jkr

வெற்றி பெற்றதும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும்- ஜெனரல் பொன்சேகா


உழைக்கும் வர்க்கத்தினரின் நிலைமைகளை நன்கு அறிவேன். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் அரச ஊழியர்களின் சம்பளம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும். அதேபோல் தனியார் துறை மற்றும் தோட்டத் தொழிலாளர் விடயத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதுடன் ஓய்வூதியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நிவாரணங்கள் வழங்கப்படும் என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். யுத்தத்தின் வெற்றி தனக்கே உரியது என்றும் தானே மன்னன் என்றும் கூறிக் கொண்டு பொது மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு கட் அவுட்களை வைப்பதில் பயனில்லை. இது மக்கள் சேவையல்ல.

இந்த நிலையை மாற்றியமைப்பதுடன் விடுதலை பெற்ற நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே எனது பணி என்றும் அவர் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார். கட்சியின் பிரதித் தவிசாளரும் தேசிய ஊழியர் சங்கத் தலைவருமான காமினி ஜயவிக்கிரம பெரேரா எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, சிரேஷ்ட உபதலைவர் ஜோன் அமரதுங்க, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாலித்த ரங்கே பண்டார, விஜேதாச ராஜபக்ஷ உள்ளிட்ட எம்.பி.க்கள் மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

ஜெனரல் சரத் பொன்சேகா இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:

நாட்டின் ஜனநாயகத்துக்கு தொழிற்சங்கம் அவசியமானது என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். கடந்த காலங்களில் தொழிற்சங்கங்கள் எந்தளவுக்கு அச்சுறுத்தப்பட்டன; ஒடுக்கப்பட்டன என்பதையும் அதேபோல் அந்த சங்கங்களின் கோரிக்கைகள் மறுக்கப்பட்ட விடயங்களையும் நான் அறிவேன். உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் பின்நிற்கக் கூடாது. இந்நாட்டில் உண்மையான ஜனநாயகம் இல்லை என்பதாலேயே இவ்வாறான சிக்கல்கள் எழுகின்றன.

எனவே தான் நான் மக்கள் செல்வாக்கினால் ஜனாதிபதியானதும் எனது முதற் பணியாக நாட்டில் இல்லாது செய்யப்பட்டுள்ள ஜனநாயகத்தை மீண்டும் ஸ்தாபித்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நல்லாட்சியொன்றை உறுதிப்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கிறேன். இன்னும் ஒன்றரை வருடங்கள் இராணுவ சேவையில் நீடித்துக் கொண்டும் சொகுசாகவும் இருந்திருக்க என்னால் முடியும். ஆனால், அதனை நான் விரும்பவில்லை. மீட்டெடுக்கப்பட்ட இந்நாட்டில் நிர்வாம் சரியில்லை. அதன் போக்கு தெளிவில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் சீரான வேலைத் திட்டங்கள் இல்லை. இதனைப் பார்த்துக் கொண்டிருக்க என்னால் சகிக்கவில்லை. இந்த நிலைமைகளை மாற்றியமைக்க வேண்டும் என்பதாலேயே நான் அரசியல் பாதையில் அடிவைத்தேன்.

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு நிறைவேற்று அதிகாரமே முழுக் காரணமாகும். அந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு நீதியையும் ஜனநாயகத்தையும் எதிர்பார்க்க முடியாது. எனவே, இந்த மோசமான அதிகாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டும். நான் ஜனாதிபதியானதன் பின்னர் அதனை நிறைவேற்றிக் காட்டுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்பட்டதுடன், எனது பணி முடிந்து விடாது. அதன் பின்னர் நாட்டில் சிறந்ததொரு நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும்.

17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இராணுவம் மற்றும் பொலிஸ் துறை அரசியல் மயப்படுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அந்த வகையில் நீதியான தேர்தல்களை நடத்துவதுடன் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை சுதந்திரமானதும் நீதியானதுமாக நடத்தி அதன் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று அரசியலமைப்புச் சபையை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், அமையவிருக்கும் புதிய அரசாங்கம் எவ்வாறான பணிகளை மேற்கொள்கின்றது என்பதை அவதானிப்பதற்கும் அதில் ஆலோசணைகளை தெரிவிப்பதற்கான அதிகாரங்களையும் நிறைவேற்று அதிகாரமற்ற ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான நடவடிக்கையும் அவசியமானது. ஏனெனில் மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் நான் சுகபோகங்களுடன் மாத்திரம் இருப்பதற்கு தயாரில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்கான தேவை எனக்கும் இருக்கின்றது.இதன் மூலம் அச்சம், சந்தேகம்ற வகையிலான எதிர்கால சந்ததியினருக்கு ஏற்ற இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு எல்லா வகையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.யுத்தம் நிறைவடைந்து விட்டது. ஆனால், அதன் வெற்றி தனக்கே உரியது என்று உரிமை கொண்டாடுபவர்கள் நாடு முழுதும் கட்அவுட்களை வைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனைப் பார்த்து மக்கள் முகம் சுழிக்கின்றனர். இந்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நிலைமைகள் தொடர்பில் உண்மையான அக்கறை இன்றைய நிர்வாகத்திடம் இல்லை. இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் வாழ்வியல் விடயங்களிலும் அதோபோல் கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் எந்த விதமான தீர்வுகளும் அரசிடம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. ஆனால் சேறுபூசும் நடவடிக்கைகள் மாத்திரம் சரியாக நடைபெறுகின்றன.

உழைக்கும் வர்க்கத்தினரின், குறைந்த வருமானம் பெறுவோரின் நிலைமைகள் கவனிக்கப்படவில்லை. இன்றைய வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகமானது. அதற்கேற்றாற் போல் வருமானம் கிடையாது. எனவே, அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைந்தது 10 ஆயிரம் ரூபாவில் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளேன். அதேபோல் தனியார் துறை இன்று பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. தொழில் இழப்புக்கள், நிறுவனங்கள் மூடப்படுதல் மற்றும் நிறுவனங்கள் நட்டமடைதல் ஆகியவற்றுக்கு இலஞ்சமே முக்கிய காரணமாகும். இதனை ஒழிப்பதன் மூலம் தனியார் துறை ஊக்குவிப்பதுடன் நிவாரணங்களையும் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், தனியார் துறை ஊழியர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்திலும் ஆராய்ந்து கவனம் செலுத்தப்படும். நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கல்வித்துறை வளர்ச்சியை சமப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்பும் உறுதிப்படுத்தப்படும். கட்சி பேதமற்ற வகையில் எமது சேவை சகலருக்கும் போய்ச் சேரும் என்பது உறுதியாகும். எனவே, இவ்வாறான குறைபாடுகள் நீங்கப்பெற்று நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பொதுமக்களாகிய உங்களது ஆதரவை கோருகின்றேன். அன்னப்பறவை சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுமாறும் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். எனது இராணுவ சேவையின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினேன். அதேபோல் தற்போது என்னால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வெற்றி பெற்றதும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும்- ஜெனரல் பொன்சேகா"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates