jkr

இந்திய கடலோரக் காவல் படை வீரர்களைக் கடத்திய சிங்களப் படகு தீப்பிடித்து எரிந்தது


டெல்லி: இந்திய கடலோரக் காவல் படை வீரர்கள் இருவரைக் கடத்திச் சென்ற சிங்கள மீனவர்களின் படகு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது. அதில் இருந்த மீனவர்கள் நிலை குறித்துத் தெரியவில்லை.

கடந்த புதன்கிழமை இரவு, இந்திய கடல் பகுதிக்குள் சட்டத்துக்கு விரோதமாக புகுந்த சிங்கள மீனவர்களின் 7 படகுகளை, இந்திய கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்தனர்.

பின்னர், அந்த படகுகளையும், அதிலிருந்த 35 சிங்கள மீனவர்களையும், இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் பாதுகாப்புடன் காக்கிநாடா துறைமுகத்துக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிங்கள மீன்பிடி படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. அப்போது, சிங்கள மீனவர்கள் 3 பேர் இருந்த வின்மரைன் என்ற படகையும், அதில் வந்த கமாண்டோ வீரர்கள் சதீஷ்குமார், குந்தா இருவரையும் காணவில்லை. கமாண்டோ வீரர்களுடன் இருந்த தொடர்பும் துண்டிக்கப்பட்டது.

இதனால், அவர்களின் கதி என்ன என்பது தெரியாமல் இருந்தது. இதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, நடுக்கடலில் சிங்கள மீனவர்கள் படகில் இருந்த கமாண்டோ வீரர்கள் இருவரையும் கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். அப்போதுதான் வின்மரைன் படகில் வந்த 3 சிங்கள மீனவர்கள் நடுக்கடலில் இந்திய கமாண்டோ வீரர்களை கடத்திச் சென்றதும், அவர்களை அடித்து உதைத்து காயப்படுத்தியதும் தெரியவந்தது.

தாக்குதல் காரணமாக காயமடைந்த கமாண்டோ வீரர்கள் சதீஷ்குமார், குந்தா இருவருக்கும் கப்பலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர்கள் உடல் நலம் தேறி வருகிறார்கள்.

வின்மரைனில் இருந்த சிங்கள மீனவர்கள் 3 பேரும் இந்திய கடலோர காவல்படையிடம் சரணடைய மறுத்து விட்டனர்.

இதனிடையே, சிங்கள மீனவர்களின் மீன்பிடி படகு நேற்று முன்தினம் நள்ளிரவில் நடுக்கடலில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதில் அந்த படகு பலத்த சேதமடைந்தது.

இது பற்றி இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் பி.வி. சதீஷ் கூறுகையில்,

நேற்று முன்தினம் இரவு இலங்கை மீன்பிடி படகான வின்மரைனின் மேல் தளம் தீப்பிடித்து எரிவது தெரிந்தது. அதில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் கடலுக்குள் எங்கும் தத்தளிக்கிறார்களா? என்று தேடி வருகிறோம்.

அந்த படகில் இருப்பவர்களை மீட்க கடற்படை விமானமும், கடலோர காவல் படையின் சில கப்பல்களும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. எனினும், கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அவை தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பி விட்டன.

கடலில் சீற்றம் அதிகம் காணப்படுவதால், தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மீன்பிடி படகு தேடி கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்திய போர்க்கப்பலில் இருந்தவர்களும், இலங்கை அதிகாரிகளும் மீன்பிடி படகில் இருந்தவர்களை சமாதானப்படுத்தி இந்திய துறைமுகத்துக்கு கொண்டு வர முயற்சி செய்தனர்.

ஆனால், அந்த அறிவுரையை மீன்பிடி படகில் இருந்தவர்கள் ஏற்கவில்லை. அந்த படகு சென்னைக்கு அருகே தென்கிழக்கே 100 நாட்டிக்கல் மைல் தொலைவில் இருந்தபோது நள்ளிரவு வாக்கில் தீப்பிடித்துக் கொண்டது என்றார்.

படகுக்குத் தீவைத்து விட்டு மீனவர்கள் கடலில் குதித்து நீந்தித் தப்ப முயற்சித்திருக்கலாம் என்று தெரிகிறது. அதேசமயம், இது விபத்தாக இருந்தால் அதில் இருந்த மூன்று மீனவர்களும் என்ன ஆனார்கள் என்பது குறித்துத் தெரியவி்ல்லை.

இதனிடையே பிடிபட்ட படகுகளிலும், அதிலிருந்த 32 மீனவர்களும் இந்திய கடலோர காவல் படை கப்பல்களின் உதவியுடன், ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இந்திய கடலோரக் காவல் படை வீரர்களைக் கடத்திய சிங்களப் படகு தீப்பிடித்து எரிந்தது"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates