jkr

செய்தியறிக்கை

இராக் எண்ணெய் வயல் ஒன்று

இராக் எண்ணெய் வயல்கள் ஏலம்

இராக்கில் இதுவரை பெற்றோலியம் எடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படாத எண்ணெய் வயல்கள் பல்வேறுபட்ட நிறுவனங்களுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

பெரிய விலைக்கு ஏலத்தில் விடப்பட்ட தெற்கு இராக்கின் மஜ்னூண் எண்ணெய் வயலை ஷெல் நிறுவனம் பெற்றிருக்கிறது.

அருகில் உள்ள ஹல்ஃபயா எண்ணெய் வயலின் உரிமைகள் சீன அரச பெற்றோலிய நிறுவனத்தின் தலைமையிலான கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கிறது.

ஆனால் பாக்தாதுக்கும் டியாலா மாகாணத்துக்கும் அருகில் உள்ள எண்ணெய் வயல்களை எவரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

உலகில் மூன்றாவது பெரிய எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ள இராக்கிய எண்ணெய் வயல்களில் எண்ணெய் எடுக்கும் பணிகளுக்கு பாதுகாப்பு குறித்த கவலைகளே தடையாக இருக்கின்றன.


கோபன்ஹேகனில் கார்பன் குறைப்பு வரைவு ஒப்பந்தம் பிரசுரம்

உலகின் செல்வந்த நாடுகள் தாம் வெளியிடுகின்ற வெப்ப வாயுக்களின் அளவில் மேலும் பெரிய குறைப்புகளைச் செய்ய வேண்டும் என்று கோரும் ஒப்பந்தம் ஒன்றின் வரைவு கோபன்ஹேகனில் நடந்துவரும் உலக பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் அடுத்த வாரம் உலக நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும்போது அவர்களிடையிலான பேச்சுவார்த்தைக்கு இந்த ஆவணம் அடித்தளமாக அமையும்.

புவியின் வெப்பம் இரண்டு டிகிரி செல்ஷியஸ் மட்டுமே அதிகரிக்க இடம்தருவது என்பது இந்த வரைவுத் தீர்மானத்தின் நோக்கம். ஆனால் இந்த நோக்கத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எவ்வகையில் நிதி கிடைக்கும் என்பதையோ, இந்த ஒப்பந்தம் சட்டப்படி உலக நாடுகள் கடைப்பிடிக்க வேண்டிய விதியாக எப்போது மாறும் என்பதையோ இந்த வரைவு ஆவணம் விளக்கியிருக்கவில்லை.

இந்த வரைவு ஒப்பந்தம் வெளியாகியிருப்பது நல்லதொரு முன்னேற்றம் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுக்கள் வரவேற்றுள்ளன.


ஐரிஷ் பாதிரிமார் செய்த சிறார் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு போப்பாண்டவர் வருத்தம் தெரிவிப்பு

பாப்பரசர் பெனடிக்ட்
ஐரிஷ் கத்தோலிக்க சமூகத்தில் சிறார்களை பாதிரிமார் பாலியல் துஸ்பிரயோகம் செய்தது குறித்தும் அதனை கத்தோலிக்க திருச்சபை மறைக்க முயன்றமை குறித்ததும் அந்த சமூகம் வெளியிடும் கோபத்தையும், வெட்கத்தையும் புனித பாப்பரசர் பெனடிக்ட் பகிர்ந்துகொள்வதாக வத்திக்கான கூறியுள்ளது.

கடந்த மாதம் ஐரிஸ் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றினால் அவர் மன அமைதியிழந்து, சஞ்சலத்துடன் காணப்பட்டதாக, ஐரிஷ் ரோமன் கத்தோலிக்க தலைவர்களை பாப்பரசர் சந்தித்ததை அடுத்து வத்திக்கான் கூறியது.

சில கத்தோலிக்க மதகுருமார் திட்டமிட்ட வகையில் பல தசாப்தங்களாக சிறார்களை துஸ்பிரயோகம் செய்ததாகவும், அந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட சிறார்களின் நலனை விட தமது திருச்சபையின் பெயர் கெட்டுவிடாமல் இருப்பதையே ஐயர்லாந்தில் உள்ள திருச்சபையினர் பார்த்துக்கொண்டதாகவும் அந்த அறிக்கை கூறியிருந்தது.


சைப்ரஸ் முன்னாள் அதிபரின் சடலம் திருடுபோயுள்ளது

மறைந்த முன்னாள் அதிபர் டஸ்ஸோஸ் பப்பாடுபுலோஸ்
சைப்ரஸ் நாட்டின் முன்னாள் அதிபர் டஸ்ஸோஸ் பப்பாடுபுலோஸின் சடலத்தை, சவக்குழியைத் தோண்டி திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

வியாழன் இரவு நடந்திருப்பதாய்த் தெரியுமிந்த திருட்டுச் சம்பவம் வெள்ளிக்கிழமை காலைதான் தெரியவந்ததுள்ளது.

அதிபர் இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமை வரவுள்ள நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இது ஒரு மோசமான குற்றம் என்று கூறி கிரேக்க இன சைப்ரஸ் மக்களின் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிபரின் சடலத்தை யார் திருடியிருப்பார்கள் எதற்காக இதனைச் செய்திருப்பார்கள் என்பதற்கான அறிகுறி எதுவும் இதுவரை தென்படவில்லை.

செய்தியரங்கம்
சிறார் போராளிகள் (பழைய படம்)
சிறார் போராளிகள் (பழைய படம்)

இலங்கையில் முன்னாள் சிறார் போராளிகள் 10ஆம் வகுப்பு பரீட்சைக்கு தோற்றம்

இலங்கையில் தேசிய மட்டத்தில் இன்று ஆரம்பமாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பத்திரப் பரீட்சைக்கு விடுதலைப்புலிகளின் அமைப்பில் சேர்ந்திருந்ததாகக் கூறப்படும் சரணடைந்த மாணவர்களும் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இதேவேளை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும், வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம், கனகராயன்குளம் ஆகிய பகுதிகளிலும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுகின்றார்கள்.

வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வெல்ட் கூறுகிறார்.

இதுபற்றிய மேலதிகத் தகவல்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கையின் சிறார் போராளிகள் விடுவிக்கப்பட்டு குடும்பத்துடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும்: ஐ.நா.

ஐ.நா. சின்னம்
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறார் போராளிகள் அனைவரையும் இலங்கை அரசு உடனடியாக விடுவித்து அவர்களை, அவர்களின் குடும்பத்தாருடன் ஒன்றிணைக்க வேண்டுமென்று, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா.வின் மூத்த பிரதிநிதி ஒருவர் கோரியிருக்கிறார்.

உலகின் மற்ற பகுதிகளில் இருக்கும் உதாரணங்களை வைத் துப்பார்க்கும்போது இதுபோன்ற மோதல்களில் சம்பந்தப்பட்ட சிறார்கள், தங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து வாழும்போதே, போரினால் அவர்களுக்கு உண்டான உளவியல் பாதிப்புகளில் இருந்து நல்ல முறையில் மீண்டுவருகிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக, ஐநாவின் சிறார்கள் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரத்தை கவனிக்கும் ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி ஜெனரல் பேட்ரிக் கொமேர் அவர்கள் தெரிவித்தார்.

அவருடைய ஐந்து நாள் இலங்கை பயணத்தின்போது, விடுதலைப்புலிகளால் வலுக்கட்டாயமாக படையில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டவர்களில் 300 சிறார்களை அவர் நேரில் சந்தித்து உரையாடினார்.


தெலுங்கானா தனி மாநிலம் பிரித்துக்கொடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரத்தில் ஆர்ப்பாட்டங்கள்

பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டிருந்தது
ஆந்திர மாநிலத்தை பிரிப்பது என்ற இந்திய மத்திய அரசாங்கத்தின் முடிவைக் கண்டித்து அந்த மாநிலத்தில் நடத்தப்படும் வேலை நிறுத்தத்தால் மாநிலத்தின் பல பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலத்தின் தெற்கு மற்றும் கடலோர மாவாட்டங்ககளில் வணிகங்களும், கடைகளும் மற்றும் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்ததுடன், வாகனங்கள் வீதியில் ஓடவில்லை.

ஆந்திர மாநிலத்தின் வடபகுதியைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள், மாநில அரசாங்கம் தமது பகுதியை புறக்கணித்து வந்ததாக குற்றஞ்சாட்டினார்கள்.

ஆனால், இதனுடன் முரண்படும் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான முக்கிய கட்சிகள், அதற்கான எதிர்ப்பாக இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.


'கடத்தப்பட்டிருந்த' இந்தியக் கடலோரக் காவல் படையினர் மீட்பு

இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிக்க முற்பட்ட இலங்கை மீனவர்களை தடுக்கச் சென்றபோது இலங்கை மீனவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் இந்திய கடலோரக் காவற்படையைச் சேர்ந்த இருவர் தற்போது மீட்கப்பட்டுவிட்டதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கடற்படை பேச்சாளர் கமாண்டர் பி வி சதீஷ், சென்னைக்கு கிழக்கே 200 கடல் மைல் தொலைவில் 'வின் மரைன்' என்ற மீன்பிடிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதில் இந்திய கடலோரக் காவல் படையினர் இருவர் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாத நிலையில் மீட்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

கடலோரக் காவல்படையினர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்திய கடலோரக் காவல் படை இது வரை அதிகாரபூர்வமாக விபரங்களைத் தர மறுக்கிறது.

ஆனால் இந்தியக் கடலோரக் காவல்படைனர் மீனவர்களால் கடத்தப்பட்டிருந்ததை இலங்கை மீன்வளத்துறை பிரதி அமைச்சர் உறுதி செய்திருந்தார்.

ஊடகங்களில் வருவது போல ஆட்கடத்தல் ஏதும் நடைபெறவில்லை என்றும் தகவல் தொடர்பில் ஏற்பட்ட குளறுபடிகளே இந்த பிரச்சனைக்கு காரணம் என்றும் கடலோரக் காவல் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates