jkr

15 வருடங்களாக வெளிநாட்டில் இருந்தவர் எனக்கு பயிற்சி வழங்கியதாக கூறுவது நகைப்பிற்குரியது- ஜெனரல் சரத் பொன்சேகா


தேசப்பற்றாளராகவும், சிறந்த இராணுவத் தளபதியாகவும் என்னை புகழ்ந்தவர்கள் இன்று தேசத்துரோகியென சேறுபூசுகின்றனர் என்று ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பதினைந்து வருடங்களாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தங்கியிருந்தவர் இன்று எனக்கு இராணுவத்தில் பயிற்சி வழங்கினார் என்று தெரிவித்திருப்பது நகைப்புக்குரியதாகுமென்றும் அவர் கூறினார். பிட்ட கோட்டே சோலீஸ் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜே.வி.பி.யினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்திஜீவிகளுடனான சந்திப்பின் போதே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:

யுத்தத்திற்கு அஞ்சி வெளிநாட்டுக்கு ஓடிச் சென்று அங்கு கணனி இயக்குநராக பணிபுரிந்து விட்டு இன்று நாடு திரும்பியவர் எனக்கு இராணுவத் தளபதி பதவியை பெற்றுக் கொடுத்ததாகவும் பயிற்சிகளை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான கணனி இயக்குநர்களுக்கு இராணுவத்தில் கோப்ரல் பதவி மட்டுமே வழங்கப்படும்.இவ்வாறான ஒருவர் எனக்கு பயிற்சி அளித்ததாக கூறுகிறார். அத்தோடு, நான் ஓய்வு பெறவிருந்த போது எனக்கு இராணுவத் தளபதி பதவி வழங்கப்பட்டதாகவும் தற்போது பொய்யான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இராணுவத் தளபதி பதவி எனக்கு வழங்கப்படும் போது ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவே ஆட்சியிலிருந்தார். அவர் அரசாங்க மற்றும் படை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதினை 58 ஆக நிர்ணயிக்கும் சட்டத்தை கொண்டு வந்தார். எனக்கு தற்போது 56 வயதாகும். எனவே, ஓய்வுபெறும் போது எனக்கு தளபதி வழங்கப்பட்டதாக கூறப்படுவதில் எதுவிதமான உண்மையும் இல்லை.

அரசாங்கம் யுத்தத்தை விற்றுப் பிழைக்கின்றது. ஆனால், எமது படையினர் அடிப்படை வசதிகளின்றி வளப் பற்றாக்குறையுடன் நெருக்கடியில் வாழ்கின்றனர். இவற்றை நீக்குவதற்கும், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதற்குமான திட்டத்தை நான் முன்வைத்தேன். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. அவ்வாறானவர்கள் இன்று கட்அவுட் அரசியல் செய்கின்றனர்.

பத்து பர்ச்சஸ் நிலம் இல்லாதவர்களுக்கு 300 ஏக்கர்களுக்கும் மேல் நிலங்கள், வளங்கள், நிறுவனங்கள் சொந்தமாகியுள்ளன. இவையெல்லாம் எங்கிருந்து கிடைத்தன?

எதிர்வரும் வாரங்களில் பல விடயங்கள் தொடர்பான உண்மைகளை நீங்களும் தெரிந்து கொள்வதற்கு ஒலிநாடாக்களை வெளியிடவுள்ளேன்.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட கனரக ஆயுதங்கள் யுத்தத்தில் பாவிக்கப்பட்டன. புதிதாக கொள்வனவு செய்யப்படவில்லை. தோட்டாக்கள் மட்டுமே கொள்வனவு செய்யப்பட்டன.

ஆனால், கனரக ஆயுதங்கள் இலவசமாகவே ஆயுதக் கம்பனிகளால் வழங்கப்பட்டன என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "15 வருடங்களாக வெளிநாட்டில் இருந்தவர் எனக்கு பயிற்சி வழங்கியதாக கூறுவது நகைப்பிற்குரியது- ஜெனரல் சரத் பொன்சேகா"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates