jkr

செய்தியறிக்கை


காலநிலை மாற்றம் குறித்த உலக மாநாடு ஆரம்பம்
காலநிலை மாற்றம் குறித்த உலக மாநாடு ஆரம்பம்

காலநிலை மாற்றம் குறித்த உலக மாநாடு ஆரம்பம்

டென்மார்க் தலைநகர் கோபன்ஹெகனில் காலநிலை மாற்றம் குறித்த இருவாரகால உலக மாநாடு ஆரம்பமாகியுள்ளது. அதில் 192 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.

கோபன்ஹெகனில் ஆரம்பமான காலநிலை மாற்றம் குறித்த மாநாடு ஒரு சரித்திரத்தை எழுதும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலைமாற்றம் குறித்த விவகாரத்துக்கான தலைவரான யோவ் த ஃபோர் கூறியுள்ளார்.

இருந்தபோதிலும் அது சரியான சரித்திரத்தை படைக்க வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

புவி வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதில், உலக நாடுகள் இலட்சியகரமான இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கோபன்ஹெகனில் நடக்கவிருக்கின்ற இந்த இரு வார மாநாட்டில் காலநிலை மாற்றம் குறித்த புதிய உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு மாநாட்டுப் பிரதிநிதிககள் முயற்சிப்பார்கள்.

எட்டப்படக் கூடிய நிலையிலேயே உடன்படிக்கை இருப்பதாகவும், மனித குலத்தை காப்பாற்ற வேண்டும் என்று மாநாட்டு பிரதிநிதிகளிடம் உலகம் எதிர்ப்பார்த்து நிற்பதாகவும் மாநாட்டை நடத்தும் டென்மார்க் நாட்டின் பிரதமர் லார்ஸ் லொக ராஸ்முஸன் அங்கு பேசுகையில் குறிப்பிட்டார்.


பாகிஸ்தான் தாக்குதலில் 7 பேர் பலி

தாக்குதல் இடம்பெற்ற இடம்
தாக்குதல் இடம்பெற்ற இடம்
பாகிஸ்தானின் வட மேற்கு நகரான பெஷாவரில் ஒரு நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்கொலைக் குண்டுதாரி ஒரு ரிக்ஷாவில் வந்திறங்கியதாகவும், அதன் பிறகு நீதிமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

பாதுகாப்பு கடமையில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்திய போது தற்கொலைதாரி தன்வசமிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.

பழங்குடியினப் பிரதேசமான தெற்கு வாசிரிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை துவக்கப்பட்டதில் இருந்து பெஷாவர் நகர் பல தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது.


கைரேகையை மாற்றிய சீனப் பெண்

சீனப் பெண் ஒருவர் தனது கை விரலை பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்து மாற்றி, அதன் மூலம் கைவிரல் பதிவை வைத்து இயங்கும் குடிவரவு முறைகளை ஏமாற்றியதாக ஜப்பானிய பொலிஸார் கூறுகின்றனர்.

இந்தப் பெண் ஏற்கனவே ஜப்பானில் இருந்து நாடுகடத்தப்பட்டவர். ஆனால் தனது கை ரேகைகளை மாற்றி அமைத்த பிறகு அவர் கடந்த ஆண்டு ஜப்பானுக்குள் நுழைந்தார்.

வேறு ஒரு குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட போது அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

இது போன்ற குற்றங்கள் பரவலாக நடப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஒருவரின் கைரேகையை மாற்றி அறுவை சிகிச்சை செய்வதற்கு இடைத் தரகர்கள் பெரும் பணத்தை பெற்றுக் கொள்கின்றனர் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

செய்தியரங்கம்
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா

'இலங்கைக்கு தற்போதைக்கு இந்திய எம்பிக்களை அனுப்புவது உசிதமல்ல'- எஸ்.எம்.கிருஷ்ணா

இலங்கையில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்து நேரில் அறிந்துகொள்ள, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அனுப்புவது உசிதமானது அல்ல என்று கருத்துத் தெரிவித்துள்ளார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா.

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில், இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் துவக்கி வைத்துப் பேசிய பாஜக உறுப்பினர் வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனைத்துக் கட்சிக் குழுவை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இந்த நிலையில், அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்புவது சரியாக இருக்குமா என்று கேட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாகப் பேசிய எஸ்.எம். கிருஷ்ணா, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்புவது குறித்து அரசு தீவிரமாக் பரிசீலிக்கும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களை 180 நாட்களுக்குள் மீள்குடியேற்றம் செய்வதாக இலங்கை அரசு உறுதியளித்துள்ள நிலையில், அதை நிறைவேற்ற வேண்டும் என இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சர் இன்று தெரிவித்தார்.

இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும், அதன் மூலம்தான் நிரந்தரத் தீர்வு காண முடியும் என்றும் கிருஷ்ணா தெரிவித்தார்.

இலங்கையில் சிங்களவர்களுக்கு இணையாக, சிறுபான்மை தமிழர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், இந்தியா அதைத் தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


எஸ்.பி. திஸாநாயக்க மீண்டும் கட்சி மாறினார்

இலங்கை ஜனாதிபதியுடன் எஸ்.பி.திஸாநாயக்க
இலங்கை ஜனாதிபதியுடன் எஸ்.பி.திஸாநாயக்க
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான எஸ்.பி.திஸாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இன்று விலகி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திடம் காணப்படும் குறைபாடுகள் காரணமாகவே தான் இந்த தீர்மானத்தை எடுத்தாகவும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரப்பகிர்வை ஏற்றுக்கொள்ளாத ஜெனரல் சரத் பொன்சேக்காவை ஆதரிக்க தான் விரும்பவில்லை என்றும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்கா வெற்றிபெற்றால் அவருடன் இணைந்து சில காலங்களுக்கு தேர்தலை நடத்தாமல் இராணுவ ஆட்சியை உருவாக்க மக்கள் விடுதலை முன்னணி சூழ்ச்சி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எந்த தீர்மானத்தையும் அறிவிக்காதுள்ள நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்தித்துள்ளார்.


குறைந்த விலையிலான தண்ணீர் வடிகட்டி

புதிய நீர் வடிகட்டியை அறிமுகப்படுத்தும் ரத்தன் டாடா
புதிய நீர் வடிகட்டியை அறிமுகப்படுத்தும் ரத்தன் டாடா
இந்தியப் பன்னாட்டு நிறுவனமான டாடா குழுமம் குறைந்த விலைக்கு கிடைக்கக் கூடிய புதிய தண்ணீர் வடிகட்டும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களை குறிவைத்து இது தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு மீட்டருக்கும் குறைவான இந்த குடிநீர் சுத்திகரிப்பு கருவி இயங்க மின்சாரமோ, தொடர்சியான தண்ணீர் விநியோகமோ தேவையில்லை.

இந்த சாதனத்தை தயாரிக்க 10 ஆண்டுகள் ஆனது. இந்த சாதனம் புதிய சந்தைகளை திறந்து விட்டிருப்பதாக டாடா கூறிகிறது.

உலகம் முழுதவதிலும் 90 கோடி பேர் சுத்தமான குடி நீர் கிடைக்காமல் உள்ளனர் என்றும் சுகாதார வசதி குறைவாக உள்ளதால், வயிற்றுப் போக்கு காரணமாக அதிக அளவிலானோர் இறக்கின்றனர் என்றும் ஐ நா கூறியுள்ளது.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates