jkr

யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தைச் சேர்ந்த 49 மாணவர்கள் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டு தென்னிலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தைச் சேர்ந்த 49 மாணவர்கள் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டு தென்னிலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.

தென்னிலங்கைக்கு வருகைதந்துள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்விச் சுற்றுலாவின்போது பல்வேறு சரித்திர முக்கியத்துவம்வாய்ந்த இடங்களைப் பார்வையிட்டு வருவதுடன் இலங்கையின் புதிய பாராளுமன்றத்தையும் பார்வையிட்டு அதன் செயற்பாடுகளை அவதானித்துள்ளனர்.

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஒத்தாசையுடன் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் இச்சுற்றுலாவின்போது, பல்வேறு கல்வியாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதுடன் தென்னிலங்கையிலுள்ள பிரபல்யம்வாய்ந்த விளையாட்டுக் கழகங்களுடன் சினேகிதபூர்வமான விளையாட்டுக்களில் கலந்துகொள்வதின் மூலம் இனங்களின் மத்தியில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை (01.12.2009) சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் கொழும்புப் பணிமனையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

இக்கலந்துரையாடலின் போது இச்சுற்றுலாவில் தாங்கள் பெற்ற அனுபவங்கள் மற்றும் தமது சுதந்திரமான தடைகளற்ற சுற்றுலா குறித்தும், நடப்பு அரசியல் நிலைமைகள் குறித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் மனம்விட்டு கலந்துரையாடினர். இச்சமயம் அந்த மாணவர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்பேசும் மக்களைப் பொறுத்தவரை இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பென்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை அது ஒரு சிறந்த ஆரம்பமாகுமெனத் தெரிவித்துவந்தபோதிலும், தற்போது அதுவே யதார்த்தமான உண்மையாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கை - இந்திய ஒப்பந்தமானது தமிழ்பேசும் மக்களின் இனப் பிரச்சினைகான தீர்வுக்கு சிறந்த ஒரு ஆரம்பமாகும் என்பதை இந்தியாவும் சர்வதேச சமூகமும் இன்று ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் கடந்த காலத்தில் புலித் தலைமையும் அப்போதைய தமிழ் தலைமைகளும் கண்மூடித்தனமாக எதிர்த்ததின் மூலம் அந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தத் தவறியதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தையும் கைநழுவ விட்டதின் மூலம் தமிழ்பேசும் மக்களின் சொத்தழிவுக்கும் உயிரழிவுக்கும் மட்டுமல்லாமல் இடப்பெயர்வுகளுக்கும் வழிவகுத்ததாகவும் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் சார்பில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தபோதிலும, கடந்த காலத்தில் புலித் தலைமையால் மேற்கொள்ளப்பட்ட அர்த்தமற்ற யுத்தத்திற்கு ஆதரவளித்து தமிழ்பேசும் மக்களின் அழிவுக்கு உடந்தையாக இருந்து செயற்பட்டதை அனைவரும் நன்கு அறிவார்கள் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அன்றைய தினம் ஜனாதிபதியுடன் புரிந்துணர்வுடன் கூடிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வடக்கில் உருவாகிவரும் யுத்த சூழ்நிலையை தவிர்ப்பதற்கான முயற்சிகளை மேறகொள்ளுமாறு தாம் ஆலோசனை கூறியபோதிலும், அதனைத் தட்டிக்கழித்து புலிகளின் இலக்கற்ற சுயலாபத்தை நோக்கமாக கொண்ட யுத்தத்திற்கு ஆதரவாக இருந்து செயற்பட்ட சுட்டமைப்பினர் தற்போது தமிழ்பேசும் மக்களின் அழிவுக்குப் பின்னர் ஜனாதிபதியுடனும், அரசாங்க அமைச்சர்களுடனும் பின் கதவால் சென்று பேச்சுவார்த்தை நடாத்தி அரசுக்கு ஆதரவு வழங்குவதாக கூறிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் ஏற்கனவே கடைப்பிடித்த நிலைப்பாட்டைப் பின்பற்றியிருந்தால் தமிழபேசும் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள அழிவுகளை தவிர்த்திருக்க முடியும் என்பதினை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அன்றைய தினம் எமது ஆலோசனைகளை ஏற்றுச் செயற்பட்டிருந்தால் இன்றைய அழிவுகள் ஏற்பட்டிருக்கமாட்டாது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் 20 வருடங்களுக்கு முன்பே தமிழ்பேசும் மக்களுக்கு சரியான திசைவழியைக் காட்டி வந்துள்ளோம் என்பதுடன், அதுவே சரியான மார்க்கம் என்பதினை இன்றைய சம்பவங்கள் உணர்த்தி நிற்பதாகவும் அரசியல் வேறு என்று பார்க்காமல் ஒரு நல்ல சூழலை ஏற்படுத்துவதற்கு கடந்த காலத்தில் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் தவறவிட்டமையை பார்க்கும்போது பிச்சைக்காரன் தனது புண்ணை ஆறவிடாது பாதுகாப்பது போன்றே கடந்த காலத்தின் தமிழ்த் தலைமைகளும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பங்களை தட்டிக்கழித்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இனப் பிரச்சினையைக் காரணமாகக் காட்டி தொடர்ச்சியாக தமது பாராளுமன்ற ஆசனங்களை தக்கவைத்துக்கொள்வதிலேயே குறியாக கூட்டமைப்பினர் செயற்பட்டு வந்துள்ளதையே காணமுடிவதாகவும் சுட்டிக்காட்டினார்.

புலித் தலைமை தனது வன்முறை அரசியலுக்கு பலரை பலிகொடுத்தது மட்டுமல்லாமல் பலரை பலியெடுத்தும் வந்துள்ளதாகவும், இத்தகைய நடவடிக்கைகளுக்கு கூட்டமைப்பினரும் ஒத்தாசை வழங்கிவந்ததாகக் குற்றம் சுமத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புலித் தலைமை அழிக்கப்பட்டுள்ள நிலையில் பலவீனப்பட்டுள்ள கூட்டமைப்பினர் அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதினை இன்று காணமுடிவதாகவும் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு நாட்டு மக்கள் நான்கு தேர்தல்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், உள்ளுராட்சித் தேர்தல் மற்றும் வட மாகாண சபைத் தேர்தல் என்பன நடைபெறவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த நான்கு தேர்தல்களிலும் தமிழ்பேசும் மக்கள் சரியான முடிவுகளை மேற்கொள்வதின் மூலமே, தமிழ்பேசும் மக்களின் எதிர்கால சுபீட்சமான வாழ்வுக்கு வளம் சேர்க்க முடியும் என்றும் தெரிவித்தார்.

கடந்த இரண்டாவது மகா யுத்தத்தின் போது பெரும் அழிவுகளைச் சந்தித்த ஜப்பான் இன்று உலகின் முன்னணி நாடுகளின் ஒன்றாகத் திகழ்வதினைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்பேசும் மக்கள் சரியான அரசியல் தலைமை இனங்கண்டு ஓரணியில் திரண்டால் இருபது வருடங்களில் தமிழ்பேசும் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை இரண்டு வருடங்களில் மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினை அப்போதைய தமிழ்த் தலைமைகளும் புலித் தலைமையும் ஏற்றுச் செயற்பட்டிருந்தால் நடைமுறையில் தற்போது சுயநிர்ணய உரிமையை தமிழ்பேசும் மக்கள் அனுபவித்திருக்கலாம் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 13வது திருத்தச் சட்டத்தை ஒரு நல்ல ஆரம்பமாகக் கொள்வதே தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினையின் தீர்வுக்கு நடைமுறைச்சாத்தியமான வழிமுறையாகும் என்றும் தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடனான இச்சந்திப்புக்கு பல்வேறு வேலைப்பழுக்களுக்கும் மத்தியில் நேரத்தை ஒதுக்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பல்கலைக்கழக மாணவர்களின் சார்பில் கே.ஜே.நிரோஷன் நன்றியினைத் தெரிவித்துக்கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தைச் சேர்ந்த 49 மாணவர்கள் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டு தென்னிலங்கைக்கு வருகைதந்துள்ளனர்."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates