jkr

கூட்டுறவு பனந்தொழில் வல்லுநர் மாநாடு 2009 வெகுசிறப்பாக இடம்பெற்றது.

வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் கொத்தணிகள் சங்கங்கள் இணைந்து நடாத்திய மாபெரும் கூட்டுறவு பனந்தொழில் வல்லுநர் மாநாடு 2009 இன்றையதினம் வெகுசிறப்பாக இடம்பெற்றது.

சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுகாதார அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்ட நிலையில் பல நூற்றுக்கணக்கானோரின் பங்குபற்றுதலுடன் இன்று காலை மேற்படி மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமானது.

வீரசிங்கம் மண்டபத்திற்கு வருகை தந்த அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா நிமல்சிறிபால டி சில்வா மற்றும் ஆளுநர் சந்திரசிறி ஆகியோருக்கு மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் சிறப்பான வரவேற்பளித்தனர். வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் த.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி மாநாட்டில் வரவேற்புரையினை வலிகாமம் கொத்தணிகளின் தலைவர் சுதாகரன் நிகழ்த்தினார். யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் அவர்கள் கூட்டுறவு பனந்தொழில் வல்லுநர் மாநாட்டிற்கான சிறப்பான வாழ்த்துரையினை நிகழ்த்தியதுடன் கற்பகதருவை போற்றி ஓர் கீதமிசைத்ததும் விசேட அம்சமாகும்.

வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் கொத்தணிகள் சங்கங்கள் இணைந்து நடாத்திய மாபெரும் கூட்டுறவு பனந்தொழில் வல்லுநர் மாநாடு 2009 இல் பின்வரும் நான்கு பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.விவசாயம் கடற்றொழில் என்பன தேசிய வளங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதைப் போன்று பனை தென்னை வளங்களும் தேசிய வளமாக இருக்கவேண்டும்.

2.பனந்தொழில் வல்லுநர் சமூக பொருளாதார கலை கலாச்சார விழுமியங்கள் தனித்துவமாக பேணப்பட வேண்டும்.

3.வடக்கு கிழக்கு மாகாணத்தில் இயங்குகின்ற பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்கள் பிரதேச சங்கங்கள் மாவட்ட சங்கங்கள் சம்மேளனங்கள் என்பன இவ் அமைப்புச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான வல்லுநர்கள் அவர் சார்ந்த உறுப்பினர்கள் பணிகொள்ளப்படுவோர் உட்பட பல இலட்சத்திற்கு மேற்பட்டோரை உள்ளடக்கிய தேசிய அமைப்பு.

4.பனை தென்னை மரங்களில் இருந்து பெறப்படும் சாற்று உற்பத்தி (கள்) மதுபானம் அல்ல. அது ஒரு பாரம்பரிய ஒளடதம்.
மேற்கூறிய நான்கு விடயங்களும் பிரகடனப்படுத்தப்பட்ட போது பங்குபற்றிய அனைவரும் மண்டபம் அதிர அமைச்சரே இவற்றை நிறைவேற்றித் தாருங்கள் என முழக்கமிட்டனர்.

இன்றையமாநாட்டில் சிறப்புரையாற்றிய வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி அவர்கள் தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களுக்கு வடமாகாண சபையின் பூரண உதவியும் ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு எனத்தெரிவித்ததுடன் தானும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இணைந்து போதிய உதவிகளை வழங்கவுள்ளதுடன் வடமாகாண சபை மூலமாக பனந்தொழில் மேம்பாட்டிற்கு போதிய நிதி ஒதுக்கீடும் மேற்கொள்ளப்படும் என பலத்த கரகோசத்தின் மத்தியில் தெரிவித்தார்.

இன்றைய கூட்டுறவு பனந்தொழில் வல்லுநர் மாநாடு 2009 இல் சிறப்பு அதிதியாக பங்குகொண்ட சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் உரையாற்றுகையில் அரசாங்கத்தில் தங்கியிராது அரசாங்கத்திற்கு பாரமாயிராது சுயதொழில் என்பதனை முழு நாட்டிற்கும் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கும் வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களையும் அதன் பங்குதாரர்களையும் தான் மரியாதை செய்வதாக கூறினார். மேலும் விவசாய துறையினருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்தில் வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களையும் இணைத்துக் கொள்ள தான் நடவடிக்கை எடுப்பதாகவும் வடபகுதி மக்கள் மீது மிக அதிக கரிசனை செலுத்திவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிச்சயம் சகல உதவிகளையும் மேற்கொள்வார் எனவும் தெரிவித்தார்.

இன்றைய மாநாட்டின் பிரதம விருந்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றுகையில் மாபெரும் கூட்டுறவு பனந்தொழில் வல்லுநர் மாநாடு 2009 இல் பிரேரிக்கப்பட்ட நான்கு பிரகடனங்களும் நிறைவேற்றப்படும் என மண்டபம் அதிரும் கரகோசத்திற்கு மத்தியில் தெரிவித்தார். மேலும் வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களினால் விடுக்கப்பட்ட பத்து அம்ச கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேற்படி பிரகடனங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அனைவரது ஒத்துழைப்பினை தான் எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தபோது முழு ஒத்துழைப்பு தருகின்றோம் எமது ஆதரவு உங்களுக்கே என அனைவரும் ஒன்றுபட்ட குரலில் கோசமெழுப்பினார்கள்.

இன்றைய மாநாட்டில் முன்னாள் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் க.நடராசா வரலாற்றுக்கட்டுரையினை சமர்ப்பித்த அதேவேளை திரு.கோ.கோகுலதாசன் திரு.கி.இராஜேஸ்கண்ணன் திரு.க.தேவராசா கலாநிதி.ஜி.மிகுந்தன் திரு.மா.சின்னத்தம்பி ஆகியோரினால் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.













  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கூட்டுறவு பனந்தொழில் வல்லுநர் மாநாடு 2009 வெகுசிறப்பாக இடம்பெற்றது."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates