jkr

செய்தியறிக்கை


குண்டு வெடித்த இடம் ஒன்று
குண்டு வெடித்த இடம் ஒன்று

பாக்தாத் குண்டுத்தாக்குதலில் 127 பேர் பலி

இராக்கிய தலைநகர் பாக்தாதில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான கார் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 127 பேர் கொல்லப்பட்டதுடன், 440 பேர் காயமடைந்துள்ளனர்.

நகரின் வெவ்வேறு பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நான்கு குண்டுகள் வெடிக்கவைக்கப்பட்டன.

அவை அனைத்தும் தொழில் அமைச்சு உட்பட அரச அலுவலகங்களையோ அல்லது பல்கலைக்கழகங்களையோ இலக்கு வைத்துத்தான் நடத்தப்பட்டுள்ளன.

இராக்கிய நாடாளுமன்றம் புதிய தேர்தல் சட்டம் ஒன்றுக்கு இறுதியாக அங்கீகாரம் வழங்கிய மறுதினம் இந்த குண்டு வெடிப்புக்கள் நடந்துள்ளன.

தற்போது அடுத்த வருடம் மார்ச் மாதம் 6 ஆம் திகதி தேர்தல் நடக்கவுள்ளது.

இந்தக் குண்டுவெடிப்புக்கள் குறித்து ஆராயுமுகமாக இராக்கிய நாடாளுமன்றம் அவசர அமர்வைக் கூட்டியுள்ளது.


அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆப்கான் விஜயம்

கேட்ஸ்
கேட்ஸ்
ஆப்கானுக்கு மேலதிகமாக முப்பதினாயிரம் படையினரை அனுப்பப்போவதாக அமெரிக்க அறிவித்ததன் ஒரு வாரத்தின் பின்னர் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் றொபர்ட்ஸ் கேட்ஸ் அவர்கள் ஆப்கானில் அதிபர் கர்சாயுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

ஆப்கானிய பிரச்சினையை ஒரு நீண்டகால இழுபறிநிலை என்று வர்ணித்த கேட்ஸ் அவர்கள், அமெரிக்கா இந்த விடயத்தில் ஆப்கானுக்கு உதவும் என்றும், ஆனால், கர்சாய் அவர்கள் ஊழல் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதனைச் செய்ய தான் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக கூறிய கர்சாய் அவர்கள், தனது அமைச்சரவையின் முழுமையான பட்டியல் அடுத்த புதனன்று வெளியாகும் என்றும் குறிப்பிட்டார்.

ஆப்கான் தனது படைகளுகளுக்கு தானே ஊதியம் வழங்க 15 வருடங்கள் பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.


பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தின் மீது ஆப்கான் படையினர் தாக்குதல்

ஆப்கான் சிப்பாய் ஒருவர்
ஆப்கான் சிப்பாய் ஒருவர்
நேட்டோ படைகளின் நடவடிக்கை ஒன்றின்போது பொதுமக்கள் கொல்லப்பட்டதை கண்டித்து கிராமவாசிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக ஆப்கானில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

ஆப்கான் சிப்பாய் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும், ஆனால் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

நேட்டோ நடவடிக்கையில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கான் அரசாங்கம் கூறுகிறது.

ஆனால், தலிபான்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையில், 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 4 பேர் தடுத்து வைக்கப்பட்டதாகவும் நேட்டோ கூறுகிறது.


வெப்பம் மிகுந்த தசாப்தம்

தகிக்கும் உலகம்
தகிக்கும் உலகம்
உலகில் வெப்பநிலை குறித்த பதிவுகள் ஆரம்பித்த கடந்த 160 வருட காலத்தில் இந்த தசாப்தந்தான் ஆகக்கூடுதலான வெப்பம் மிகுந்த தசாப்தம் என்று உலக காலநிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

காலநிலைமாற்றம் குறித்த கோப்பன்ஹெகன் மாநாட்டில் உலக வானிலை ஆய்வு அமைப்பும், பிரிட்டனின் வானிலை அலுவலகமும் தமது கண்டுபிடிப்புக்களை சமர்ப்பித்தன.

அவர்கள் வழங்கிய புள்ளிவிபரங்கள் கடந்த 4 தசாப்தங்களில் உலக வெப்பநிலை திடமாக அதிகரித்து வந்திருப்பதை காண்பிக்கின்றன.

பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் மின் அஞ்சல்களை கைப்பற்றி வெளிக்கொணர்ந்த அண்மைய சர்ச்சையின் போது வெளியான வெப்பநிலை பதிவுகள் குறித்தும் அங்கு சில விவாதங்கள் நடந்தன.

ஆனால், உலகம் சூடாகின்றது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது என்று உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு கூறுகின்றது.

செய்தியரங்கம்
ராபர்ட் பிளேக்
ராபர்ட் பிளேக்

இலங்கை நிலவரம் பற்றிய செனட் அறிக்கை - அமெரிக்க இராஜதந்திரி இலங்கை விஜயம்

அமெரிக்காவின் மூத்த இராஜதந்தரிகளில் ஒருவரான ரொபர்ட் பிளேக் இலங்கையில் போருக்குப் பின்னரான மீள் இணக்க முயற்சிகளை ஊக்குவிக்கும் முயற்சியில் இலங்கை சென்றுள்ளார்.

இந்த வருட ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் முதற் தடவையாக இலங்கை சென்றுள்ளார்.

இலங்கை நிலவரம் தொடர்பில் அமெரிக்காவின் செனட் சபை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் விடயங்களில் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக தமிழர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்ற முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவை குறித்த மேலதிக தகவல்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் விவசாய முயற்சிகளில்

வடக்கு கிராமம் ஒன்று
வடக்கு கிராமம் ஒன்று
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளவர்கள் விவசாய முயற்சிளில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவில் பத்தாயிரம் பேர் இதுவரையில் மீளக்குடியமர்த்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். இவர்களில் நாலாயிரம் குடும்பங்கள் நெற்செய்கை மற்றும் காய்கறிச் செய்கையில் தற்போது ஈடுபட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தெரிவித்திருக்கின்றார்.

நெற்செய்கைக்கென இரண்டு ஏக்கர் காணியும், தோட்டச் செய்கைக்கென ஒரு ஏக்கரும் அதிகாரிகளினால் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. தோட்டச் செய்கையில் 2000 விவசாயிகள் ஈடுபட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


ஆந்திராவை பிரித்து தெலுங்கனா என்ற தனி மாநிலம் அமைய வேண்டுமென கோரும் போராட்டம்

எல்லை வரைபடம்
எல்லை வரைபடம்
தென் மாநிலமான ஆந்திராவில், 10 மாவட்டங்களைக் கொண்டு தெலுங்கானா என்ற தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, டிஆர்எஸ் எனப்படும் தெலங்கான ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தொடர்ந்து 10வது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடரும் நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது.

உடல்நிலை மோசமடைந்து வருவதால், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர்களின் அறிவுறுத்தலையும் சந்திரசேகர் ராவ் நிராகரித்துவிட்டார்.

ராவின் இரத்தப் பரிசோதனை, அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதை உறுதி செய்திருப்பதாகவும், உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தால் நிலைமை மேலும் மோசமாகும் என்றும், அது அவரது உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என்றும் சந்திரசேகர் ராவ் சிகிச்சை பெற்று வரும் மருத்துவனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என அரசு உறுதியளித்தால்தான் தனது உண்ணாவிரதத்தை நிறுத்தப் போவதாக ராவ் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆந்திர மாநில தலைநகரான ஹைதராபாத்தை உள்ளடக்கிய 10 மாவட்டங்களைக் கொண்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates