jkr

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ததேகூ நாளை கூடி ஆய்வு


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை மீண்டும் கூடி ஆராயவிருக்கின்றனர்.

நாளை நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்திற்குச் சமூகமளிக்குமாறு சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித முடிவுகளையும் எடுக்காத நிலையில் அக்கட்சிக்குள் தற்போது நெருக்கடி நிலை எழுந்துள்ள நிலையிலேயே நாளை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடுகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கட்சியின் தீர்மானத்தை மீறி சுயேட்சையாகப் போட்டியிடுவது, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து நாயை கூட்டத்தில் ஆராயப்படவிருக்கின்றது.

பெரும்பாலும் நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தனது இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தற்போது லண்டனுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். லண்டனில் சில நாட்கள் தங்கியிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கே.சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நேற்று மாலை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டுள்ள அதேவேளை, இதற்கு முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் சந்திப்பொன்றை நடத்தினர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ததேகூ நாளை கூடி ஆய்வு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates