jkr

செய்தியறிக்கை


முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர்
முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர்

இராக் போரை நியாயப்படுத்தும் டோனி பிளேரின் வாதங்களில் உண்மையில்லை - ஐ.நா ஆயுதக் கண்காணிப்புக் குழு தலைவர்

இராக் மீதான படையெடுப்பை நியாயப்படுத்த முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் தற்போது முன்வைக்கும் புதிய வாதங்களில் உண்மையின் வலிமை இல்லை என இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் உள்ளனவா என்பதைத் தேடிவந்த ஐ.நா. ஆயுதக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹன்ஸ் பிளிக்ஸ் கூறியுள்ளார்.

நாளை ஞாயிறன்று ஒளிபரப்பப்படவுள்ள ஒரு பிபிசி பேட்டிக்காக பேசிய பிளேர், மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு இராக் ஒரு அச்சுறுத்தலாக இருந்துவந்தது என்றும், இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்று தனக்கு முன்கூட்டியே தெரியவந்திருந்தாலும்கூட பிரிட்டன் அந்நாட்டின் மீது படையெடுப்பதற்கான உத்தரவை தான் வழங்கியிருக்கவே செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

இராக் பேரழிவு ஆயுதங்களை வைத்துள்ளது என்ற வாதத்தின் அடிப்படையில்தான் அதன் மீது படையெடுப்பு செய்வதை அத்தருணத்தில் பிளேர் நியாயப்படுத்திவந்தார் என்றும், அதுவன்றி யுத்தத்துக்கு பிற நியயமான காரணங்களும் இருக்கவே செய்வதாக பிளேர் இப்போது கூறுவது அவர் மீதான நம்பகத்தன்மைக்கு ஏற்றதாக இல்லை என்றும் ஹன்ஸ் பிளிக்ஸ் கூறியுள்ளார்.


இராக் எண்ணெய் வயல்கள் ஏலம்

இராக் எண்ணெய் வயல் ஒன்று
இராக் எண்ணெய் வயல் ஒன்று

இராக்கில் உள்ள எண்ணெய் வயல்களின் இரண்டாவது ஏலம் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதில் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் 7 மாபெரும் எண்ணெய் வயல்களை வென்றுள்ளன.

இதன் மூலம் அடுத்த 7 ஆண்டுகளில் இராக்கின் எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றுக்கு ஐம்பது லட்சம் பேரல்களாக உயரும் என்றும் இராக் எண்ணெய் வள அமைச்சர் ஹுசைன் அல் ஷாரிஸ்தானி தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றை ரஷ்யாவை சேர்ந்த லுக்காயில் மற்றும் நார்வேவின் ஸ்டேடாயில் நிறுவனங்கள் இணைந்து வென்றுள்ளன. மற்றுமொரு பெரிய ஒப்பந்தத்தை ராயல் டச் ஷெல் மற்றும் மலேஷியாவின் பெட்ரோனாஸ் நிறுவனங்கள் இணைந்து வென்றுள்ளன.

மத்திய மற்றும் வடக்கு இராக்கில் இருக்கின்ற பல எண்ணெய் வயல்களை ஏலத்தில் யாரும் கோரவில்லை. இது இந்த நிறுவனங்களுக்கு அந்த பகுதியில் இருக்கும் பாதுகாப்பு மற்றும் வியாபார கவலைகளை காட்டுகிறது.


தெற்கு வாசிரிஸ்தான் இராணுவ நடவடிக்கை முடிவடைந்து விட்டது - பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தான் இராணுவச் சிப்பாய்
பாகிஸ்தான் இராணுவச் சிப்பாய்

பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதியான தெற்கு வாசிரிஸ்தானில் அந்நாட்டின் இராணுவம் எடுத்துவந்த இராணுவ நடவடிக்கை நிறைவுற்றுவிட்டது என்றும் அடுத்ததாக வடக்கிலுள்ள இன்னொரு பழங்குடியினப் பிராந்தியத்தில் இராணுவம் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நாட்டின் பிரதமர் யூஸுஃப் ரஸா கிலானி கூறுகிறார்.

லாகூர் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓரக்ஸாய் என்ற இடத்துக்கு இராணுவ நடவடிக்கை தற்போது நகரலாம் என்று குறிப்புணர்த்தினார்.

தெற்கு வாசிரிஸ்தானில் இருந்த பல ஆயுததாரிகள் தற்போது ஓரக்ஸாய்க்கு தப்பியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இப்பகுதியில் கிளர்ச்சிக்காரர்களின் இலக்குகள் மீது பாகிஸ்தான் படையினர் அண்மையில் வான் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

பாகிஸ்தான் இராணுவம் தெற்கு வாசிரிஸ்தான் பகுதியில் இருந்து வெளியேறுகிறது என்பது பிரதமர் கிலானியின் கூற்றுக்குப் பொருள் அல்ல என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.


வடகொரியாவில் இருந்து வந்த விமானத்தில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் - தாய்லாந்து பொலிஸார்

தாய்லாந்து பொலிஸார்
தாய்லாந்து பொலிஸார்

வடகொரியாவில் இருந்து வந்த சரக்கு விமானத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ எடையுள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்துள்ளதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பியோங்யாங்கில் புறப்பட்ட இந்த விமானம் பாங்காக் உள்நாட்டு முனையத்தில் எரிப்பொருள் நிரப்ப தரையிறங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று விவரித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பெலராஸை சேர்ந்தவர்கள் என்று ஒரு செய்தி கூறுகிறது.

விமானம் எங்கு சென்று சேர முற்பட்டது என்பது தெரியவில்லை.

இதற்கிடையே, மாட்ரிட் ரயில் குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய போலி கடவுச் சீட்டு விபரம் தொடர்பில் பலரை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செய்தியரங்கம்
ஆர்ப்பாட்டங்கள்
ஆர்ப்பாட்டங்கள்

தெலுங்கானா உருவாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 20 அமைச்சர்கள் ராஜினாமா

இந்தியாவின் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்து தனி மாநிலத்தை உருவாக்குவது என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக அந்த மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் பலர் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ள நிலையில், இதே பிரச்சனையை முன்வைத்து 20 அமைச்சர்கள் பதவி விலக முன்வந்துள்ளனர்.

இவர்கள் ராயல்சீமா மற்றும் ஆந்திரா பகுதியை சேர்ந்தவர்கள். இந்த ராஜினாமாக்கள் இதுவரை ஏற்கப்படவில்லை. மாநிலத்தை பிரிக்கக் கூடாது என்று கூறும் எம் எல் ஏக்கள் மற்றும் அமைச்சர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் மாநில முதல்வர் இறங்கியுள்ளார்.

இது குறித்த செய்திகளையும் இந்தப் பிரச்சனையை காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் சரியாக கையாளவில்லை என்று எழுந்துள்ள விமர்சனம் குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஞானதேசிகன் அளித்த செவ்வியையும் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


காணாமல் போன இரு இலங்கை மீனவர்களை தேடும் முயற்சி தொடர்கிறது

மீனவர்கள்
மீனவர்கள்

இலங்கையில் திருகோணமலை மீனவர் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் 22ம் தேதி மெரைன் 8 என்ற படகில் சென்ற சிலாபம் தொடுவாவ மீனவர் கிராமத்தை சேர்ந்த இலங்கை மீனவர்களில் மூவர் தற்போது இந்திய கடலோர காவற்படையின் தடுப்புக் காவலில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த படகுடன் அதில் இருந்த ஏனைய மீனவர்கள் இருவரும் எந்த இடத்தில் உள்ளனர் என்பது தொடர்பில் தகவல் எதுவும் இல்லாத நிலையே நீடிக்கின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக இலங்கையின் பிரதி மீன்படித்துறை அமைச்சர் நியோமால் பெரெரா கூறும்போது, கப்பலை தேடும் பணியில் இலங்கை இந்திய கடற்படையினர் ஈடுப்பட்டிருப்பதாகவும், இந்திய வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக கூறினார்.

இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


சரத் பொன்சேகாவை ஆதரிக்க ரணில் யாழ்ப்பாணத்தில் கோரிக்கை

ரணில் விக்ரமசிங்க
ரணில் விக்ரமசிங்க

இலங்கை எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க சனிக்கிழமையன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு, ஐக்கிய தேசியக் முன்ணணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சரத் பொன்சேகாவை ஆதரிக்குமாறு கேட்டு கொண்டார்.

தான் ஆட்சிக்கு வந்தால் சரத் பொன்சேகா மூலமாக அரசியல் சாசனத்தை மாற்றியமைத்து, புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதன் மூலம் இனப்பிரச்சனையை தீர்ப்பேன் என்றும் ரணில் விக்ரமசிங்க அப்போது கூறினார்.

மேலும் கடந்த முறை ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தது போன்ற தவறை இந்த முறையும் தமிழ்மக்கள் செய்து விட கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates