின் மூலமும் ஜனநாயகத்தை படுகொலை செய்து கொண்டிருக்கிறார் தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதி .
இதை கருணாநிதியே ஒப்புக் கொண்டிருக்கிறார். வந்தவாசி, திருச்செந்தூர் இடைத் தேர்தல்கள் தி.மு.க.விற்கு சாதகமாக இருக்குமா; பாதகமாக இருக்குமா என்று பத்திரிகை நிருபர்கள் கேட்டதற்கு “நாங்கள் பாதகங்களையும், சாதகமாக மாற்றிக் கொள்ளக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள்” என்று கருணாநிதி பதில் அளித்தார்.
இது தி.மு.க.விற்கு உண்மையான வெற்றியும் அல்ல; இது நமக்கு உண்மையான தோல்வியும் அல்ல. இது தி.மு.க.விற்கு கிடைத்த செயற்கையான, உருவாக்கப்பட்ட வெற்றி தான். இதைக் கண்டு கழக உடன்பிறப்புகள் யாரும் வருத்தப்படாமல் தொடர்ந்து ஜனநாயக முறையில் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எனது வேண்டுகோளினை ஏற்று அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும்; கழக வேட்பாளர்களுக்காக அல்லும், பகலும் அயராது உழைத்த எனது அருமை கழக உடன்பிறப்புகளுக்கும்; தேர்தல் பிரசாரம் செய்த தோழமை கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும்; கழக வேட்பாளர்களுக்கு ஆதரவு நல்கிய அனைத்து அமைப்புகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
0 Response to "திமுகவின் வெற்றி உண்மையானதல்ல, அராஜகம் நீண்ட நாள் நீடிக்காது - ஜெ."
แสดงความคิดเห็น