jkr

வடபகுதியில் விரைவான அபிவிருத்தியை முன்னெடுக்க இலங்கை வங்கியினால் ஆரம்பிக்கப்பட்ட இளம் தொழில் முயற்சியாளர்களுக்கான வாண்மை விருத்தி செயற்றிட்டமும் பெரிதும் உதவும். - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவிப்பு.

வடபகுதி இளம் தொழில் முயற்சியாளர் வாண்மை விருத்தி பயிற்சிப் பட்டறையும் கருத்தரங்கும் இலங்கை வங்கியின் முழு அனுசரணையுடன் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.

யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இன்றைய ஆரம்ப வைபவத்தில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அதேவேளை இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் ஜே.எஸ.சி.பெர்ணான்டோ பிரதிப் பொது முகாமையாளர் ஐ.டி.வீரசேன செயற்பாட்டு முகாமையாளர் ஜே.ஜெயேந்திரா பாதுகாப்பு இயக்குனர் கேணல் பீரிஸ் வட பிராந்திய உதவிப் பொது முகாமையாளர் சீவரட்ணம் யாழ். மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றினார்கள்.

இன்றைய நிகழ்வினை வட பிராந்திய உதவிப் பொது முகாமையாளர் சீவரட்ணம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி ஆரம்பித்து வைத்ததுடன் வாழ்த்துரை வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிப்பததில் ஜனாதிபதி அவர்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றார். மேலும் இலங்கை வங்கியின் தலைவரும் இவ்விடயத்தில் கூடிய கரிசனை எடுத்து வருகின்றார். வடபகுதி இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கு மேலாக இலங்கை வங்கியினால் வாண்மை விருத்தி பயிற்சிப் பட்டறையும் கருத்தரங்கும் வழங்கப்படுவது ஆரோக்கியமானது. யாழ். மாவட்டத்தில் விரைவான அபிவிருத்தியை முன்னெடுக்கவும் கௌரவமான வாழ்க்கையினை ஏற்படுத்தவும் ஜனாதிபதி அவர்கள் பக்கபலமாக உள்ளார் எனத்தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எம்முன்னால் இரண்டு பிரச்சினைகள் காணப்பட்டன. அதில் புலிகளின் பயங்கரவாதப் பிரச்சினை முடிவிற்கு கொண்டுவரப்பட்டுவிட்டது. இதற்கு மக்களும் பெரும் தியாகம் செய்துள்ளார்கள். தற்போது ஏற்பட்டுள்ள அமைதி சந்தோசமானதாக இருக்க வேண்டும். அதற்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும். மக்களின் அடிப்படை உரிமைகளாக சுதந்திரமாக சிந்தித்தலும் வாக்களித்தலும் உள்ளன. கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்தோரே வன்முறையில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது நிலைமை அவ்வாறு இல்லை. எனவே யுத்தத்திற்கு முடிவு கண்டவரை எமக்கு கௌரவமான அரசியல் தீர்வு தர உள்ளவரை நாம் பலப்படுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் ஜே.எஸ்.சி.பெர்ணான்டோ அவர்கள் தமிழில் உரையாற்றுகையில் சிறுதொழில் பயிற்சி பெறவந்த நீங்கள் எதிர்காலத்தில் பெரும் தொழில் அதிபர்களாக மாறவேண்டும் என தான் வாழ்த்துவதாக தெரிவித்தார்.

இலங்கை வங்கியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வடபகுதி இளம் தொழில் முயற்சியாளர்களுக்கான வாண்மை விருத்தி செயற்றிட்டத்தில் முதற்கட்டமாக 150 இளைஞர் யுவதிகள் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வடபகுதியில் விரைவான அபிவிருத்தியை முன்னெடுக்க இலங்கை வங்கியினால் ஆரம்பிக்கப்பட்ட இளம் தொழில் முயற்சியாளர்களுக்கான வாண்மை விருத்தி செயற்றிட்டமும் பெரிதும் உதவும். - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவிப்பு."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates