jkr

யாழ். மாவட்ட சுகாதார மேம்பாட்டிற்கு பாரிய உதவித் திட்டங்கள். சுகாதார அமைச்சர் நேரடியாக ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் யாழ். மாவட்டத்திற்கான பல்வேறு சுகாதார மேம்பாட்டுத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

இன்றையதினம் பகல் யாழ். போதனாவைத்தியசாலைக்கு வருகை தந்த சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோரை யாழ். சுகாதாரத்துறை அதிகாரிகள் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் ஆகியோர் வரவேற்றனர். சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட அதி நவீன எக்ஸ்ரே தொகுதியினை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்றையதினம் அங்குரார்ப்பணம் செய்து வைத்தமை விசேட அம்சமாகும்.

இதனைத்தொடர்ந்து யாழ். தாதியர் பயிற்சிக் கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி சுகாதார திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அஜித் மென்டிஸ் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் உதவிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஞானசோதி சுகாதார அமைச்சு மற்றும் திணைக்கள உயரதிகாரிகள் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய வைத்திய கலாநிதி ரவிராஜ் அவர்கள் யாழ். சுகாதார துறையின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை விரிவாக எடுத்து விளக்கினார். அவற்றில் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் பத்து நாட்களுக்காக புதிதாக அம்புலன்ஸ் வாகனம் ஒன்று யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்படும் எனத் தெரிவித்தார். மேலும் புதிதாக அமைக்கப்படவுள்ள வைத்தியசாலை கட்டடத் தொகுதியின் மாதிரியும் அங்கு காண்பிக்கப்பட்டது. மேலும் வைத்தியசாலையில் நிலவும் வெற்றிடங்கள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் ஆட்சேர்ப்புக்கள் அனைத்தும் இடம்பெற்று வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்பதுடன் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் அதன்பின்னர் சுகாதாரத்துறை பதவிகள் அனைத்தும் நிரப்படும் என உறுதியளித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் பதின்மூன்று வருடங்களுக்குப் பின்னர் தான் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளதாக தெரிவித்தார். கடந்த முறை மக்கள் பணிக்காக யாழ்ப்பாணம் வந்தபோது தற்கொலை குண்டே தனக்கு பரிசாக வழங்கப்பட்டதாக கூறினார். இது குறித்து புலிகளுடனான பேச்சுவாத்தையின்போது தான் தமிழ்ச்செல்வனிடமும் அன்ரன் பாலசிங்கத்திடமும் தெரிவித்ததது மட்டுமன்றி வடபகுதி மக்களுக்கான எனது சேவையினை தடுத்து நிறுத்த முடியாது என்பதை அவர்களிடம் தெரிவித்ததாகவும் கூறினார். மேலும் வடபகுதி சுகாதார தேவைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளதுடன் அடிக்கடி தன்னுடன் தொடர்புகொண்டு அவை குறித்த கோரிக்கைகளையும் விபரங்களையும் தெரியப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடபகுதி மக்களுக்கு கிடைத்த கொடை எனவும் புகழாரம் சூட்டினார்.

சுகாதார அமைச்சரின் இன்றைய விஜயத்தின் தொடர்ச்சியாக யாழ். மாவட்டத்திற்கு தேவையான ஒரு தொகுதி மருந்துப் பொருட்கள் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் உதவிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஞானசோதி ஆகியோரிடம் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.








  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யாழ். மாவட்ட சுகாதார மேம்பாட்டிற்கு பாரிய உதவித் திட்டங்கள். சுகாதார அமைச்சர் நேரடியாக ஆரம்பித்து வைத்தார்."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates