jkr

செய்தியறிக்கை


சம்பவ இடத்தில் தீயணைப்பு வாகனம்
சம்பவ இடத்தில் தீயணைப்பு வாகனம்

ரஷ்ய கேளிக்கை விடுதி தீ விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் பலி

ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 109 பேர் உயிரிழந்த நிலையில், ரஷ்ய அமைச்சர்களும் அரச தரப்பு வழக்கறிஞர்களும் அந்நகருக்கு விரைந்துள்ளன.

இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

உள்ளரங்கில் நடைபெற்ற தீ சாகச காட்சியின் போது அரங்கத்தின் கூரை தீப்பற்றியதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

புகையை சுவாசித்ததன் காரணமாகவும், நெரிசலில் சிக்கியும் பலர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த தீயும் அதன் காரணமாக ஏற்பட்ட புகையும் மிக வேகமாகப் பரவியதை, இரவு விடுதிக்குள் எடுக்கப்பட்ட வீடியோ படம் காட்டுகிறது.

விபத்து நடைபெற்ற விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பிலிப்பைன்ஸில் இராணுவச் சட்டங்கள் அமல்

பிலிப்பைன்ஸில் பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இராணுவ சட்டங்கள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.

கடந்த மாதம் நிறைய பேர் ஒட்டுமொத்தமாக படுகொலைச் செய்யப்பட்டிருந்த நாட்டின் தெற்கிலுள்ள மாகுவிண்டனாவோ பிராந்தியத்தின் உள்ளூர் அரசாங்கங்களிடம் இருந்து மணிலாவில் உள்ள மத்திய அரசாங்கம் அதிகாரத்தைப் பிடுங்கியுள்ளது.

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக சந்தேகிக்கப்படும் இந்த படுகொலை சம்பவத்தில் ஐம்பத்து ஏழு பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த ஒட்டுமொத்த படுகொலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் அம்படுவா என்ற செல்வாக்குமிக்க உள்ளூர் ஜாதியினரால் ஒரு கிளர்ச்சி உருவாவதைத் தடுப்பதற்காகவே இராணுவச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்படுவதாக அரசாங்கம் சொல்கிறது.

ஆயுதக் கும்பலைச் சேர்ந்த இருபது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் நிறைய வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அம்படுவா ஜாதியின் முக்கியப் பிரமுகர்கள் பொலிஸ் காவலில் உள்ளனர்.


பருவநிலை மாற்ற குடியேறிகளுக்கு செல்வந்த நாடுகள் அடைக்கலம் தர வேண்டும்: வங்கதேச அமைச்சர்

பருவநிலை மாற்றத்தின் காரணமாக வங்கதேசத்தில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது
உலக பருவநிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் தசாப்தங்களில் இடம்பெயர நேரிடக்கூடிய கோடிக்கணக்கான மக்களுக்கு செல்வந்த நாடுகள் தமது கதவுகளைத் திறந்து வழிவிட வேண்டும் என்று வங்கதேசத்தின் நிதியமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வங்கதேசத்தில் இருந்து மட்டுமே இவ்வாறாக இரண்டு கோடி பேர் இவ்வாறாக இடம்பெயர நேரிடலாம் என்று அமைச்சர் அப்துல் முஹித் தெரிவித்துள்ளார்.

மக்களின் இந்த இடப்பெயர்ச்சி நிர்வகிக்கப்படுதல் அவசியம் என்றும், அரசியல் ரீதியாக தண்டிக்கப்படுவதிலிருந்து தப்பிவரும் அகதிகளுக்கு இருப்பதுபோன்ற பாதுகாப்பு இந்த மக்களுக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் சர்வதேச சட்டங்களில் மாற்றம் வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதிகரித்துவரும் கடல் மட்டத்தால் வங்கதேசத்தில் பல பாகங்கள் ஏற்கனவே கடல் அரிப்புக்கு உள்ளாகிவருவதாக முஹித் குறிப்பிட்டுள்ளார்.


மனைவியின் எலும்புகளோடு உறங்கிவருபவர்: வியட்நாமில் வியப்பு தகவல்

வியட்நாமில் கடந்த ஐந்து ஆண்டுகாள ஒருவர் இறந்த தனது மனைவியின் எலும்புக்கூட்டோடு படுத்து உறங்கி வருகிறார் என்ற தகவல் அந்நாட்டில் பரவலாக அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

ஐம்பது வயதைத் தாண்டிய வான் என்ற இந்நபர், தனது மனைவியின் சடலத்தை சவக்குழியிலிருந்து தோண்டி எடுத்து தனது மனைவியைப் போன்ற ஒரு மெழுகு பொம்மை செய்து, அதனுள் அவரது எலும்புகளை வைத்து, அந்த பொம்மைக்கு ஒருவாராக ஒப்பனை எல்லாம் செய்து உடன் வைத்துருப்பதை ஒப்புக்கொண்டுள்ளளார்.

மனைவியின் உருவத்தின் அருகே லி வானும் அத்தம்பதியருடைய 12 வயது மகனும் உடலை அனைத்துக்கொண்டு படுத்திருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

இந்த நபர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கோ, இப்படியான சம்பவங்களைத் தடுப்பதற்கோ தங்களிடம் அதிகாரம் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

செய்தியரங்கம்
சரத் பொன்சேகா
சரத் பொன்சேகா

"இடம்பெயர்ந்த மக்களின் நலன்களில் அக்கறை செலுத்த அரசாங்கம் தவறியுள்ளது"- சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

யுத்த வெற்றியின் பின்னர் இராணுவ வீரர்களின் நலன்கள் குறித்தோ இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்வாதார நிலைமை குறித்தோ அரசாங்கம் எவ்வித அக்கறையும் செலுத்தவில்லையென ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

தலைநகர் கொழும்பிலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள வெலிசர என்ற இடத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் விசேட சம்மேளனக்கூட்டத்தில் உரையாற்றிய சரத் பொன்சேகா தாம் அரசியலுக்கு பிரவேசிக்க காரணமான விடயங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்கள் வாக்களிப்பதிலிருந்து தடுக்கப்பட்டமை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

இதேவேளை இங்கு உரையாற்றிய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இம்முறை ஜனாதிபதி தேர்தலை மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பாக கருத முடியும் எனக்குறிப்பிட்டார்.

குடும்ப அரசியலை இல்லாதொழிப்பதற்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கும் மக்கள் கருத்துக் கணிப்பாக இந்த தேர்தல் அமையும் என அவர் குறிப்பிட்டார்

இந்த கூட்டத்தில் உரையாற்றுவோர் பட்டியலில் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஏஸ்.பி திசாநாயக்கவின் பெயர் உள்ளடக்கடப்பட்டிருந்தபோதிலும் அவர் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


கல்குடாவில் சட்டவிரோத கடற்பயணத்தில் ஈடுபட முயன்றவரை படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்

இலங்கையில் கிழக்கு மாகாணத்திலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக செல்லும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

உயிரிழந்த இளைஞனின் தாயார்
உயிரிழந்த இளைஞனின் தாயார்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா கடற்கரையிலிருந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு வள்ளமொன்றில் இவ்வாறான பயணமொன்றிற்கு ஆயத்தமானவர்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞரொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இராணுவத்தினரைக் கண்டு நாலாபுறமும் தப்பியோடியவேளை துப்பாக்கிச் சூட்டிலும் நீரோடையொன்றில் வீழந்த வேளை முதலைக் கடிக்கும் உள்ளாகிய நிலையில் இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

50 பேர் இந்த பயணத்தை மேற்கொள்ள படகை எதிர்பார்த்துக் கொண்டு கடற்கரையில் காத்திருந்த வேளை இராணுவத்தினரைக் கண்டு தாங்கள் தப்பியோடியதாக சம்பவத்தில் முதலைக் கடிக்கு இலக்கான கோபாலப்பிள்ளை ஞானசேகரம் கூறுகின்றார்.

சுமார் மூன்றரை லட்சம் ரூபா வரை இதற்காக தான் செலவு செய்துள்ளதாகவும் இப்படியான பிரச்சினைகள் வரும் என்று தெரிந்திருந்தால் இந்த பயணத்தை தான் நாடியிருக்க மாட்டேன் என்றும் மீனவரான அவர் தமிழோசைக்கு தெரிவித்தார்.

தகவலொன்றின் பேரிலேயே அந்த இடத்திற்கு விரைந்ததாகக் கூறும் இராணுவத்தினர் அங்கு மேற் கொள்ளப்பட்ட தேடுதலின் போது தப்பிச் செல்ல முயன்ற இளைஞரொருவர் தமது துப்பாக்கியை பறித்து சுட முற்பட்டதாகவும் இதனையடுத்து பதில் நடவடிக்கை எடுக்க நேரிட்டதாகவும் கூறுகின்றனர்.


கோபன்ஹேகன் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அறிவிப்பு

டாக்டர் மன்மோகன் சிங்
டாக்டர் மன்மோகன் சிங்
கோபன்ஹேகனில் நடைபெறவுள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் தான் கலந்து கொள்ளப்போவதாக இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றம் குறித்த புதிய உலகளாவிய ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு புதிய உத்வேகத்தை பெற்றுவருகிறது என்பதன் சமீபத்திய அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.

மன்மோகன் சிங் கோபன்ஹேகனுக்கு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி செல்வார் என்றும் மாநாட்டின் இறுதி நாளான டிசம்பர் 18 ஆம் தேதியும் அவர் அங்கிருப்பார் என்றும் இந்தியப் பிரதமர் சார்பில் பேசவல்ல அதிகாரி கூறியுள்ளார்.

கோபன்ஹேகன் மாநாட்டின் துவக்க நிகழ்வுகளுக்கு செல்லாமல் இறுதி நாட்களில் தான் அங்கு செல்லப் போவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்தியப் பிரதமரின் அறிவிப்பு வந்துள்ளது.


நீதிபதி பி.டி.தினகரனை உச்ச நீதிமன்றத்தில் அமர்த்துவதற்கான பரிந்துரையை இந்திய அரசு நிராகரித்துள்ளது.

நீதிபதி பி.டி.தினகரன்
நீதிபதி பி.டி.தினகரன்
கர்நாடக மாநில தலைமை நீதிபதியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவரான நீதிபதி பி.டி.தினகரனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கான பரிந்துரையை இந்திய சட்ட அமைச்சகம் நிராகரித்துள்ளது.

சட்டத்துக்கு புறம்பாக அரசு நிலங்களை ஆக்கிரமித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நீதிபதி பி.டி.தினகரன் மீது சுமத்தப்படும் நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு அவருக்கு வழங்கியிருந்த பரிந்துரையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இந்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

நீதிபதி தினகரனுக்கு எதிராக வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

அவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்திருந்தார் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரும் அறிக்கை அளித்திருந்தார்.

இது குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக கருணாநிதி சூசகமாக அறிவிப்பு

கலைஞர் மு.கருணாநிதி
கலைஞர் மு.கருணாநிதி
தமிழக முதல்வர் கருணாநிதி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் கோவையில் நடைபெறவிருக்கிற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்குப் பின்னர் பதவி விலகப்போவதாக சூசகமாக அறிவித்துள்ளார்.

கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் தலித் மக்களுக்கான ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு என மூன்று சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்ததற்காக அவருக்கு பாராட்டு விழா ஒன்று சென்னையில் நடந்தது.

தனது ஏற்புரையில் தன்னுடைய ”மிச்சமிருக்கும் வாழ்நாள் முழுவதும் உங்களைப்போன்ற ஏழை எளிய மக்களுக்காக உங்களைப்போன்ற அடக்கப்பட்ட மக்களை அடலேறுகளாக மாற்றுவதற்காக உழைப்பேன்,” என்றார்.

அத்தகைய பணியில் ஈடுபட பதவி தடைக்கல்லாக இருக்கக்கூடும் என்பதால்.கோவை செம்மொழி மாநாடு முடிந்த பின் “அரசியல், அமைச்சர் பதவி இவைகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு உங்களிலொருவனாக நான் என்னை இணைத்துக்கொள்வேன்,” என்று தெரிவித்தார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates