jkr

யாழ். மாநகரில் வாகன தரிப்பிட மற்றும் போக்குவரத்து வீதி ஒழுங்கு விதிகள் புதிய திட்டத்தின்கீழ் கடுமையாக அமுல்நடாத்தப்படவுள்ளன.


யாழ். மாநகரில் போக்குவரத்து வீதி ஒழுங்கு சட்டவிதிகளை அமுல்நடாத்தும் பொருட்டும் சகல வாகன தரிப்பிட முறைமைகளையும் ஓர் புதிய ஒழுங்கு விதிகளின் கீழ் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசேட கூட்டமொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இன்று மாலை அவரது பணிமனையில் இடம்பெற்றது. இதில் யாழ். மாநகர பிரதி மேயர் துரைராஜா இளங்கோ றீகன் யாழ். மாநகரசபை ஆணையாளர் மு.சரவணபவ யாழ். செயலக திட்டமிடல் பணிப்பாளர் பிரதீபன் இலங்கைப்போக்குவரத்து சபையின் வடபிராந்திய உதவிப் பொது முகாமையாளர் கணேசபிள்ளை யாழ். பொலிஸ் தலைமையக பிரதம பரிசோதகர் யாழ். வர்த்தக சங்க நிர்வாகப் பிரதிநிதிகள் யாழ். மினி பஸ் சங்க தலைவர் செயலாளர் யாழ். ஓட்டோ சங்க தலைவர் செயலாளர் யாழ். மாநகரசபை உயரதிகாரிகள் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் புதிதாக அமுல்படுத்தப்படவுள்ள போக்குவரத்து ஒழுங்கு விதிகள் குறித்த விபரங்களை யாழ். மாநகரசபை பிரதம பொறியியலாளர் சிவப்பிரகாசம் உதவிப் பொறியியலாளர் கென்டசின் ஆகியோர் வரைபட உதவியுடன் வெண்திரையில் காண்பித்து தெளிவான விளக்கமளித்தனர். இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் சமூகமளித்தோரின் அபிப்பிராயங்கள் பெறப்பட்டன. அதில் வர்த்தக சங்கம் மினிபஸ் சங்கம் ஓட்டோ சங்கம் ஆகியற்றின் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்ட ஆக்கபூர்வமான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

நெருக்கடியற்ற வீதி ஒழுங்குகளை கடைப்பிடிக்கும் புதிய யாழ். நகர் ஒன்றினை கட்டியெழுப்புதல் என்ற நோக்கத்தில் புதிய திட்டங்களை அமுல்நடாத்துவதெனவும் இதற்கென்று புதிய பணியாளர்களை இணைத்து அவர்களை அடையாளம் காண்பதற்கென சீருடைகளை வழங்கி பணியில் ஈடுபடுத்துவதென்றும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கும் பொறுப்பினை யாழ். மாநகரசபையுடன் இணைந்து வழங்க யாழ். பொலிஸ் தலைமையகம் முன்வந்துள்ளதாக பிரதம பொலிஸ் பரிசோதகர் அங்கு வைத்து தெரிவித்தார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய ஒழுங்கு விதிகள் அமுல்நடாத்தப்படும் என்பதுடன் அதற்குரிய ஆரம்ப பணிகளை நாளையதினமே ஆரம்பித்து ஒரு கிழமை அல்லது பத்து நாட்களுக்குள் நிறைவேற்றுவது என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையினை யாழ். மாநகரசபை உயரதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

போக்குவரத்து வீதி ஒழுங்குகளுக்கு மேலாக ஏ9 ஊடாக பயணிகள் போக்குவரத்தினை இலகுபடுத்துதல் மற்றும் சுத்தமான அழகிய யாழ். நகர் ஒன்றினை உருவாக்குதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு அபிப்பிராயங்கள் பெறப்பட்டன.

இதுதொடர்பாக மேலும் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்லுமுகமாக மற்றுமோர் கூட்டம் ஒன்றினை நடாத்துவதெனவும் கூட்டத்தின் இறுதியில் முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யாழ். மாநகரில் வாகன தரிப்பிட மற்றும் போக்குவரத்து வீதி ஒழுங்கு விதிகள் புதிய திட்டத்தின்கீழ் கடுமையாக அமுல்நடாத்தப்படவுள்ளன."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates