புஷ்மீது ஷூ வீசியவருக்குப் பாரிஸில் பதிலடி!
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பாக்தாத் வந்தபோது அவர் மீது ஷூ வீசி உலகை அதிர வைத்த ஈராக்கிய பத்திரிக்கையாளர் முன்டாசர் அல் ஜெய்தி பாரீஸ் சென்றபோது அவர் மீது செருப்பு வீசப்பட்டது.
செவ்வாய்க்கிழமை பாரீஸ் சென்ற முன்டாசர் அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் மீதே செருப்பு வீசப்பட்டது. ஈராக்கைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரே ஜெய்தி மீது செருப்பு வீசியதாகக் கூறப்படுகிறது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தன்னை நோக்கி வந்த செருப்பு தன் மீது படாமல் குனிந்து தப்பினார் ஜெய்தி.
இந்தச் சம்பவத்தால் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் சுதாரித்துக் கொண்ட முன்டாசர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்ததை எதிர்த்துத்தான் நான் புஷ் மீது செருப்பு வீசினேன். ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்பைக் காட்டவே இவ்வாறு செய்தேன். எனது சக நாட்டவர் மீது நான் செருப்பு வீசவில்லை.
இந்த ஆக்கிரமிப்பை என்னால் தடுக்க முடியாது என எனக்குத் தெரியும். அந்த ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக இருந்தவர்கள் என்னை வறுத்தெடுத்து வருகின்றனர். இப்போது எனது 'டெக்னிக்கையே' அவர்கள் களவாடியுள்ளனர்" என்றார்
சிரித்தபடி.ஜெய்தி மீது செருப்பு வீசிய ஈராக்கிய பத்திரிக்கையாளரின் பெயர் ஷெய்ப் அல் கயத் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில்,
"தனது சொந்த புராணத்தைப் பாடிக் கொண்டிருந்ததால் ஜெய்தி மீது எனக்குக் கோபம் வந்தது. இதனால்தான் எனது செருப்பைக் கழற்றி வீசினேன். ஜெய்தியின் செயலால், அரபு மக்களுக்கும் ஈராக்கிய பத்திரிக்கையாளர்களுக்கும் பெருத்த அவமானம் ஏற்பட்டு விட்டது. ஒரு பத்திரிக்கையாளர் செய்யும் செயல் அல்ல ஜெய்தி செய்தது" என்றார் கயத்.
புஷ் மீது செருப்பு வீசி கைதான ஜெய்தி கடந்த செப்டம்பரில் விடுதலையானார். அவருக்கு முதலில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவரது நன்னடத்தை காரணமாக விரைவிலேயே விடுவிக்கப்பட்டு விட்டார்.
கடந்த ஆண்டு தனது பதவிக்காலத்தின் இறுதியில், புஷ், பாக்தாத் சென்ற போது செய்தியாளர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்த ஜெய்தி புஷ்மீது ஷூவை வீசியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
0 Response to "புஷ்மீது ஷூ வீசியவருக்குப் பாரிஸில் பதிலடி!"
แสดงความคิดเห็น