jkr

தமிழ்க் கைதிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை


வழக்குகள் எதுவுமின்றி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானகரமான முடிவொன்று எட்டப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இது தொடர்பில் நேற்றைய தினம் நீதித்துறை அதிகாரிகள் மட்டத்தில் முக்கிய கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் பெறுபேறாக கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகவுள்ளது.

தமிழ்க் கைதிகளின் விடுதலைக்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவிடம், மலையகத் தமிழ்க் கட்சிகள் கடந்த வாரம் ஹட்டனில் வைத்து வேண்டுகோள் விடுத்திருந்தன.

இந்தப் பின்னணியில், நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

அனைத்துக் கைதிகளின் பிரச்சினைகளையும் ஒரே தடவையில் தீர்த்துவைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதியமைச்சர் கூறினார். வழக்குகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பலமுறை உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டனர்.

அதேநேரம், தமது விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு மகஜர்களை அனுப்பிவைத்திருந்தனர். இதன் விளைவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிசட்ட மறுசீரமைப்பு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டது.

இதற்கிணங்க, கைதிகள் கோவைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவென பத்துச் சட்டத்தரணிகளைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன்படி வழக்குத் தொடர்வதற்கு அவசியமில்லாதவர்களை விடுதலை செய்யவும் ஏனையவர்களுக்கு வழக்குத் தொடரவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது அனைத்துக் கைதிகள் தொடர்பிலும் ஒரே தடவையில் நடவடிக்கை எடுப்பது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாகவே நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் அடுத்தவாரமளவில் கைதிகளின் விடுதலை குறித்து சாதகமான அறிவிப்பு வெளியாகவுள்ளது. வழக்குகள் எதுவுமின்றி பல்வேறு சிறைகளில் சுமார் 600 தமிழ்க் கைதிகள் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்ப ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தமிழ்க் கைதிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates