jkr

யாழ். நகர் தாராக்குளம் வீடமைப்புத்திட்ட மக்கள் இன்று சிரமதானம். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

யாழ். நகர் மத்தியில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள தாராக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தில் குடியிருந்த பொதுமக்களை மீண்டும் அங்கு குடியமர்த்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அமைக்கப்பட்ட இவ்வீடமைப்புத்திட்டமானது கடந்தகால யுத்த நிலைமை காரணமாக பெரிதும் சேதமடைந்துள்ளதுடன் தற்சமயம் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ளடங்கியுள்ளது. இப்பகுதியின் அருகிலேயே பாதுகாப்புப் படைகளின் யாழ். சிவில் இணைப்பு அலுவலகமும் அமையப்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்த மக்கள் தம்மை மீண்டும் அங்கு குடியமர அனுமதிக்குமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேற்படி கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றையதினம் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்து விசேட கூட்டம் ஒன்றினை யாழ். நகரிலுள்ள தனது பணிமனையில் நடாத்தியதுடன் அனைவருடனும் நேரடியாகவே தாராக்குளம் வீடமைப்புப் பகுதிக்கும் விஜயம் செய்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் யாழ். பாதுகாப்பு தலைமை அதிகாரி கேணல் அலிகேவ யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மாறப்பன தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட பணிப்பாளர் மாசிலாமணி யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ யாழ். பிரதேச செயலாளர் திருமதி சுகுணா தெய்வேந்திரன் ஈபிடிபியின் யாழ். மாவட்ட பொறுப்பாளர் உதயன் ஆகியோரும் வீடமைப்புத்திட்ட மக்களுமாக அனைவரும் அங்கு சென்றிருந்தனர்.

வீடமைப்புத்திட்ட மனைகள் அனைத்தும் பெரிதும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டதுடன் அப்பகுதி புதர் மண்டியும் காணப்பட்டது. ஆயினும் அப்பிரதேசமானது கண்ணிவெடி மிதிவெடி அனைத்தும் அகற்றப்பட்ட பாதுகாப்பான நிலப்பகுதி என்பதனை பாதுகாப்பு தலைமை அதிகாரி உறுதிப்படுத்தினார். பொதுமக்கள் மீளக்குடியமர்வதற்கு பாதுகாப்பு தரப்பினர் இணக்கம் வழங்கியதை அடுத்து அனைவருடனும் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முதற்கட்டமாக தமது வீடுகள் அமைந்துள்ள அப்பகுதியை குடியிருப்பாளர்கள் துப்பரவு செய்து சுத்தப்படுத்த வேண்டும் எனக்கேட்டுக்கொண்டதுடன் கட்டம் கட்டமாக வீடுகளை திருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
39 வீட்டுமனைத் தொகுதிகள் அமையப்பெற்றுள்ள இவ்வீடமைப்புத்திட்டத்தில் வசித்த குடியிருப்பாளர்கள் இன்று அதிகாலைமுதலே சிரமதானப்பணிகளை ஆரம்பித்தனர். இன்று காலையில் அங்கு நேரடியாகவே சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிரமதானப் பணிகளைப் பார்வையிட்டதுடன் மேலதிக உதவிகள் தேவைப்பட்டால் யாழ். மாநகர சபை ஊடாக பெற்றுக்கொடுக்குமாறு அங்கு பிரசன்னமாகியிருந்த யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் இளங்கோ றீகன் ஆகியோருக்கும் பணிப்புரை வழங்கினார்.
மேற்படி தாராக்குளம் குடியேற்றத்திட்ட மக்கள் 96ம் ஆண்டு இடம்பெயர்ந்ததுடன் ஏறக்குறைய பதின்மூன்று வருடங்களின் பின்னர் மீளவும் குடியமரவுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யாழ். நகர் தாராக்குளம் வீடமைப்புத்திட்ட மக்கள் இன்று சிரமதானம். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் பார்வையிட்டார்."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates