jkr

சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பான ஐ.நாவின் கடிதத்தை அரசு பரிசீலனை


சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளரின் கடிதத்துக்கு உத்தியோகபூர்வ பதில் அனுப்புவது மற்றும் தேவையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தீர்மானிக்கும் முன்னர் அக்கடிதம் தொடர்பாக அரசாங்கம் கவனமாக பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற சரத் பொன்சேகா கடந்த 13ஆம் திகதி ‘சன்டே லீடர்’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் கூறியிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் நீதி விசாரணைக்குப் புறம்பான உடனடி மற்றும் விசாரணையின்றி மேற்கொள்ளப்படும் மரண தண்டனை விவகாரங்களுக்கு பொறுப்பான விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்டன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

சரணடைந்தவர்களைச் சுடுமாறு இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிக்குப் பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்குமாறு அக்கடிதத்தில் அவர் கேட்டிருக்கிறார்.

பாலசிங்கம் நடேசன், சீவரட்னம் புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூன்று புலி இயக்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2009 மே 17ஆம் 18ஆம் திகதி இரவு மரணமுற்ற சூழ்நிலை தொடர்பாகவே ஐக்கிய நாடுகள் சபை விசாரணை செய்கிறது.

தனக்கு கிடைத்துள்ள தகவல் மேற்குறிப்பிட்ட பேட்டியில் சரத் பொன்சேகா விடுத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாக தனது கடிதத்தில் பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நடேசன், புலித்தேவன், ரமேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உயிரிழந்த சூழ்நிலை தொடர்பாக விடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் சிலவற்றை 58 ஆவது படைப்பிரிவுடன் அப்போது இருந்து வந்த ஊடகவியலாளர்களின் கூற்றுக்கள் உறுதி செய்வதாகவும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

அனைத்து ஆயுத மோதல்களுக்கும் பொருத்தமான சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் குறிப்பாக 1949 இன் ஜெனீவா ஒப்பந்தத்தின் 5 ஆவது ஷரத்தை சுட்டிக்காட்டும் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் தனது கடிதத்தில் குற்றச்சாட்டுகளின் சரியான தன்மை பற்றி கேட்டுள்ளதுடன் அக்குற்றச்சாட்டுகள் சரியானவை அல்ல என்று கூறுமிடத்து அது பற்றிய தகவல் மற்றும் ஆவண சான்றுகளையும் கேட்டுள்ளார்.

அத்துடன் நடேசன், புலித்தேவன், மற்றும் ரமேஷின் குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பான தகவல்களும் அக்கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பான ஐ.நாவின் கடிதத்தை அரசு பரிசீலனை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates