அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் ஏ9 வீதி ஊடாக பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்த புதிய நடவடிக்கைகள்.
யாழிலிருந்து ஏ9 வீதி ஊடாக வவுனியாவிற்கும் நாட்டின் தென்பகுதிக்கும் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களின் வசதி கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் புதிய நடைமுறைகள் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பணிமனையில் இடம்பெற்ற உயர்மட்ட கூட்டம் ஒன்றிலேயே இதற்கான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயணம் ஆரம்பமாகும் யாழ். புகையிரத நிலையப் பகுதிக்கு நேற்றையதினம் அதிகாலை அமைச்சர் தேவானந்தா அவர்கள் நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்ட நிலையிலும் அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி அபிப்பிராயங்களைப் பெற்ற நிலையிலுமே இன்றைய கூட்டம் நடாத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம் சொகுசு பஸ்கள் மூலம் நேரடியாக கொழும்பிற்கு செல்லவிருப்போர் காலையில் ஆறு மணிக்கு சிங்கள மகாவித்தியாலத்திற்கும் இலங்கைப் போக்குவரத்து பஸ்கள் மூலம் நேரடியாக கொழும்பிற்கு செல்லவிருப்போர் யாழ். மத்திய பஸ் தரிப்பு நிலையத்திற்கு காலையில் ஆறு மணிக்கும் வருகைதரவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிளிநொச்சியில் கடமைபுரியும் அரச ஊழியர்களும் நேரடியாகவே யாழ். மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்க முடியும் என்பதுடன் சாவகச்சேரி கொடிகாமத்தைச் சேர்ந்த அரச ஊழியர்கள் தத்தமது இடங்களிலிருந்தே பயணத்தில் இணைந்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வவுனியாவிற்கு பயணம் செய்யவிருப்போரும் வவுனியாவிலிருந்து ஏனைய இடங்களுக்கு பயணத்தை தொடரவிருப்போரும் யாழ். புகையிரத நிலையப்பகுதிக்கு காலையில் ஆறு மணிக்கு வருகை தரவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகள் பரீட்சார்த்தமானவை என்பதுடன் திருப்தி அளிக்கும் பட்சத்தில் தொடருவதெனவும் இல்லாவிடில் பொருத்தமான மாற்றங்களை மேற்கொண்டு பிரயாண ஏற்பாடுகளை மேற்கொள்வதென்றும் இன்றைய சந்திப்பில் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இன்றைய சந்திப்பில் யாழ். நகர கட்டளை அதிகாரி கேணல் சில்வா யாழ். மாவட்ட திட்டப் பணிபாளர் பிரதீபன் இலங்கைப் போக்குவரத்து சபையின் வட பிராந்திய பிரதிப் பொது முகாமையாளர் கணேசபிள்ளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் செயலாளர் கே.தயானந்தா பொலிஸ் தலைமையக உயரதிகாரிகள் மற்றும் யாழ். வர்த்தக சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)







0 Response to "அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் ஏ9 வீதி ஊடாக பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்த புதிய நடவடிக்கைகள்."
แสดงความคิดเห็น