சிவாஜிலிங்கம் பணம் வாங்கிக்கொண்டு பேசுகிறார் : சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், அரசாங்கத்துக்கு எதிராகத் தமிழ் மக்களின் வாக்கு பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக ஒரு பகுதியினரிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக அக்கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாவிடின், தான் சுயேட்சையாகக் களமிறங்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நேற்று மீண்டும் வலியுறுத்தியிருந்தார். அவரது கருத்துக்களின் வீடியோ காட்சியினை நாம் இணைத்திருந்தோம்.
இது தொடர்பாகப் பதில் கருத்து தெரிவித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்படி குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"எமது கட்சியின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என இறுதியாக நடைபெற்ற எமது கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானித்திருந்தோம். இந்நிலையில் சிவாஜிலிங்கம் இவ்வாறு கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்களின் வாக்குகள் தமக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. அதனால் அதனை திசை திருப்புவதற்காக ஒரு பகுதியினரிடமிருந்து சிவாஜிலிங்கம் பணம் வாங்கியுள்ளார். அதற்காகவே தன்னிச்சையாக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப் போவதாக அவர் கூறி வருகிறார். எனினும் எமது கட்சியின் முடிவு அதுவல்ல" என்றார்
0 Response to "சிவாஜிலிங்கம் பணம் வாங்கிக்கொண்டு பேசுகிறார் : சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு"
แสดงความคิดเห็น