செய்தியறிக்கை
| |
பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் |
தலிபான்களுக்கு எதிராக புதிய நடவடிக்கை - பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன்
ஆப்கானிஸ்தானுக்கு எவ்வித முன்னறிவுப்புமின்றி சென்றுள்ள பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், தலிபான்களுக்கு எதிரான புதிய நடவடிக்கை இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.
கந்தஹாரில் விமானத்தளம் ஒன்றில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் அவர்களை சந்தித்த பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், உள்ளூர் ஆட்களை பணியமர்த்துவதற்காக கர்சாய் அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார்.
தன்னுடைய பங்குக்கு, ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு கொண்டு வருவதற்காக வெளிநாட்டு துருப்பினர் காயமடைவதும், கொல்லப்படுவதும் கண்டு தான் வருந்துவதாக ஹமீது கர்சாய் கூறினார்.
தங்களிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுவதையும் இரு தலைவர்களும் மறுத்தனர்.
இதற்கு முன்னர் ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தில் நிலவும் லஞ்ச லாவண்யத்தை பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் குறை கூறியிருந்தார்.
இராக் உத்திகளைப் பயன்படுத்தினால் ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சியை தோற்கடிக்கலாம் - அமெரிக்க தளபதி
| |
இராக்கில் அமெரிக்க துருப்பினர் |
இராக்கில் பயன்படுத்தப்பட்ட உத்திகளைப் பயன்படுத்தினால் ஆஃப்கானிஸ்தானிலும் உள்நாட்டுக் கிளர்ச்சியைத் தோற்கடிக்க முடியும் என்று மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்கப் படைகளின் தளபதி ஜெனரல் டேவிட் பெட்ரேயஸ் கூறியுள்ளார்.
அமெரிக்கப் படைவீரர்கள் கிராமம் கிராமமாகச் சென்று அங்குள்ள சாதாரண மக்களிடம் இருந்து தாலிபான் அமைப்பின் கடும்போக்கு சக்திகளை தனியாகப் பிரிக்க வேண்டும் என்று ஜெனரல் கூறியுள்ளார்.
இராக்கில் 2007ஆம் ஆண்டு அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பை ஆரம்பித்துவைத்தவர் ஜெனரல் பெட்ரேயஸ்தான். அங்கு சுனி கிளர்ச்சிக்காரர்களை வெற்றி கொண்டு இராக்கில் நடந்துவந்த வகுப்புவாத வன்முறை குறைவதற்கு ஜெனரல் பெட்ரேயஸின் உத்தி வழிவகுத்தது என்று கூறப்படுகிறது.
குர்ராமில் பல ஆயுததாரிகளை கொன்றுள்ளோம் - பாகிஸ்தான் அதிகாரிகள்
| |
குர்ராம் |
பாகிஸ்தானின் குர்ராம் பழங்குடியின பகுதியில் ஆர்டிலரி மற்றும் போர் விமானங்களின் உதவியோடு படையினர் நடத்திய தாக்குதலில் குறைந்தப்பட்சம் 22 ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பகுதி ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகே உள்ளது.
இந்த தகவலை சுயாதீன முறையில் உறுதிப்படுத்த முடியாமல் இருக்கிறது. வசிரிஸ்தானினில் இருக்கின்ற குர்ராமின் தென்பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினர் பெரும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பெரும்பாலான ஆயுததாரிகள் வேறு இடங்களுக்கு சென்று விட்டதாக நம்பப்படுகிறது.
பிலிப்பைன்ஸில் இஸ்லாமிய ஆயுததாரிகள் சிறை மீது தாக்குதல்
| |
பிலிப்பைன்ஸ் |
தெற்கு பிலிப்பைன்ஸில் இஸ்லாமிய ஆயுததாரிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் சிறைச்சாலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அதிலிருந்த 30க்கும் மேற்பட்ட சிறைவாசிகளை விடுதலை செய்துள்ளனர்.
பசிலான் தீவில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த உள்ளூர் அதிகாரி ஒருவர், இசபெலா நகரத்தில் அமைந்திருந்த இந்த சிறைச்சாலைக்குள் புகுந்த 70 ஆயுததாரிகள் சிறையின் பூட்டுக்களை உடைத்து சிறைவாசிகளை விடுவித்ததாக கூறினார்.
இந்த கும்பலில் மொரா இஸ்லாமிய கிளர்ச்சி முன்ணணி மற்றும் அல் கொய்தாவுடன் தொடர்புடைய அபு சயாப் கும்பலை சேர்ந்த்வர்களும் இடம்பெற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு பாதுகாவலரும், ஒரு ஆயுததாரியும் கொல்லப்பட்டுள்ளனர்.
| |
ஜெனரல் சரத் ஃபொன்சேகா |
கோட்டாபய ராஜபக்ஷ போர் குற்றங்களுக்கு உத்தரவிட்டார் - சரத் பொன்சேகா
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டிருந்தார் என இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைவரும், வரவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களில் ஒருவருமான ஜெனரல் சரத் ஃபொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் கடந்த மேமாதம் முடிவுக்கு வந்த வேளையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டுமே ஒழிய அவர்கள் சரணடைய இடம்தரக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது பாதுகாப்புச் செயலர் கோட்டாபயதான் என்று ஜெனரல் ஃபொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.
யுத்தம் நடந்த சமயத்தில் களத்தில் நின்ற இராணுவத் தளபதிகளுடன் தொடர்பில் இருந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள் மூலம் தனக்கு இந்த விபரங்கள் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
சென்னைக்கு வரும் கிருஷ்ணா நீர் தடுத்து நிறுத்தம்
| |
ஆர்ப்பாட்டம் |
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதியை பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்குவதற்கு இந்திய நடுவணரசு ஒப்புக்கொண்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நீடித்து வருகின்றன.
இந்த நிலையில் சென்னைக்கு கிருஷ்ணா நீர் அளிக்கும் அணையின் கதவுகளை ஆர்ப்பாட்டகாரர்கள் மூடியிருக்கிறார்கள். அதே சமயம் தாங்கள் பதவி விலகுவதாக சனிக்கிழமையன்று அறிவித்த 20 அமைச்சர்கள் ஆந்திர முதல்வர் ரோசைய்யா அவர்களின் வேண்டுகோளையடுத்து தங்களது முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்துள்ளார்கள்.
தமிழகத்தை பிரிக்கும் எண்ணத்திற்கு இடமில்லை - தமிழக முதல்வர்
| |
தமிழக முதல்வர் கருணாநிதி |
தெலுங்கானா விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதி, தாமதமான முடிவும், அதை தொடர்ந்து அவசரமான முடிவையும் எடுக்க கூடாது என்பது புரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் சிலரும் தமிழகத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கூறுவது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதி, திமுகவுக்கு அப்படி ஒரு கருத்து இல்லை என்றும், தமிழக மக்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, தமிழகத்திற்கும், ஆந்திரப் பிரதேசத்திற்கும் இடையிலான போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น