jkr

ஈ.பி.டி.பி.யினருடன் அரசாங்கத்திற்கு எந்தவித இரகசிய உடன்பாடுமில்லை-அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா


ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து இரண்டு வாரங்களில் எதிர்க்கட்சியிலிருந்து பலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளனர். சுய நினைவுள்ள எவரும் அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியினருடன் இணைந்து கொள்ள மாட்டார்கள் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

ஈ.பி.டி.பி. யினருடன் அரசாங்கத்திற்கு எந்தவித இரகசிய உடன்படிக்கையுமில்லை. அதேவேளை நமது நாட்டுக்கு பொருத்தமானதும் அனைத்து பிரிவினரும் ஏற்றுக் கொள்வதுமான ஓர் அரசியல் தீர்வை நாம் முன்வைப்போம் எனவும் அவர் கூறினார். நேற்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,.

ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்ட கால ஆதரவாளர்களும் அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் எம்மோடு இணைந்திருக்கின்றார்கள். தொடர்ந்தும் இணைந்த வண்ணம் இருக்கின்றார்கள். இந்த நிலைமையானது எதிர்க்கட்சியின் வீழ்ச்சியை எடுத்துக் காட்டுகிறது. எமது அரசாங்கம் கிராமிய மட்டத்திலிருந்து நகர்ப்புறம் வரையிலான பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை செய்து வருகிறது. அதன் விளைவாகவே சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் எம்மோடு இணைந்து ஆதரவு வழங்கி வருகின்றன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டுமென்று ஆரம்பத்திலிருந்து கூறி வரும் ஜே.வி.பி. யும் அந்த அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நன்கு அனுபவித்து வந்த ஐ.தே.க. வும் தற்போது ஒன்றிணைந்து பொது வேட்பாளர் ஒருவரை களத்தில் நிறுத்தியுள்ளன. ஆனால் உண்மையில் இவர்களின் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாதுள்ளது..

இந்த இரண்டு கட்சிகளும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காகவே பொது வேட்பாளரை ஆதரிப்பதாக கூறியுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த குறித்த பொது வேட்பாளர் வில்லியம் கோபல்லாவையை போன்ற ஒரு ஜனாதிபதி பதவியை நான் விரும்பவில்லை என தெரிவித்திருந்தார்..

இதிலிருந்து என்ன புலப்படுகின்றது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை பொது வேட்பாளரும் விரும்புகின்றார். இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பொது நோக்கம் எப்படி நிறைவேறப் போகிறது. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டுமானால் அதற்கு சிறந்த ஒருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஆவார்..

நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் நாட்டிற்கு செய்ய வேண்டிய பிரதான கடமையை அவர் தற்போது செய்து முடித்துள்ளார். ஆகையால் மீண்டும் அவரை தெரிவு செய்து ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினாலேயே 3 தசாப்த காலங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட முடிந்தது. தற்போது நாட்டில் பயங்கரவாதம் இல்லை. ஆகையால் அவரால் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு நல்ல சந்தர்ப்பம் உள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஈ.பி.டி.பி.யினருடன் அரசாங்கத்திற்கு எந்தவித இரகசிய உடன்பாடுமில்லை-அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates