மன்னார் கோட்டை சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்படவுள்ளன: பசில் ராஜபக்ஷ

மன்னார் கோட்டை சோதனைச் சாவடியில் கடற்படையினரின் சோதனை நடவடிக்கைகளை எதிர்வரும் 10ஆம் திகதியுடன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ இன்று உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஏற்பாடு செய்திருந்த விசேட கூட்டம் இன்று சனிக்கிழமை மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவிடம் அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த உறுதிமொழியினை அவர் வழங்கியுள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதியின் பின்னர் அப்பகுதிக்கு வருகை தரும் மக்களும் பிரதேசவாசிகளும் சுதந்திரமாக நடமாட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இக்கூட்டத்தில் வடமேல் மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி உட்பட மேலும் பலர் கலந்துகொண்டனர். இதன்போது உரையாற்றிய மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், " நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மீள்குடியேற்றப் பணிகளும் துரிதகதியில் நடைபெற்றுவருவதாகவும் குறிப்பிட்டதுடன் எதிர்காலத்தில் மன்னார் மாவட்ட மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அந்நிகழ்வின் பின்னர் முக்கியஸ்தர்கள் அனைவரும் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டனர்.
0 Response to "மன்னார் கோட்டை சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்படவுள்ளன: பசில் ராஜபக்ஷ"
แสดงความคิดเห็น