jkr

செய்தியறிக்கை


 அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன்
அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன்

காலநிலை விவகாரத்தில் வறிய நாடுகளுக்கு அமெரிக்கா உதவி அறிவிப்பு

வறிய நாடுகள் காலநிலை மாற்றம் குறித்த விவகாரத்தை கையள்வதற்காக உதவும் வகையில் வருடாந்தம் 100 பில்லியன் டாலர்களை வழங்குவோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்த உறுதிமொழி, மிகவும் முக்கியத்துவம் மிக்கது என்று பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுண் விவரித்துள்ளார்.

கார்பன் வெட்டு இலக்குகள் குறித்தும், வளரும் நாடுகளுக்கு செல்வந்த நாடுகள் இந்த விடயத்தில் எவ்வளவு உதவலாம் என்பது குறித்தும், தம்மால் அறிவிக்கப்பட்ட இலக்குகளை கோபன்ஹேகன் மாநாடு எட்டுமா என்ற சந்தேகம் வலுத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அந்த மாநாடு தனது இறுதி இரு நாட்களுக்குள் தற்போது நுழைந்துள்ளது. ஆனால், இன்னமும் கலந்துகொண்டோர் மத்தியில் பெரும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.


ஏமனில் அல்கயீதாவினருக்கு எதிரான நடவடிக்கை

ஏமன் நாட்டுப் படையினர்
ஏமன் நாட்டுப் படையினர்
ஏமன் நாட்டின் வடக்கிலும் , தெற்கிலும் மூன்று இடங்களில் உள்ள பயிற்சித்தளங்கள் மற்றும் மறைவிடங்களில் விமானப்படையின் ஆதரவுடன், தமது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 34 அல்கயீதாவினர் கொல்லப்பட்டதாகவும், 17 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஏமன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பள்ளிக்கூடங்கள் உட்பட உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள இலக்குகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை நடத்த அந்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

இவை குறித்து பக்கசார்பற்ற வகையில் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆனால், உள்ளூரில் உள்ள பாதுகாப்பு துறையினரின் இலக்குகள் மீது அண்மைய மாதங்களில் அல்கயீதாவினர் பல தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

ஏமன் அல் கைதாவினரின் பலம் மிக்க இடமாக மாறிவருவது குறித்து அமெரிக்க கவலை வெளியிட்டிருந்தது.


அயர்லாந்து ஆயர் இராஜினாமா

டொனால் முரே
டொனால் முரே
அயர்லாந்தில் சிறார் துஷ்பிரயோகம் குறித்த ஊழலை கையாண்ட விதம் குறித்து கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான ஐரிஷ் ஆயர் ஒருவர் இராஜினாமா செய்துள்ளார்.

இந்த துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரித்த குழுவால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட, தற்போது சேவையில் உள்ள 5 ஆயர்களில் ரோமன் கத்தோலிக்க லைம்றிக் ஆயரான டொனால் முரேயும் ஒருவர்.

சிறாரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு பயன்படுத்தியதாக ஒரு பாதிரியார் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரிக்க இவர் தவறிவிட்டார்.

இந்தக் குற்றம் ''மன்னிக்க முடியாதது'' என்று அந்த விசாரணைக் குழு கூறுகிறது.

லைம்றிக்கில் செண்ட் ஜோண்ஸ் தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் தனது இராஜினாமாவை அறிவித்த ஆயர், சிறாராக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அனைவரிடமும் தான் தாழ்மையுடன் மன்னிப்புக் கோருவதாக தெரிவித்தார்.

இந்த ஆயரின் இராஜினாமாவை பாப்பரசர் ஏற்றுக்கொண்டதாக வத்திக்கான் திருச்சபை கூறியுள்ளது.


பாகிஸ்தான் தாக்குதலில் 12 பேர் பலி

அமெரிக்க ஆளில்லா விமானம்
அமெரிக்க ஆளில்லா விமானம்
பாகிஸ்தானின் வட மேற்கே நடைபெற்ற இரு வேறு அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்களில் தாலிபான் கிளர்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் 12 நபர்கள் கொல்லப்பட்டு விட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் நடத்தப்பட்ட கடைசி ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னதாக உள்ளூர் பழங்குடியினத்தவரின் வீடுகள் மீது ஆளின்றி பறக்கும் விமானம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.

கடந்த சில மாதங்களில் இப்பகுதியில் இது போன்று ஆளில்லா விமானங்களின் மூலம் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

செய்தியரங்கம்
வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வந்த தற்போதைய ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ
வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வந்த தற்போதைய ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 22 பேர் போட்டி

இலங்கையில் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 22 பேரது மனுக்கள் தேர்தல் ஆணையரால் ஏற்கப்பட்டுள்ளன.

தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருக்கு எதிராக, ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஓய்வு பெற்ற இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் உட்பட 23 பேர் இன்று வேட்பு மனுக்கள் இன்று தேர்தல் ஆணையரிடம் கையளிக்கப்பட்டன.

மொத்தம் 23 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் ஒரு வேட்பாளரின் வேட்புமனு தேர்தல் ஆணையரால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, இப்போது 22 பேர் களத்தில் உள்ளனர்.

ஒரு புத்த பிக்கு, இடதுசாரி முன்னணி வேட்பாளர் கலாநிதி விக்ரமபாகு கருணரத்ன, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


வரிச்சலுகைத் தொடர்பில் வாக்குறுதியை மீறியது இலங்கை என்று ஐரோப்பிய ஆணையம் குற்றச்சாட்டு

இலங்கையிலிருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அளிக்கப்படும் ஜி எஸ் பி பிளஸ் எனப்படும் ஏற்றுமதி வரிச்சலுகை தொடர்பில் கொடுத்த வக்குறுதியை இலங்கை கடைபிடிக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வரிச்சலுகையை பெறும் நாடுகள் சர்வதேச அளவுகோலின் படி மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இலங்கை அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்று ஐரோப்பிய ஆணையம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, அந்த அமைப்பின் வர்த்தகத் துறையின் பேச்சாளர் கிறிஸ்டியானா ஹொஹ்மேன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த விசாரணையை அடுத்து, இலங்கைக்கு அளித்து வரும் வரிச்சலுகையை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கும் வகையில் ஒரு பிரேரணையை ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதன் மீது முடிவெடுக்க உறுப்பு நாடுகளுக்கு இரண்டு மாதம் கால அவகாசம் உள்ளது. அந்த முடிவு வெளியான பிறகு அதை நடைமுறை படுத்த ஆறுமாத காலம் ஆகும்.

ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய விசாரணையில் தமது தரப்பு கருத்துக்களையும் வழங்க இலங்கைக்கு ஐரோப்பிய ஆணையம் அழைப்பு விடுத்தது. ஆனாலும் இலங்கை அரசு ஒத்துழைக்க மறுத்துவிட்டது என்றும் ஐரோப்பிய ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய விசாரணைகளில், இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் குறிப்பிட்ட அளவில் குறைபாடுகள் இருக்கின்றன என்று தெரியவந்துள்ளது.


இழுபறியில் காலநிலை மாநாடு

காலநிலை மாற்றம் தொடர்பிலான ஐ.நா மன்ற மாநாட்டின் இறுதியில் சர்வதேச நாடுகளை கட்டுப்படுத்தக்கூடிய ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவாக இருப்பதாகவே அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த மாநாட்டின் இறுதி ஒப்பந்தம் அல்லது பிரகடனம் குறித்த வரைவு நகலை வடிவமைப்பதில் இன்று காலையில் பெரும் குழப்பம் நிலவியது. அத்துடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்ததைப்போல இந்த மாநாட்டின் இறுதி நாளான நாளை கலந்துகொள்ள மாட்டார் என்று ஊகங்கள் எழுந்தன.

மாநாட்டில் கலந்துகொண்ட பல நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தைகளில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர்.

ஜெர்மனியின் அரச தலைவர் அங்கெலா மெர்கல், ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட், மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் உள்ளிட்ட பல தலைவர்கள் உலக மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் முடிவு இந்த மாநாட்டின் இறுதியில் ஏற்படாமலே போகலாம் என்று எச்சரித்துள்ளனர்.

தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையில் இந்த மாநாட்டில் காணப்படும் பரஸ்பர நம்பகமற்ற தன்மையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

இந்த மாநாட்டை நடத்தும் டேனிஷ் அரசின் நடவடிக்கையும் இந்த பிளவை மேலும் அதிகப்படுத்தியது என்று கூறலாம். அதாவது கடந்த ஒரு ஆண்டு காலமாக சர்வதேச மட்டத்தில் விவாதிக்கப்பட்டுவந்த மாநாட்டு இறுதி ஒப்பந்தத்தின் நகலுக்கு மாற்றாக, டேனிஷ் அரசு தயாரித்து வைத்த நகல் அறிக்கையை மற்றைய நாடுகள் மீது திணிப்பதற்கு டேனிஷ் அரசு செய்த முயற்சிகள் சிக்கலை மேலும் அதிகப்படுத்தி விட்டது.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates