செய்தியறிக்கை
கேன்னன் மேரி கிளாஸ்பூல் |
ஒரினச் சேர்க்கையாளரை ஆயராக தேர்ந்தெடுத்திருப்பதற்கு காண்டர்பரி பேராயர் எச்சரிக்கை
அமெரிக்காவில் உள்ள எபிஸ்கோபல் திருச்சபை, ஓரினச் சேர்க்கையாளர் ஒருவரை இரண்டாவது தடவையாக ஆயராகத் தேர்ந்தெடுத்திருப்பது அந்த திருச்சபைக்குள்ளும், உலகெங்கிலும் உள்ள ஆங்கிலிக்கன் திருச்சபை மக்கள் மத்தியிலும் கடுமையான பின்விளைவுகளை தோற்றுவிக்கும் என காண்டர்பரி பேராயர் எச்சரித்துள்ளார்.
ஆண் மற்றும் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களை திருச்சபையில் முக்கிய பதவிகளில் நியமிப்பதில் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது என்று அங்கிலிக்கன் திருச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அமெரிக்க திருச்சபைக்கு பேராயர் டாக்டர். ரோவன் வில்லியம்ஸ் நினைவூட்டியுள்ளார்.
தற்போதைய ஓரினச் சேர்க்கையாளர் தெரிவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைத்துவிடவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
கேனன் மேரி கிளாஸ்பூல் லாஸ் எஞ்செலிஸ் நகரின் துணை ஆயராக தேர்வு செய்யப்பட்டுள்ள முடிவை எபிஸ்கோபல் திருச்சபை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதற்கான வேண்டுகோள்தான் பேராயர் ரோவன் வில்லியம்ஸின் இந்த எச்சரிக்கை என்று செய்தியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தீ விபத்தை தொடர்ந்து கேளிக்கை விடுதிகளில் சோதனை செய்ய ரஷ்ய அரசு முடிவு
தீ விபத்து |
ரஷ்யாவின் பெர்ம் நகரில் ஓர் இரவு கேளிக்கை விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த பெரும் தீ விபத்தை அடுத்து, அந்நாட்டின் கேளிக்கை விடுதிகளில் திடீர் சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என ரஷ்ய அவசரகால நிர்வாக அமைச்சர் கோரியுள்ளார்.
கேளிக்கை விடுதியினுள் பட்டாசுகள் கொளுத்தப்பட்டபோது விடுதியின் உட்கூரையில் தீ பரவியதால் இந்த கொடூர விபத்தில் 112 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
கேளிக்கை விடுதியின் உரிமையாளரும் மேலாளரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வரும் புத்தாண்டு தினத்துக்கு முன் எல்லா விடுதிகளிலும் சோதனைகள் நடத்திமுடிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாக அவசரகால நிர்வாக அமைச்சர் செர்கெய் ஷொய்கு கூறுகிறார்.
பிலிப்பைன்ஸ் படுகொலைகள் தொடர்பில் பலர் கைது
பிலிப்பைன்ஸ் |
பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் பொலிஸார் இன்னும் பலரை கைது செய்து ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அம்பாத்துவான் குடும்பத்துக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் 60 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் அரசியல் காரணங்களுக்காக 57 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்த குடும்பம் தான் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த குடும்பத்தினர் மீது கிளர்ச்சி மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.
கொலை சம்பவம் இடம்பெற்ற மாகுய்ண்டானோ பிராந்தியம் அரசாங்கத்தின் மேற்பார்வையில்லாமல் கிட்டதட்ட தன்னிச்சையாக செயற்பட்டதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
இத்தாலிய மாஃபிய கும்பல் தலைவர்கள் கைது
இத்தாலிய பொலிஸார் |
இத்தாலியில் மாஃபியா கும்பல்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிசிலியன் மாஃபியா துணை தலைவர் என்று கூறப்படுகிற கியான்னி நிச்சி என்ற நபரை இத்தாலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் பால்மேரோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, மிலனில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பதுங்கியிருந்த கேடோனோ பிடான்சட்டி என்ற கும்பல் தலைவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். மாஃபியா கும்பலுடன் தொடர்பு வைத்து இருந்ததற்காகவும், பணப்பறிப்பு வேலையில் ஈடுப்பட்டதற்காகவும் இவருக்கு கடந்த ஆண்டு பதினெட்டு ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஏ9 பாதை |
ஏ9 சோதனைச்சாவடி போக்குவரத்து தடை நீக்கப்பட்டுள்ளது - இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகம்
இலங்கையின் வடக்கே ஏ9 சோதனைச்சாவடி ஊடாக வாகனங்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இச்சோதனைச்சாவடி ஊடாக செல்வதற்கு முன்னர் அனுமதி பெற வேண்டியிருந்தது.
இது தொடர்பாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்லவரான பிரிகேடியர் உதய நாணயக்கார தமிழோசையிடம் கூறும்போது, மதவாச்சி சோதனைச்சாவடி திறக்கப்பட்டுள்ளது என்பது, அங்கு சோதனைகள் இடம்பெறமாட்டாது என்பதல்ல என்றும் அரசாங்க வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் இந்தச் சோதனைச்சாவடியைக் கடந்து பிரயாணம் செய்வதற்குப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறவேண்டும் என விதிக்கப்பட்டிருந்த நடைமுறை மட்டுமே நீக்கப்பட்டிருக்கின்றது என்றும் தெரிவித்தார்.
எனினும், வாகனங்களும், பயணிகளும் வழக்கம்போல இங்கு சோதனையிடப்படுவார்கள் என்றார் அவர்.
வடக்கு நோக்கி ஏ9 வீதிவழியாகச் செல்லும் வாகனங்கள் மதவாச்சியைக் கடந்து நேரடியாகச் செல்ல முடியாது என்ற நடைமுறை கடந்த இரண்டு வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது என அரசாங்கம் அறிவித்திருந்தது .
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்யக்கோரி சம்பூர் மக்கள் கோரிக்கை
இடம்பெயர்ந்த மக்கள் |
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்த நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்ளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றபோதும், திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்குப் பிரதேசத்தின் சம்பூர் பகுதியில் உள்ள மக்கள் இதுவரை அவர்களது சொந்த மண்ணில் குடியேற்றப்படாதது தொடர்பாக பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து சென்ற இவர்கள் மூதூருக்கு அழைத்து வரப்பட்டபோதும் கிளிவெட்டி மற்றும் பட்டித்திடல் நலன்புரி நிலையங்களிலேயே நீண்ட காலமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வளம்மிக்க தங்கள் கிராமத்திற்குச் சென்று விவசாயம், மீன்பிடி
போன்ற தொழில்களை செய்ய விரும்புவதாகவும் அரச நிவாரணத்தில் தங்கியிருக்க விரும்பவில்லை எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தங்ளை மீளக்குடியேற்ற ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலாம் இடத்தில்
வீரேந்தர் சேவாக் |
இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் அணிகளுக்கான உலகத் தரவரிசையில் முதல் தடவையாக முதல் இடத்துக்கு வந்துள்ளது.
மும்பையில் நடந்த மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
அகமதாபாதில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டி எத்தரப்பிற்கும் வெற்றியின்றி முடிவடைய அடுத்த இரு போட்டிகளில் வென்று இந்தியா இந்தத் தொடரை கைப்பற்றியுள்ளது.
0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น