jkr

தன்னிகரற்ற கவிஞன் 'மகாகவி' சுப்பிரமணிய பாரதியார் : 11/12/2009.அவரது 127ஆவது ஜனன தினம்


காத்திரமான எழுத்தினால் சமுதாயத்தைச் சிறப்பாக சீர்திருத்த முடியும் என்பதையும் சீரிய கையாள்கைத் திறன் மொழியாற்றலுக்கு அவசியம் என்பதையும் உலகுக்கு பறைசாற்றிய கவித்தலைவன் பாரதி. எத்தனையோ கவிஞர்களுக்கு மத்தியில் மகாகவி என போற்றப்பட்ட பாரதியின் 127ஆவது ஜனன தினம் இன்றாகும்.

நல்ல கவிஞன் அனைத்திலும் அழகைக் காண்கின்றான். தன் உடல், உயிர், உணர்வுகள் அனைத்திலும் கவித்துவத்தை விதைக்கின்றான். தன் நடைமுறைகள், அனுபவங்கள், காட்சிகள், கருத்துக்கள், மாற்றங்கள் எல்லாவற்றிலும் கவிதை பின்னிப்பிணைந்துள்ளதாக நினைக்கிறான்.ஆம்! சாதாரண பாரதி மகாகவியாவதற்கும் அவரது இந்த நினைப்புத்தான் காரணம்.

கவிதை பற்றி அவர் கூறுகையில், "கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி" என்கிறார்.

சுப்பிரமணியன் என இயற்பெயர் கொண்ட பாரதியார், 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி எட்டையபுரத்தில் பிறந்தார். பாடசாலை செல்லும் காலத்திலேயே கவிதைகளில் அதீத ஆர்வம் கொண்டிருந்த பாரதி தமிழ் மொழியைத் தம் உயிரினும் மேலாக மதித்தார்.

வறுமையின் சோதனைகளிலும் கூட, கவியில் புதுமையைக் கற்கும் சுப்பிரமணியனின் தாகம் தீரவில்லை. 1897ஆம் ஆண்டு செல்லம்மாவை தன் மனைவியாக்கிக் கொண்ட போதிலும் உலகம் தொடர்பான தேடலில் இவர் பின்னிற்கவில்லை.

ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்ச், சமஸ்கிருதம், வங்காளம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்த மகாகவி, புரட்சி மிக்க சிந்தனைமிக்கவராக இருந்தார். இந்தச் சிந்தனையும் முயற்சியும் தான் அவரது கவிதைகளில் வீரத்தை விதைத்தன என்று கூறலாம்.

விடுதலை வீரர்

ஒரு கவிஞனாக, எழுத்தாளனாக, பத்திரிகை ஆசிரியராக, சமூக சேவகராக, சீர்திருத்தவாதியாக பல்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்திய பாரதி, விடுதலை வீரராகவும் திகழ்ந்தார். இவரது திறமைக்காகவே எட்டையபுர சமஸ்தானம் பாரதி எனும் பட்டம் வழங்கி இவரைக் கௌரவித்தது. உணர்வுகளுக்கு வலிமை இருக்கிறது. அந்த உணர்வுகளைத் தூண்டினால் எண்ணங்கள் சிந்தனையூடாக அது செயல்வடிவம் பெறும் என்ற பேருண்மையை யதார்த்தமாக்கிக் காட்டிய பாரதியின் சேவையை எழுத்தில் வடிப்பது சற்றுக் கடினம் தான்.

பெண்கள் மீது அதீத பற்று

சிறந்த இலக்கியவாதிக்குரிய பண்புகளைக் கொண்டிருந்த பாரதியார் பெண்கள் மீது அதீத பற்றும் மதிப்பும் கொண்டிருந்தார். பெண்களை அடிமையாக்குதல், வதைத்தல், சீதனக்கொடுமை ஆகியவற்றுக்கு எதிராக மனதைத் தொடும் வீர வசனங்கள் எழுதி புரட்சிக் கவியானார் பாரதி.

பெண்களை மதிக்கும்காலம் என்று வருகிறதோ அன்று நாட்டிலும் நிச்சயம் விடிவுபிறக்கும் எனக் கனவு கண்டார்.

"ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்

றெண்ணியிருந்தவர் மாய்ந்துவிட்டார்

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற

விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்" என விடுதலையின் பின்னர் சந்தோஷமாகப் பாடுமாறு பெண்களிடம் கவிக்கோரிக்கை விடுத்தார்.

சாதியம் வேண்டாம்... பயம் என்பது கூடாது... அது எமது இலட்சியத்தை சிதைத்துவிடும் எனப் பல வழிகளிலும் உலகுக்கு உரைத்த பாரதி, விடுதலைப் போராட்டக் காலங்களில் புரட்சிக் கவிகளைப் புனைந்து எழுச்சியூட்டியதை நினைவுபடுத்தத்தான் வேண்டும்.

"அச்சமில்லை அச்சமில்லை…" போன்ற பாடல்களை அனைவர் மனதிலும் ஒலிக்கச்செய்து தைரியம் ஊட்டியவர் மகா கவி. அதுதவிர தமிழ்மொழியின் சிறப்பினை வெளிக்கொணர்வதிலும் அவர் என்றுமே பின்னிற்கவில்லை. முறையான இலக்கணங்களோடு தனக்கே உரிய பாணியில் அவர் வரைந்த தமிழ்க் கவிகளுக்கு நிகரானவை உலகில் எவையுமில்லை. அன்னை பராசக்தியிடம் தீராத பக்திகொண்ட மகாகவி அன்னையை நோக்கிப் பாடிய உணர்வுமிகு பாடல்கள் இன்றும் பக்தியோடு அனைவராலும் பாடப்படுகின்றன என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

"சிந்தை தெளிவாக்கு – அல்லால்

இதைச் செத்த உடலாக்கு

புந்தத்தை நீக்கிவிடு – அல்லால்

உயிர் பாரத்தை போக்கிவிடு" போன்ற வரிகள் நிலையாமையையும் இறையன்பையும் வெளிப்படுத்தி நிற்கின்றன.

காதல் பாடல்கள்

"சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா

சூரிய சந்திரரோ

வட்டக் கருவிழியோ கண்ணம்மா

வானம் கருமைகொள்ளோ" என அழகுநடையில் கவிதையில் கையாண்ட பெருமையும் அவரையே சாரும்.

பாரதியார் பல சஞ்சிகைகளில் எழுதிய கவிதைகள் மக்கள் மனதில் நம்பிக்கை நாற்றுக்களாக விதைக்கப்பட்டன. குறிப்பாக தேசபக்திக் கவிதைகளும் விடுதலைக் கவிதைகளும் படிப்போரை வியக்கச் செய்ததுடன் உள்ளுணர்வையும் தூண்டிவிடக் கூடியவை

. புரட்சிமிகு காலத்தில் தனது தனித்துவமான போக்கையும் கொள்கையையும் கடைப்பிடித்த பாரதியின் தைரியம் நிறைந்த உருவமும் கண்ணியமான பார்வையும் எத்தனை காலங்கள் கடந்தாலும் கண்களில் நிறைந்திருக்கும் என்பதே உண்மை.

திறமைக்கு வறுமை ஒரு கட்டுப்பாடல்ல என்பது பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக இருக்கின்றது. அவரது வாழ்க்கை, நடைமுறை, பெண்களை மதிக்கும் தன்மை, அடக்கம், அறிவாற்றல் உள்ளிட்ட பல குணாதிசயங்களை உதாரணமாகக் கொள்ளுதல், நம் வாழ்க்கைக்கு நல்வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

அழுதுகொண்டு பிறக்கிறோம், வேதனையோடு வாழ்கிறோம், ஏக்கங்களோடு இறக்கிறோம் என்றில்லாமல் சாதிக்கப் பிறந்து தன் வாழ்க்கையைச் சாதனைச் சரிதமாக மாற்றியமைத்த கவி சான்றோனின் வீரத்தையும் வரலாற்றையும் இன்று மட்டுமல்ல, எந்நாளும் எம் உள்ளத்தில் நினைவுகூர்வோம். இராமானுஜம் நிர்ஷன்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தன்னிகரற்ற கவிஞன் 'மகாகவி' சுப்பிரமணிய பாரதியார் : 11/12/2009.அவரது 127ஆவது ஜனன தினம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates